இங்கிலாந்தின் ஆட்சி மொழியாக மாத்திரம் ஆரம்பத்தில் விளங்கிய ஆங்கிலம் பிற்காலத்தில் உலகளாவிய அளவில் வணிக மொழியாக புகுந்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று சர்வதேச மொழியாக பரிணமித்துள்ளது.
ஆங்கிலம் கற்காத கல்வி கல்வியல்ல, ஆங்கிலம் தெரியாதோர் அறிவுள்ளவரல்லர் என்ற நிலையை ஏற்படுத்தும் அளவிற்கு இன்று ஆங்கிலத்தின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் உள்ளது. கல்வி நிலையிலும் சரி, தொழில் நிலையிலும் சரி, அரசியல் நிலையிலும் சரி தாய்மொழியை வீழ்த்தும் அளவிற்கு ஆங்கிலம் காணப்படுகின்றது. இது ஒருவகையில் வரவேற்க வேண்டிய விடயமே. ஏனெனில் உலகின் மிக விரைவான தொடர்பாடல், அபிவிருத்தியுடன் நாமும் பங்கெடுப்பதற்கு அதனோடு சேர்ந்து நாம் செயற்பட வேண்டும். ஆகவே அதற்கான ஊடகமாக விளங்கும் ஆங்கிலம் இன்றைய சமுதாயத்திற்கு அவசியமானதொன்றாக விளங்குகின்றது.
இலங்கையை பொறுத்தமட்டில் ஆங்கிலேயரின் ஆட்சியைத் தொடர்ந்தும் ஆங்கிலக்கல்வியானது தொடர்ந்தபோதும் நீண்டகாலமாக அது வெறுமனே பாடப்பரப்புகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டே இருந்தது. இந்நிலை 21ம் நுாற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மாற்றத்திற்கு உள்ளானது. ஆங்கிலத்தை ஒரு மொழி மூலமாக கொண்டு கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை இலங்கை கல்வி அமைச்சு பாடசாலைகளில் ஆரம்பித்தது. இது 2002ல் இலங்கையின் கல்வி துறையின் முக்கிய மாவட்டமாக கருதப்படும் யாழ்ப்பாணத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் சென் பற்றிக்ஸ் கல்லுாரியில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 2003ல் தேசிய பாடசாலைகளில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் ஆங்கில மொழி மூல கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் தரம் 06 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சராசரியாக 300 மாணவர்களை கொண்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் தரம் 06 வகுப்பு பிரிவில் ஆங்கில மொழி மூல மாணவர்கள் 2003ல் 36 பேர் இருந்தனர்.
இது பற்றி யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் அதிபர் திரு.வீ.கணேசராஜா அவர்கள் கருத்து தெரிவித்த போது, 2002ம் ஆண்டில் கௌரவ திரு.கருணாசேன கொடித்துவக்கு அவர்கள் கல்வி அமைச்சராவும், திருமதி Dr. தாரா டீ மெல் அவர்கள் அமைச்சின் செயலாளராகவும் இருந்த போது இலங்கையில் ஆங்கில மொழி மூல கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இது அடுத்த ஆண்டிலிருந்தே எமது கல்லுாரியில் தரம் 06 மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இரண்டு பிரிவுகளில் தரம் 06 முதல் உயர்தரம் வரை கற்றல் செயற்பாடுகள் ஆங்கிலத்தை மொழி மூலமாக கொண்டு நடைபெறுவதாகவும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பதாகவும் தெரிவித்தார். இதுபற்றியதாக மாணவர்கள் சார்பில் கருத்து தெரிவித்த 2011 உயிரியல் பிரிவு மாணவன் அஜலக்ஸன் குறிப்பிடுகையில், ஆரம்பத்தில் தாம் ஏதேச்சையாக இந்த ஆங்கில மொழிமூலத்தை தெரிவு செய்ய நேர்ந்ததாகவும் பின்னர் அதனை முழு மனதுடன் ஏற்று கல்வியை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். தமக்கு திறமையான ஆசிரியர்கள் பலர் கற்பித்தலில் ஈடுபட்டனர் என்றும் சகல உதவிகளையும் அவர்கள் வழங்கினர் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆசிரியர்கள் சார்பில் யாழ் இந்துக்கல்லுாரியின் ஆசிரியர் திரு.S.