எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Tuesday, July 12, 2011

கவிதையும் கவிதை சார்ந்த இடமும்…வைரமுத்து

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
கடலில்தான் முத்து கிடைக்குமாம்..! ஆனால் மழை வேண்டி வானம் பார்த்திருக்கும் தேனி மாவட்டத்திலும் ஒரு முத்து கிடைத்தது. ஆம் இரு விலையுயர்ந்த கற்கள் ஒன்றாக சேர்ந்து வடுகபட்டியில் வைரமுத்தானது. பாரதிக்கு பின் தமிழை நேசித்த கவிஞனும் இவரே, தமிழ் நேசித்த கவிஞரும் இவரே..


அவரின் சமூகச் சூழல், வாழ்க்கை கோலம், சிந்திய வியர்வை,ரத்தம் என்பன சேர்ந்து ஒரு கவிஞனாக இவரை மாற்றிப்போட்டது. தமிழ் கவிதை உலகிலே தன் பத்தொன்பதாவது வயதில் “வைகறை மேகங்கள்” ஊடாக கால்பதித்தார். தொடர்ந்து இவர் எழுதிய “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” இவரின் வாழ்க்கை பாதையையே திருப்பிப் போட்டது எனலாம். ஆம், இந்த கவிதை நுால் தான் வைரமுத்துவை பாரதிராஜாவுக்கு அடையாளம் காட்டி நின்றது. பாரதிராஜா 1980ல் தயாரித்த நிழல்கள் திரைப்படத்தில் கன்னிப்பாடல் எழுதினார் வைரமுத்து. இப்பாடலை எழுதிய போதுதான் அவருக்கு முதல் மகன் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று எழுத ஆரம்பித்த இவரது பேனா இன்று 60000 பாடல்களை கடந்தும் எழுதிக்கொண்டே இருக்கின்றது.. தொடர்ந்தும் எழுதும்.

தமிழ் மொழியை உலகளவில் கொண்டு செல்வதில் இவரின் கவிவரிகளுக்கும் முக்கிய இடமுண்டு. பூங்காற்று திரும்புமா என்ற கேள்வியில்  தேசிய விருது என்ற முதல் மரியாதையை பெற்றுக்கொண்ட கவிபேரரசு தொடர்ந்து சின்ன சின்ன ஆசைகளை முதல் முறை கிள்ளிப்பார்த்து போறாளே பொன்னுத்தாயி என தெய்வம் தந்த பூவாகிய கள்ளிக்காட்டில் பொறந்த தாயை தன் அன்பில் ஊறிய தமிழில் பாட மீண்டும் மீண்டும் என 6 தடவைகள் தேசிய விருதுகள் இவரை கௌரவித்தன…இல்லை இவரால் கௌரவிக்கப்பட்டன.

இன்றைய பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு அவர்களுக்கு நான் எழுதும் இந்த வாழ்த்துப்பதிவு சற்று வித்தியாசமானது. இவரின் பாடல்களை மட்டும் இப்பதிவு பாடி நிற்கப்போவதில்லை. இவரின் கவிதைகள், இவருக்கான கௌரவங்கள் என்பவற்றையும் பேசி நிற்கவுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறை கடக்க இருக்கும் இவரின் பாடல்கள் பல்வேறுபட்ட மாற்றங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. 35 வருடங்களில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்கள் இவரின் கவிதைகளுக்கும் மாற்றங்கள் கொடுத்தன. ஆனால் இவரை திரையுலகில் இருந்து மாற்றவில்லை. ஏனெனில் இவரின்றி எங்கே தமிழ் பாடல்களை படைப்பது..?

58வது வயதில் கால் பதிக்கும் இவரிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் அவரின் பதில் இப்படி இருக்கும்.. 
“58 என்று என் ஜாதகம் சொல்லுகிறது.. ஆனால் 28 தெரிகிறது என்று உடல் சொல்லுகிறது. ஆனால் 18ல் இருப்பதாக மனசு சொல்லுகிறது..” என்பார்.

உண்மைதான் மனது 18 வயதில் இருந்தால் தான் காதல் கவிதைகள் கற்பனைகளை கிழித்துக்கொண்டு வரும். இவரும் ஒரு காதலன் தான். தன் அன்பு மனையாளான பொன்மணி வைரமுத்து அவர்களை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கபிலன், மதன் கார்க்கி என இரு பெயர் சொல்லும் புதல்வர்கள்.

