எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts
Saturday, January 14, 2012

தமிழ் எழுத்தியல் துறையிலும் ஊடக துறையிலும் பெண்களின் பங்கு.

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

வணக்கம் நண்பர்களே,
எனது 50வது பதிவினுாடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் பதிவுலக ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களனைவருக்கும் என் நன்றிகள்.
என்னை பதிவெழுத துாண்டியவை லோஷன் அண்ணாவின் பதிவுகள். 
எனக்கு களம் அமைத்து தந்தவர் அன்புக்குரிய மதிசுதா அண்ணா
இவர்கள் இருவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

............................................................................................................................................................................................................................................................................................................

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இந்தியா செல்ல முடிந்தது. அங்கு இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட கருத்தமர்வுகளில் இருந்து பல விடயங்களை கற்க முடிந்தது. அவற்றில் ஒரு கருத்தமர்வில் பகிரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பதிவு தயாராகின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் எழுத்து துறையிலும் ஊடக துறையிலும் அதிகம் சாதித்து வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு என்று சமூகத்தில் இருக்கின்ற வாய்ப்புகளும் காரணமாக அமைகின்றன. ஆண் ஒருவன் சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு தகுதியுடையவன் என பலரும் நம்புவதால் ஆண் படைப்பாளிகளை இன்று நாம் அதிகமாக பார்க்கின்றோம். ஆணுக்கு நிகரானவள் பெண் என்பது நிஜம். அதனால் எந்த துறையாக இருந்தாலும் இன்று பெண்களும் அத்துறைகளில் ஆண்களுக்கு இணையாக கோலுச்சி வருகின்றனர். அந்த வகையில் இன்று இதழியல் துறையில் சாதிக்கும் பெண்களும் பலர் உள்ளனர். அத்துடன் ஆண் இலக்கிய வாதிகள் பெண்களின் பெயர்களை தம் படைப்புகளில் புனை பெயராக கொண்டு எழுதி வருகின்றனர் என்பதன் ஊடாக பெண்கள் இலக்கிய படைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றதல்லவா?

பேராசிரியை தாயம்மாள் அறவாணன்

பெண்கள் பாரதியின் புரட்சிக்கு பின்னர்தான் சமூகத்தில் சாதிக்க வந்தனர் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும் இலக்கிய துறையிலும் இதழியல் துறையிலும் பெண்கள் தமது படைப்பாற்றலை சங்க காலத்திலேயே ஆரம்பித்து விட்டனர். சென்னை பல்கலைகழகத்தில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகின்றது.

நுால்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவரும் கொங்கு பத்திரிகையின் ஸ்தாபகராக விளங்குபவருமான பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பேராசிரியரும் தொடர்பியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியாராவார். கணவரின் இலக்கிய பயணத்திலும் கல்வி பயணத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23 நுால்களை இதுவரை வெளியிட்டு உள்ளார். இவற்றில் சிலப்பதிகாரத்தில் வாய்மொழி கதை, ஔவையார் நுால் என்பன பெருமை பெற்றவையாகும். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக சக்தி விருது, ஔவை விருது முதலிய விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலம் முதல் இன்று வரை உள்ள பெண் கவிஞர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர் தனது ஆய்வினை அடிப்படையாக கொண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது கருத்துரையை நிகழ்த்தினார். சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் அமைந்த பாடல்களில் பல பாடல்களை அக்காலத்தில் இருந்த பெண் கவிஞர்கள் பாடியுள்ளனர். அக்காலத்தில் இருந்த 473 புலவர்களுள் சுமார் 45 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கற்றுத் தேர்ந்த புலவர்களும் இருந்தனர். சாதாரணமான பெண்களும் இருந்தனர். குறத்தி இனத்தை சேர்ந்தவர்களும், பானை செய்யும் பெண்களும், சேலை துவைக்கும் பெண்களும் கூட கவிதாயினிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக குறத்தி இனத்தை சேர்ந்த இளையோதி, குளையோதி ஆகிய பெண் புலவர்களை குறிப்பிடலாம்.