சிறீக்குமார் அவர்கள் கூறும் போது, தற்போதைய மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் ஆரம்பக்கல்வியை தமிழ் மொழி மூலத்தில் கற்றிருப்பதனால் ஆங்கில மொழி மூலத்தை தரம் 06ல் அணுகும் போது சில கஸ்டங்களை ஆரம்பத்தில் எதிர்கொள்கின்றனர். இருப்பினும் தரம் 08 ல் கல்வியை தொடரும் போது அக் கஸ்டங்கள் நீங்கி சிறந்த ஆங்கில அறிவினை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர் என்று தெரிவித்தார். ஆங்கிலம் என்பது சர்வதேச தொடர்பாடல் மொழியாக இருப்பதனால் இவ் ஆங்கில மொழி மூல கற்றலானது சிறப்பான ஆங்கில அறிவை மாணவர்களுக்கு வழங்குவதால் அவர்களின் எதிர்காலம் மிக பிரகாசமாக அமையும் என மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் முதலாவது தொகுதி ஆங்கில மொழிமூல மாணவர்கள் கடந்த 2009ல் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி அனைத்து மாணவர்களும் சித்தியடைந்ததாக அதிபர் பெருமிதம் கொண்டார்.
இவர்களில் 12 மாணவர்கள் உயிரியல் பிரிவிலும் 24 மாணவர்கள் கணிதப்பிரிவிலும் உயர்தர கல்வியை கற்று வருவதாகவும் அவர்கள் தமது க.பொ.த உயர்தர பரீட்சையை 2011 ஆகஸ்டில் எழுத உள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி மூல மாணவர்களின் முடிவுகளின் தொகுப்பு கீழே.
பாடங்கள் | A தரம் | B தரம் | C தரம் | S&W தரங்கள் |
சமயம் | 42 | - | 01 | - |
தமிழ் | 28 | 12 | 03 | - |
ஆங்கிலம் | 43 | - | - | - |
விஞ்ஞானம் | 27 | 05 | 11 | - |
கணிதம் | 42 | 01 | - | - |
வரலாறு | 24 | 07 | 10 | - |
ஏனையவை | 68 | 23 | 27 | 11 (S) |
· தோற்றியோர்- 43 மாணவர்கள் 9A தரம்- 06 மாணவர்கள்
பாடசாலையின் ஆசிரிய வளங்கள் மற்றும் ஏனைய வளங்கள் பற்றி கருத்து தெரிவித்த அதிபர், அமைச்சு ரீதியிலும் பழைய மாணவர்கள் சார்பிலும் ஆங்கில மொழி மூல கல்விக்கான வளங்கள் சிறப்பாக கல்லுாரிக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். அண்மையில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினர் ரூபா 50 இலட்சம் பெறுமதியான நுால்களை பாடசாலைக்கு வழங்கியிருப்பதாகவும் அவை மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு ஆசிரியர் நிலைவரம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், இந்துக்கல்லுாரியில் ஆங்கில மொழி பட்டதாரிகளே ஆங்கில மொழி மூல கற்பித்தலில் ஈடுபடுவதாகவும் அவர்களோடு இலங்கை கல்வியியல் கல்லுாரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இவர்கள் தமது ஆங்கில அறிவு,மற்றும் கற்பித்தல் அனுபவங்களை கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கற்பித்தலை மேற்கொள்வதாகவும் இதனால் ஆங்கில மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறை என்பது யாழ் இந்துக்கல்லுாரியில் இல்லை என்றும் தெரிவித்தார். எனினும் பாடநுால்கள் சரியான முறையில் கிடைக்கத் தவறுகின்றன என்றும் அதிலும் பாடப்பரப்புகள் மாறும் போது நுால்களின் கையிருப்பு போதுமானதாக இருப்பதில்லை என்றும் தெரிவித்தார். இது பற்றி தாம் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசும் போது அச்சடிக்கப்பட்ட நுால்களின் இருப்பு முடிந்து விட்டதாகவும் புதியதாக அச்சடிக்கப்பட்டதும் அனுப்பிவைப்பதாக அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற கருத்தையே ஆசிரியர் திரு.S.சிறீக்குமார் அவர்களும் முன்வைத்தார். வட பகுதி மாணவர்களுக்கும் தென் பகுதி மாணவர்களுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆங்கில மொழி மூல கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தன் பங்கை சிறப்பாக செய்வதாகவும் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்குவதாகவும் தெரிவித்தார். தான் உட்பட 20 ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு கருத்தரங்குகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு வெளிநாட்டு விரிவுரையாளர்கள் தேவையான வழிகாட்டல்களை தந்ததாகவும் தருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