இன்று வரை கவிஞர் அவர்கள் 14 கவிதை தொகுப்புகளை படைத்துள்ளார். அவையாவன,
 • வைகறை மேகங்கள்,
 • சிகரங்களை நோக்கி..,
 • திருத்தி எழுதிய தீர்ப்புகள்,
 • தமிழுக்கு நிறமுண்டு,
 • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,
 • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,
 • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்,
 • இதனால் சகலமானவர்களுக்கும்,
 • இதுவரை நான்,
 • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்,
 • பெய்யென பெய்யும் ழை,
 • நேற்று போட்ட கோலம்,
 • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்,
 • ஒரு மெளனத்தின் சப்தங்கள்


அத்துடன் 5 நாவல்கள் இவரின் சிந்தனையில் இருந்து வெளிவந்துள்ளன. (தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்)

மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதைக்குள் நுளைந்த தமிழ் கவியுலகிற்கு கிடைத்த அறிவுப்பொக்கிஸம் இவர்.
இலக்கண தமிழ் மட்டும் இவரின் கவிதைகளை அலங்கரிக்கவில்லை.. பேச்சுத்தமிழும், வட்டாரத்தமிழும், அறிவியல் தமிழும் ஏன் மழலை தமிழும் இவரின் கவிதைகளுக்குள் அகப்படாமல் வளர்ந்ததில்லை. அதற்கு ஒரு உதாரணம்.

தமிழ் மீது இவருக்கு அடங்காத காதல். எந்த கவிதையில், எந்த பாடலில் இவர் தமிழ் பற்றி சொல்லவில்லை என்றால் அது சாத்தியமில்லை. தமிழ் பற்றிய இவரின் பாடல்களில் என்னைக் கவர்ந்தது டுயட் திரைப்படத்தின் 'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…' என்ற பாடலாகும்

இவரின் ஒரு கவிஞன் என்ற கவிதையை படித்துப்பாருங்கள்.. கவிஞனின் உண்மை நிலை தெரியும்.

உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்

கண்ணில் மழைகட்டும் போதெல்லாம்
பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான்
ஆயினும் - பரிகாசமே பரிசாய்ப் பெறுவான்.

காலக்கண்ணாடி என்பான் தன்னை
ஒருபயலும் அதில் முகம்பார்த்ததில்லை

கடல்கடக்கும் பறவைகாள்!
சிறகுவலித்தால் எங்கே
சிரமபரிகாரம் என்பான்

சுற்றும் பூமி நின்றுவிடில்
சூழ்காற்று எங்குறையும் எனவியப்பான்

சமூகம் அவனைவிட்டுப்
பத்தடி தள்ளியே பயணித்தது

உறைந்துகிடக்கும் நிலாவெளிச்சமென்று
பனித்துளிகள் பார்த்து இமைதொலைப்பான்

அவனுக்கு
நாட்டுவைத்தியமே
நல்லதென்றாள் பாட்டி

கோடுகளற்ற நாடுகள்
வேலிகளற்ற வீடுகள்
வறுமைகளைந்த வாழ்வு
கண்ணீர் கழிந்த சமூகம்

ஊர்மேடையேறி உரக்கப்பாடுவான்
குல்லாய் தொலைத்த கோமாளியென்றது கூட்டம்

பெயர்கள் கூட
ஜாதிமத அடையாளம் காட்டுமாதலால்
எல்லார்க்கும் பெயர்களைந்து
எண்களிடச் சொல்வான்
அவனை மனிதப்பிரஷ்டம் செய்யச் சொன்னது மதம்

சில்லறைகள் ஓசையிடும்
சமூகச் சந்தையில்
அடங்கிபோனது அனாதைப்புல்லாங்குழல்

பொறுத்த கவி ஒருநாள்
பொறுமை துறந்தான்
தன் கவிதைகளை
நெற்றியில் எழுதி
ஒட்டிக்கொண்டான்

கூட்டத்தை ஊடறுத்துக்
கவிபாடிக் கலைத்தான்
ஊசியின் காதோடும்
ஒப்பித்தான் கவிதைகளை
தெருக்கள் வெறிச்சோடின

ஒரு கையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் கவிதையேந்தி
நிர்வாணமாக ஊர்வலம் போனான்
கண்கள் - கதவுகள் அடைத்துக்கொண்டன

தாஜ்மகால் சுவரில்
தார் எழுதினான்
காலையில் கைதாகி
மாலையில் விடுதலையானான்

ஒருநாள்...
பறவைகள் எச்சமிடும்
கோயில் கோபுரமேறி...
கலசம் உருகக் கவிதை கூவினான்

நிர்வாகம் அவனை
இறங்கும்வரை கெஞ்சியது
இறங்கியதும் கிழித்தது

நேற்று...
தன் முதற்கவிதை வெளிவந்த பத்திரிகையின்
முதற்பிரதி கொள்ள
உயிர்பிதுங்கும் பரபரப்பில்
ஓடிக் கடந்ததில் -
சாலை விபத்தில் செத்துப்போனான்

மொத்த ஊரும் திரும்பிப் பார்த்து
மரித்துப் போயினன்
.............................................................................................

வைரமுத்துவிற்கு வாழ்க்கையை படிக்கத் தெரியும்,ரசிக்கத் தெரியும், வாழவும் தெரியும். அதனை அவரே உணர்த்துகின்றார் இங்கு..


பாங்கொங்,கனடா,கொங்கொங் ஆகிய நாடுகளில் தமிழ் கற்பிக்கும் பள்ளி அமைத்து தமிழ் வளர்த்து வரும் கவிஞர் அவர்களுக்கு 1986ல் கவிப்பேரரசு என்ற விருதுப்பெயர் கிடைத்தது. 2003ல் பத்மஹீ விருது கிடைத்தது. இவரின் கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ல் சாகித்ய அக்கடமி விருதையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.
தன் வாழ்க்கை வரலாற்றை 28வது வயதிலேயே எழுதிய ஒரே கவிஞர் இவர்தான். இதுவரை நான் என்பது தான் அவரின் சுயசரிதை. இந்நுாலை மின்னுாலாக பெற இங்கு செல்லவும்.

'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் கரைகளில் தாடி வளர்த்தவாறு, கானல் நீரில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் என சமகால இளைஞர்களின் மனதிலெல்லாம் நம்பிக்கை நாற்றுகளை நடத்தான். தன் முதுகில் ஒரு லட்சியக் குடத்தைச் சுமந்து கொண்டு இந்த நத்தை நகர்ந்தது எப்படி என்பதைச் சோர்ந்து கிடப்பவர்களுக்குச் சொல்லத்தான். நீர் பசையில்லாத பாறைகளின் இடுக்கில் முளைத்த இந்தக் கறுப்பு விதை கிளைகளை மேலே விரிப்பதற்காகச் சூரியனோடு நடத்தி போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும் இளைய தமிழனுக்குள் ஒரு சுயநம்பிக்கையைச் சுரக்க வைக்க வேண்டும். 

ஒரு கவிஞனிடம் மாறுபட்ட எண்ணங்கள் பரவிக்கிடக்கும். எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவனே கவிஞன். அதற்கு விதிவிலக்கல்ல நம்ம கவிபேரரசு. அவர் எழுதிய ஒரு மாறுதலுக்காக என்ற கவிதை அதற்கொரு சான்று.


ஒரேமாதிரி சுற்றும் பூமி 
ஒரேமாதிரி வீசும் காற்று 
ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் 
ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை 

மழையும் வழக்கம்போல் 
மேலிருந்து கீழாய் 

தேதிபார்த்து வந்து 
தேதிபார்த்துப் போகும் 
வசந்தம் 

ஒரேமாதிரி உணவு 
ஒரேமாதிரி துாக்கம் 
ஒரேமாதிரி கனவு 

எப்படித்தான் நூறாண்டு 
இருப்பதோ இம்மாநிலத்தே? 

வாழ்முறை சற்றே 
மாற்றுக மனிதரீர் 

வாரத்தில் ஒர்நாள் 
பகலெல்லாம் தூங்கி 
இரவெல்லாம் விழிமின் 

பகல் 
பிறர்க்காக நீவிர்வாழ 
இரவு 
உமக்காக நீவிர்வாழ 

வானஇலை விரித்து 
நட்சத்திரம் தெளித்து 
நிலாச்சோறு பரிமாறுமியற்கை 

அருந்தாமல் தூங்கும் 
பசியோடு மனிதகுலம் 

இரவெல்லாம் விழிமின் 
நட்சத்திரம் முணுமுணுக்கும் 
ஓசைகள் காதுற்றால் 
நல்ல செவியுமக்கு 

ஒரு கண்ணாடித்துண்டு கொண்டு 
நிலவைச் சிறையெடுமின் 

கண்-காது-இருதயம் 
துருப்பிடிக்குமுன் துலக்குவீர் 

வானத்தின் நீளஅகலம் தெரியுமா? 