மாதிரி கற்பித்தல் செயற்பாடு
மறுமுனையில் யாழில் பிரபல மகளிர் கல்லுாரிகளில் ஒன்றான வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 2004ல் ஆங்கில மொழி மூல கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதனை குறுகிய எண்ணிக்கையிலான மாணவிகளே தொடர்ந்ததாகவும் இப்போது 3 பிரிவுகளில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கல்லுாரியின் அதிபர் திருமதி.K.பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார். அவர் ஆங்கில மொழி மூல கற்கைநெறிக்கு தேவையான ஆசிரியர் வளம் மற்றும் ஏனைய வளங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆசிரிய வளம் என்பது போதிய அளவில் இல்லை என்றும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களே ஆங்கில மொழி மூல கற்பித்தலையும் மேற்கொள்வதாகவும் போதிய அனுபவம் இன்மையால் தமிழிலேயே தமது குறிப்புகளை வழங்குகின்றனர் என்று தெரிவித்தார். இருந்தும் கல்வியியல் கல்லுாரிகளில் கற்பித்தல் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்கள் தமது கற்பித்தலை சிறப்பாக செய்வதாகவும் பாராட்டினார். அத்தோடு போதிய நுாலக வசதிகள் இருக்கின்றது என்றும் ஆயினும் தேசிய பாடசாலைகளுக்கென்று வருடாந்தம் நுாலக பயன்பாட்டுக்கென கல்வி அமைச்சு ஒதுக்கும் நிதி போதுமானதாக இருப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும் அசாதாரண சூழலிலும் சிறப்பாக கற்கும் மாணவியரின் திறமைகளை பாராட்டிய அவர் கடந்த 2010 ம் ஆண்டின் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 34 மாணவியர் ஆங்கில மொழிமூலத்தில் தோற்றி அனைவரும் சித்தியடைந்து இருப்பதோடு அவர்கள் தற்போது உயர்தரத்திலும் ஆங்கில மொழிமூலத்தில் கல்வி கற்பதாக குறிப்பிட்டார். அக்கல்லுாரியின் க.பொ.த. சாதாரண தர பரீட்சை-2010 ஆங்கில மொழி மூல பரீட்சை முடிவுகளின் தொகுப்பு கீழே..
பாடங்கள் | A தரம் | B தரம் | C தரம் | S&W தரங்கள் |
சமயம் | 34 | - | - | - |
தமிழ் | 32 | 02 | - | - |
ஆங்கிலம் | 34 | - | - | - |
விஞ்ஞானம் | 21 | 03 | 09 | 01 (S) |
கணிதம் | 34 | - | - | - |
வரலாறு | 13 | 08 | 12 | 01 (S) |
ஏனையவை | 55 | 24 | 14 | 09 (S&W) |
09 A | 08 A | 07 A |
03 | 10 | 06 |
இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி மூல கல்வி மீதான ஆர்வம் சிறப்பாக உள்ளது என்பது தெளிவாக புலப்படுகின்றது. இது பற்றி மாணவன் அஜலக்ஸன் குறிப்பிடுகையில், தாம் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இருக்கும் போது தம் கற்றல் செயற்பாடுகளிற்கு இப்போது தாம் பெற்றுள்ள இவ் ஆங்கில மொழி மூல அறிவும் அனுபவமும் உதவும் என்றும், தரம் 11ல் இருந்த போது இருந்த ஆங்கில மொழி அறிவு இப்போது தரம் 13ல் இருக்கையில் மேலும் அதிகரித்து உள்ளது என்றும் இதனால் எதிர்காலத்தில் உயர்கல்வி பற்றிய பயம் தனக்கும், தன் போன்ற மாணவர்களுக்கும் ஏற்படாது என்றும் தெரிவித்தார். அத்தோடு தம் ஆசிரியர்கள் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போது ஆங்கில அறிவு போதியளவில் இல்லாததால் அவர்கள் எதிர்கொண்ட அவஸ்தைகளை குறிப்பிட்டு அறிவுரைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இவை அனைத்தையும் ஓரிடத்தில் வைத்து நோக்குமிடத்து யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்தத்தினால் சரிந்த நிலையில் இருக்கும் கல்வி சமுதாயத்தை மீள கட்டி எழுப்புவதில் ஆங்கில மொழி மூல கல்வியானது முக்கிய இடம் வகிக்கும் என்பதுடன் சர்வதேச தரம் வாய்ந்த மாணவர்களை யாழ் மண்ணானது தொடர்ந்தும் வழங்கும் என்பதும் தெளிவாக புலப்படுகின்றது. அதற்கு யாழ் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பாடசாலைகள் தயாராக இருக்கின்றன என்பது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் தமிழ் மொழியின் மீதான அதீத பற்றும்,விருப்பமும் ஆங்கில மொழி மூல கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. இந்நிலை ஆரம்பத்தில் இருந்த போதும் இது தற்போது ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. சமயம்,தமிழ்,வரலாறு,குடியுரிமை முதலிய பாடங்கள் தமிழிலேயே கற்பிக்கப்படுவதனால் தமிழும் பாதுகாக்கப்படுகின்றது. இதனால் இதர காரணிகளை காரணமாக வைத்து இவ் கல்வி முறையை கட்டுப்படுத்துவதை விட அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வது உசிதமானது என்று ஆசிரியர் திரு.S.சிறீக்குமார் அவர்கள் தெரிவித்தார். அத்தோடு இக்கல்வி முறையினால் மாணவர்கள் மத்தியில் தேடல் அதிகரித்து இருப்பதாகவும் பாடங்கள் சம்பந்தமான தரவுகளை இணையங்களில் தேடி எடுத்து படிப்பதாகவும் அவற்றை சேகரித்து வைப்பதனை பழக்கப்படுத்துவதாவும் இது எதிர்காலத்தின் சிறந்த சந்ததியினரை இப்பொழுதே காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆரம்பத்தில் யாழ் நகர பாடசாலைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இவ் ஆங்கில மொழி மூல கல்வியானது இப்பொழுது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி,தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என அனைத்து பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
இருப்பினும் வளங்கள் தொடர்பாக நிலவும் பற்றாக்குறைத் தன்மையானது பெரும் தாக்கத்தினை இக்கல்வியில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் இலங்கையில் இருக்கும் கல்வியலாளர்களும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் கல்வியலாளர்களும் இம் மாணவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதும் எதிர்கால மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது. ஆகவே ஒரு சர்வதேச தரத்திலான கல்வி சமுதாயத்தை யாழ்ப்பாண மண்ணில் கட்டியெழுப்புவதில் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் என்பது எம் அனைவரினதும் கடப்பாடாகும்.
குறிப்பு :- யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் கற்று வரும் நான், செயற்றிட்டம் ஒன்றிற்காக எழுதிய ஆக்கத்தினை பதிவாக்குகின்றேன்.. நல்ல விடயம் உலகறிய வேண்டும் என்பதற்காக..
பதிவிலொரு பாடல்..
இப்பதிவில் அறிமுகமாகும் இப்பகுதி தொடர்ந்தும் வரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம்.. இது பலரால் மறக்கப்பட்ட பாடல்களை மீள ஞாபகமூட்டும் என எண்ணுகின்றேன்..
கவிதாலயாவின் தாயாரிப்பில் 1988ல் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த “உன்னால் முடியும் தம்பி” திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் S.P.பாலசுப்பிரமணியம் பாடிய வாலியின் வரிகளில் அமைந்த பாடல் இப்பதிவில்..
“வானம் உங்கள் கைகளில் உண்டு..ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு..
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்..”
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,
பல விடயங்களைத் தெளிவாக்கியுள்ளீர்கள்..
நன்றி அண்ணா..