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகைப் 
பேட்டி காண்பீர் 

வயதாக ஆக 
வாழ்வோடு ஏன் விவாகரத்து? 
நெருங்கி வாருங்கள் 

குழந்தையோடு கூடி விளையாடித் 
திட்டமிட்டுத் தோற்றுப் போங்கள் 

கண்ணிரண்டும் மூடித் 
தொலைபேசி சுழற்றுங்கள் 

எதிர்முனையில் எவர் வரினும் 
அன்றைய விருந்துக்கழையுங்கள் 

வீட்டுப்பிள்ளையர்க்கு விடுமுறைவிட்டு 
நீங்கள் ஒருநாள் பள்ளிசெல்லுங்கள் 
இரண்டு புரியும் உமக்கு 
ஒன்று : உங்கள் அறியாமை 
இரண்டு : பிள்ளையர் பெருமை 

உடைந்தமேகம் முத்துநீர் சிதறினால் 
ஓடுங்கள் ஓடுங்கள் 
எங்கே மழையின் கடைசித்துளியோ 
அங்கே நில்லுங்கள் 

மழைக்கு வெளியே நின்று 
மழையை ரசியுங்கள் 
மழைபெய்த களிமண் நிலமாய் 
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும் 

பணம் கிடந்தால் மட்டுமல்ல- 
ஓடும்பேருந்தில் ஏறும் பெண்ணின் 
கூந்தல் பூஉதிர்ந்தாலும் 
காவல்நிலையம் ஒப்படையுங்கள் 

மரணம்கூட வித்தியாசமாயிருக்கட்டும் 
அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும்

..............................................................................................

வைரமுத்து அவர்களுக்கு தாய் என்றால் தனிப்பிரியம். தன்னை சுமந்து பெற்ற தாய் பற்றி அவர் எழுதிய கவிதைகள், பாடல்கள் ஏராளம் ஏராளம்.. அதில் என்னை மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் ஒரு பாடல்.. ஆயிரம் தான் கவி சொன்னேன்.. அழகழகாய் பொய் சொன்னேன்.. பெற்றவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலயே…


போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்று சொல்வார்கள். பொதுவாக இந்த குணம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது வாய்த்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் எனலாம்.. இதோ அவர் சொல்லுகின்றார். இது போதும் எனக்கு என்று..

அதிகாலை ஒலிகள் 
ஐந்துமணிப் பறவைகள் 
இருட்டு கதவு தட்டும் சூரியவிரல் 
பள்ளியெழுச்சி பாடும் உன் 
பாதக்கொலுசு 
உன் கண்ணில் விழிக்கும் 
என் கண்கள் 
இதுபோதும் எனக்கு 

தண்ணீர் போலொரு வெந்நீர் 
சுகந்தம் பரப்பும் துவாலை 
குளிப்பறைக்குள் குற்றாலம் 
நான் குளிக்க நனையும் நீ 
இதுபோதும் எனக்கு 

வெளியே மழை 
வேடிக்கை பார்க்க ஜன்னல் 
ஒற்றை நாற்காலி 
அதில் நீயும் நானும் 
இதுபோதும் எனக்கு 

குளத்தங்கரை 
குளிக்கும் பறவைகள் 
சிறகு உலர்த்தத் 
தெறிக்கும் துளிகள் 
முகம் துடைக்க உன் முந்தானை 
இதுபோதும் எனக்கு 

நிலா ஒழுகும் இரவு 
திசை தொலைத்த காடு 
ஒற்றையடிப்பாதை 
உன்னோடு பொடிநடை 
இதுபோதும் எனக்கு 

மரங்கள் நடுங்கும் மார்கழி 
ரத்தம் உறையும் குளிர் 
உஷ்ணம் யாசிக்கும் உடல் 
ஒற்றைப் போர்வை 
பரஸ்பர வெப்பம் 
இதுபோதும் எனக்கு 

நிலாத் தட்டு 
நட்சத்திரச் சோறு 
கைகழுவக் கடல் 
கைதுடைக்க மேகம் 
கனவின் விழிப்பில் 
கக்கத்தில் நீ 
இதுபோதும் எனக்கு 

தபோவனக் குடில் 
தரைகோதும் மரங்கள் 
நொண்டியடிக்கும் தென்றல் 
ஆறோடும் ஓசை 
வசதிக்கு ஊஞ்சல் 
வாசிக்கக் காவியம் 
பக்க அடையாளம் வைக்க 
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ 
இதுபோதும் எனக்கு 

பூப்போன்ற சோறு 
பொரிக்காத கீரை 
காய்ந்த பழங்கள் 
காய்கறிச் சாறு 
பரிமாற நீ 
பசியாற நாம் 
இதுபோதும் எனக்கு 

மூங்கில் தோட்டம் 
மூலிகை வாசம் 
பிரம்பு நாற்காலி 
பிரபஞ்ச ஞானம் 
நிறைந்த மௌனம் 
நீ பாடும் கீதம் 
இதுபோதும் எனக்கு 

அதிராத சிரிப்பு 
அனிச்சப்பேச்சு 
உற்சாகப்பார்வை 
உயிர்ப் பாராட்டு 
நல்ல கவிதைமேல் 
விழுந்து வழியும் உன் 
ஒரு சொட்டுக் கண்ணீர் 
இருந்தால் போதும் 
எதுவேண்டும் எனக்கு
?


யார் நாட மாட்டார்கள் உங்களை…! எது அலங்கரிக்காது உங்களை..!
அண்மையில் விஜய் தொலைக்காட்சி உங்களுக்கு விருது வழங்கும் போது விழா மேடையில் ஒரு கவிதை உங்கள் நடையில் சிவகார்த்திகேயனால் வாசிக்கப்பட்டது. 
அத்தனையும் உண்மை… நீங்கள் கலிபோர்னியாவில் பிறந்திருந்தால் அமெரிக்கா ஆங்கிலம் அன்றே வல்லரசாகியிருக்கும்.


கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் கவிபேரரசு வைரமுத்து அவர்களின் தலமையில் கிளம்பீற்று காண் தமிழ் சிங்கக் கூட்டம் என்ற கவியரங்கு நடைபெற்றது. அதில் தமிழ் குறித்த அவரின் கவிதை ஒலி வடிவில்..இறுதியாக மீண்டும் மீண்டும் எங்கள் தமிழ் கவிஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை மனதார வழங்கி இந்த வரலாறு காணாத நீண்ட பதிவை நிறைவு செய்கின்றேன்.. கவித்தலைவர் பற்றி பதிவு எழுதினால் அதுவும் நீளமாகின்றது கவிப்பேரரசின் கவிதைகளின் எண்ணிக்கை போல….

புதுக்கவிதை பேனாவில் மரபுக்கவிதையின் மரபணுக்களை மையாக ஊற்றி
நீ எழுதும் வாக்கியம் தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத தனி இலக்கியம்..

கண்ணதாசனுக்கு பிறகு விதவையாய் கிடந்த மெட்டுக்களுக்கு கவிதை பொட்டுக்கள் இட்டு
வாழ்க்கை தந்த சீர்திருத்த கவிஞன் நீ..


தேசமே கொண்டாடும் பாடல்களின் சந்தம் நீ..
ஆனால் என்றென்றும் தமிழுக்கே சொந்தம் நீ..


உன் பாடல்கள் பாமரனும் கேட்டவுடன் புரிந்து கொள்ள முடியும்
அதே பாடலை ஆராய்ச்சி படிப்புக்கும் எடுத்துக்கொள்ள முடியும்
ஆம் நீ ஞானிகளுக்கு எழுதினால் அதில் கருத்து மழை பொழியும்
குழந்தைகளுக்கு எழுதினால் அதில் எழுத்துப் பிழை தெரியும்


நீ தேசிய விருது வாங்குவது இது ஆறாம் முறை
உன் இல்லம்தான் இனி இலக்கணத்தின் ஆறாம் திணை

வைரமுத்துவின் கவிதையில் இருந்தே அவருக்கொரு வாழ்த்து..குறிப்பு :- கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “தாஜ்மஹாலில் ஒரு கவியரங்கம்” என்ற கவிதையை அவரின் கம்பீர குரலிலேயே கேட்க இத்தளத்திற்கு செல்லுங்கள்..
காதலை ரசித்து சுவைத்து பாருங்கள்..

நன்றி
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்..,

14 Responses so far

 1. அழகு
  அறிவு
  பகிர்வு
  --

 2. வணக்கம் சகோ,

  வைரமுத்துவின் பரந்து பட்ட கவிதைப் பரப்பினை அலசியிருக்கிறீங்க.

  //இன்று வரை கவிஞர் அவர்கள் 14 கவிதை தொகுப்புகளை படைத்துள்ளார். அவையாவன,//

  இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும்,

  சிகரங்களை நோக்கி(ஒரு முனிவரின் வரலாற்றினை ஆன்மீகம் கலந்து அலசும் உரை நடை இலக்கியம். இது கவிதை அல்ல)

  //இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்//

  இதுவும் கவிதைத் தொகுப்பல்ல சகோ, ஒரு கட்டுரைத் தொகுப்பு. வைரமுத்து வாழ்வில் பாதிப்பை - தாக்கங்களை ஏற்படுத்திய நபர்களைப் பற்றி பேசும் நூல்,

  //சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்,
  இதனால் சகலமானவர்களுக்கும்,
  இதுவரை நான்,//

  இவை இரண்டும் கவிதைத் தொகுப்புக்கள் அல்ல.

  சிற்பியே உன்னை....வைரமுத்துவால் எழுதப்பட்ட ஒரு அறிவுரை நூல். தத்துவக் கருத்துக்கள் நிரம்பிய நூல்.

  அதே போல இதனால் சகலமானவர்களுக்கும் என்பது
  வைரமுத்தைப் பற்றி கவிஞரே கூறும் சுயசரிதை நூல்.

  //அத்துடன் 5 நாவல்கள் இவரின் சிந்தனையில் இருந்து வெளிவந்துள்ளன.//

  வைரமுத்துவின் சிந்தனையில் ஐந்து நாவல்கள் வரவில்லை சகோ.

  தண்ணீர் தேசம்..காவியம் அல்ல...இது ஓர் சிறுகதையும் கவிதையும் கலந்து எழுதப்பட்ட நூல்.

  காவியம் எனும் இலக்கிய வடிவத்தினுள் இது இடம் பெறாது.

  இதிகாசம், காவியம் இரண்டுமே வெவ்வேறு வடிவ- இலக்கிய உருவ அமைப்புக்களைக் கொண்டுள்ளவை. அவற்றினை நாவல்கள் என்ற அமைப்பினுள் உள்ளடக்க முடியாது.

  காவியம் வேறு, இதிகாசம் வேறு சகோ.

  வைரமுத்து பற்றிய தொகுப்பினை அருமையாகத் தொகுத்திருக்கிறீங்க. மேற் கூறப்பட்ட தவறுகளைத் திருத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும் சகோ.

 3. @ மதுரை சரவணன்:-
  நன்றி சகோதரா..

  @ கவி அழகன்:-
  மிக்க நன்றி

 4. @நிரூபன்:-
  நன்றி அண்ணா...

  தங்கள் கருத்துகளை கவனத்தில் எடுக்கின்றேன்..

  ஃஃஃஃஃஅதே போல இதனால் சகலமானவர்களுக்கும் என்பது
  வைரமுத்தைப் பற்றி கவிஞரே கூறும் சுயசரிதை நூல்.ஃஃஃஃ

  அவரின் சுயசரிதை நுால் இதுவரை நான் என்பதுதான்.


  ஃஃஃஃஃவைரமுத்துவின் சிந்தனையில் ஐந்து நாவல்கள் வரவில்லை சகோ.

  தண்ணீர் தேசம்..காவியம் அல்ல...இது ஓர் சிறுகதையும் கவிதையும் கலந்து எழுதப்பட்ட நூல்.
  காவியம் எனும் இலக்கிய வடிவத்தினுள் இது இடம் பெறாது. ஃஃஃஃஃ

  தண்ணீர் தேசம் காவியம் இல்லைத்தான்.. அது ஒரு நாவல் என்பதை நான் பதிவில் தெளிவாகவே சொல்லியுள்ளேன்..


  ஃஃஃஃஇதிகாசம், காவியம் இரண்டுமே வெவ்வேறு வடிவ- இலக்கிய உருவ அமைப்புக்களைக் கொண்டுள்ளவை. அவற்றினை நாவல்கள் என்ற அமைப்பினுள் உள்ளடக்க முடியாது.

  காவியம் வேறு, இதிகாசம் வேறு சகோ. ஃஃஃஃ

  இக்கருத்துக்கான காரணத்தை என்னால் சரியாக உணரமுடியவில்லை.. இருந்தும் நான் நினைக்கின்றேன் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகியன பற்றி சொல்லுகின்றீர்கள் என்று..

  சகோதரா கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் இவை இரண்டும் அவரினால் எழுதப்பட்ட நாவல்களுக்கு அவர் இட்ட பெயர்களாகும்.. இலங்கை என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினால் அப்புத்தகம் இலங்கையாகிடுமா..?? அத்துடன் ஒரு நுாலில் பெயரை எப்படி என்னால் மாற்ற முடியும்..?

  அத்துடன் கவிஞரோ அல்லது வேறுயாரோ அவற்றை காவியம் என்றோ, இதிகாசம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லையே...

  இதிகாசங்கள் இன்றுதான் எமக்கு இதிகாசங்கள்.. அவை படைக்கப்பட்ட காலத்தில் அவையும் புதியவைதான்.. ஆகையால் கால மாற்றத்தில் எதுவும் நடைபெறலாம்.

  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. இப்போதைய என் கருத்துகளில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்.. நன்றி சகோதரா..

 5. அன்பிற்குரிய சகோ ஜனகன்,

  முதலாவது கமெண்டில் அவசரத்தில் இதனால் சகலமானவர்களுக்கும் பற்றி தவறாக எழுதி விட்டேன்.
  இதனால் சகலமானவர்களுக்கும் என்பது ஓர் உரை நடை இலக்கியம்.

  இதுவரை நான் என்பது தான் வைரமுத்துவின் சுயசரிதையினைப் பற்றிப் பேசும் நூல்.

 6. @அன்பிற்குரிய சகோ,

  //தண்ணீர் தேசம் காவியம் இல்லைத்தான்.. அது ஒரு நாவல் என்பதை நான் பதிவில் தெளிவாகவே சொல்லியுள்ளேன்..//

  தமிழ் இலக்கியத்தில் நாவல் எனும் வடிவம் வேறு, உரை நடை எனும் வடிவம் வேறு,
  காப்பியம், இதிகாசம் எனும் வகை வேறு.

  கவிதை சார் உரை நடை கலந்து எழுதப்படும் ஓர் உரை நடை இலக்கியத்தை தமிழ் இலக்கிய வரலாறு ஒரு போதும் நாவல் என்ற வகையினுள் உள்ளடக்கவில்லை.

  காப்பியம் என்பது ஒருவனைப் பாட்டுடைத் தலைவானாகக் கொண்டு நவரசங்களையும் கலந்து பாடப்படுவது.

  இதிகாசம் எனப்படுவது பழமைவாய்ந்த ஒன்றைப் பற்றிப் பேசும் புராதன இலக்கியம் அல்லது வரலாற்றினைப் பேசும் இலக்கியம்.
  மகாபாரதம், இராமாயணம்,

  //சகோதரா கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் இவை இரண்டும் அவரினால் எழுதப்பட்ட நாவல்களுக்கு அவர் இட்ட பெயர்களாகும்.. இலங்கை என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினால் அப்புத்தகம் இலங்கையாகிடுமா..?? அத்துடன் ஒரு நுாலில் பெயரை எப்படி என்னால் மாற்ற முடியும்..?//

  சகோ, நாவல் இலக்கியம் வேறு, இதிகாசம் காப்பியம் என்பது வேறு, அதனைத் தெளிவுபடுத்த தான் மேற்படி விளக்கத்தினைக் கையாண்டேன்,

  நீங்கள் இவ்வாறு மூஞ்சியில் அடித்தாற் போல இலங்கை என்று எழுதினால் இலங்கையாகுமா என்பது- இன்னமும் காப்பியம், இதிகாசம், நாவல் முதலியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டினை அறியாது உங்கள் கருத்தில் உறுதியாக நிற்பதையே காட்டி நிற்கிறது சகோ.

  வாதங்கள் அவசியம் தான், ஆனால் கருத்தில் தவறுகள் இருக்கிறது எனச் சுட்டிக் காட்டும் போது, உங்கள் கருத்தில் மேலும் மேலும் உறுதியாக நிற்பது எம் இருவரினதும் நேரத்தினைத் தான் வீணாக்கும் சகோ.

 7. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

  இவ் இணைப்பில் நீங்கள் நாவல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் சகோ.

 8. மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவிக்கின்றேன்... தாங்கள் கூறியது முற்றிலும் சரிதான்.. இவை அனைத்துக்கும் தனித்தனி வித்தியாசங்கள் உள்ளனதான்.. அதில் நானும் உறுதியாகதான் உள்ளேன்.. அதனால் தான் தங்களின் கவிதை தொகுப்பு பற்றிய கருத்துகளை விவாதிக்கவில்லை..


  ஃஃஃஃஃஃநீங்கள் இவ்வாறு மூஞ்சியில் அடித்தாற் போல இலங்கை என்று எழுதினால் இலங்கையாகுமா என்பது- இன்னமும் காப்பியம், இதிகாசம், நாவல் முதலியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டினை அறியாது உங்கள் கருத்தில் உறுதியாக நிற்பதையே காட்டி நிற்கிறது சகோ.ஃஃஃஃஃ

  மன்னிக்கவும் சகோதரா... அவருடைய நுாலுக்கு அவர் இட்ட பெயரை எம்மால் மாற்றவும் முடியாது, அதுதான் அந்த இலக்கிய வடிவம் என்றும் சொல்ல முடியாது ஆகையால் தான் இதனை இலகுவில் விளங்கப்படுத்துவதற்காக இவ்உதாரணத்தை பயன்படுத்தினேன்.. (மனதை தாக்கியிருந்தால் இந்த தம்பியை மன்னிக்க கூடாதா??)

  அண்ணா முடிந்தால் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் இரண்டும் பற்றிய மேலதிக விளக்க கட்டுரைகள், ஆய்வுகள் கிடைத்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

  வித்தியாசமான தேடலுக்கு வித்திட்டுள்ளீர்கள்..மிக்க நன்றி..

  என் தனிப்பட்ட கருத்து..மன்னிக்கவும்
  அண்ணா..காப்பியம் என்பதா காவியம் என்பதா சரியான வார்த்தை..??

  ஏனெனில் தொல்காப்பியம் பாட்டுடை தலைவனை முதன்மையாக கொண்டு பாடப்படவில்லையே..
  ஆகையால் பெயரினை கொண்டும் அதன் இலக்கிய வடிவத்தை அறியமுடியாது தானே.. வகைப்படுத்த முடியாது தானே..  இதிகாசம் என்பதற்கு தங்கள் விளக்கத்தை ஏற்கின்றேன்.. அதனால் தான் நான் முதல் கருத்தில் சொன்னேன்..
  ஃஃஇதிகாசங்கள் இன்றுதான் எமக்கு இதிகாசங்கள்.. அவை படைக்கப்பட்ட காலத்தில் அவையும் புதியவைதான்.. ஆகையால் கால மாற்றத்தில் எதுவும் நடைபெறலாம்.ஃஃஃ

  சில வேளைகளில் கள்ளிக்காட்டு இதிகாசமும் பிற்காலத்தில் இதிகாசமாக பார்க்கப்படலாம்..அது வேறு..


  அண்ணா வைரமுத்து புதுக்கவிதைகளை எழுதி வருபவர்.. சில வேளைகளில் நாவல் இலக்கிய வடிவத்தினுள் கவிதை நடை இலக்கியங்களையும் சேர்த்தால் என்ன என்ற முயற்சியில் இறங்கியிருப்பார்.. மாற்றங்களை உள்ளெடுத்து கொண்டு வளர்ந்தது தானே தமிழும்,தமிழிலக்கியங்களும்..

  அண்ணா.. இப்பதிவினால் எமக்குள் முரண்பாடுகள் வேண்டாம்.. பிறகு வைரமுத்து எம்மை பிரித்து விட்டார் என்று அவருக்கும் அவரால் நாம் பிரிந்து விட்டோம் என்று எமக்கும் கெட்ட பெயர் வந்து விடும் பாருங்கோ.. ஆகவே விவாதத்தை தவிர்த்து விளக்கங்களை பகிர்வோம்....

 9. LOSHAN says:

  வாசித்தேன் தம்பி.. மிக மினக்கெட்டு தொகுத்துள்ளீர்கள்.
  ஆறுதலாக, விரிவாக பின்னூட்டமிடுகிறேன்

 10. Anonymous says:

  நல்ல பார்வை ,

Leave a Reply