சங்க காலத்தில் கவிபுனைய ஆரம்பித்த பெண்கள் தொடர்ச்சியாக கவிபுனைவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். அந்த வகையில் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மங்கையற்கரசியார் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் புலவர்கள் தோன்றிய வண்ணமே இருந்தனர். இவர்கள் ஆண் புலவர்களுக்கு சவாலாகவும் அவர்களின் கவித்துவத்திற்கு இணையாகவும் பாடல்களை பாடி வந்துள்ளனர். இவர்களில் புலமைப்போரில் ஈடுபட்ட ஔவையாரை இவ்விடத்தில் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும்.


பிற்பட்ட காலத்திலே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கவிஞர்களாக இருந்த ஜானகி அம்மையார், லட்சுமி அம்மையார் ஆகிய இருவரும் பெண் கவிஞர்களுள் முதன்மை பெறுகின்றனர். இவர்களில் லட்சுமி அம்மாள் வியாசட்ட முறையில் அதாவது ஒரு வரியில் அமைந்த விடயத்திற்கு நீண்ட தெளிவான விளக்கம் தருவது வியாசட்ட முறையாகும். அந்த வகையில் வியாசட்ட முறையில் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு தெளிவான பொருளுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஒரே ஒரு பெண் லட்சுமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து 19ம் நுாற்றாண்டின் பெண் கவிஞர்கள் பற்றி பார்த்தால் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். 1909ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆவண காப்பகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண்கள் பற்றிய தகவல்களை அறிய முடிந்ததாக குறிப்பிட்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் அன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால் தான் இன்றைய பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் சுமார் 107 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

பெண் கவிஞர்களின் தோற்றத்தில் அவர்களின் இளவயது திருமணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. கணவன் இறந்த பின் அப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு கல்வி கற்பித்தலை ஊக்குவித்ததால் அப்பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ந்தனர். பின் சமூகத்தின் மீதான அவர்களின் பார்வை அகல விரியவே அவர்கள் கவிஞர்களாக மாறினர்.

விழுப்புரம் அகலாம்பிகை என்ற பெண் சிறுவயதிலேயே விதவையானவர். பின் இரட்டணை என்ற ஊரில் தங்கியிருந்து ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யாப்பு நயம்பட பல்வேறு கவிதைகளை வெளியிட்டார். இவரின் சிறப்புக்குரிய படைப்பாக மகாத்மா காந்தி தொடர்பாக இவர் எழுதிய ஏழு காண்டங்களை கொண்ட நுால் விளங்குகின்றது.
பத்மாவதி, கிருஸ்ணவேணி ஆகிய சகோதரிகள் கும்மியடிக்கும் பெண்களாக விளங்கினர். இவர்களிடம் இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற இசை அறிவின் காரணமாக இவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் இசயோடு இணைந்து காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண பெண்ணாகிய சம்பூர்ணம் என்பவர் சமையல் செய்து கொண்டே தமயந்தி நாடகம் தொடர்பாக கவிதைகளை எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வை.மு.கோதைநாயகி

இவ்வாறாக பெண்கள் கவித்துறையில் சாதித்தது மட்டுமன்றி பல பெண்கள் இன்றும் ஊடக துறையில் சாதித்த வண்ணம் உள்ளனர். தமிழ் மொழியே தெரியாத வை.மு.கோதைநாயகி என்ற பெண் கணவரின் துணையோடு நின்று 15 நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த ஜெகன்மோகினி பத்திரிகையின் ஸ்தாபகராகவும் இப்பெண் விளங்கியுள்ளார். அத்துடன் பல பெண்கள் நாடு கடந்து சென்றும் பத்திரிகை துறையில் செயற்பட்டிருக்கின்றனர். இன்றைய தமிழ் பெண் பத்திரிகையாளர்களின் கதாநாயகிகளில் முக்கியமானவர் இலங்கையின் மலையத்தில் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக கணவருடன் இணைந்து போரிட்ட மீனாட்சியம்மாள் நடேசையர் அவர்கள்.
மீனாட்சியம்மாள் நடேசையர்

இந்திய வம்சாவளி மக்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்திரிகைகள் ஊடாக குரலெழுப்பி வந்த நடேசையர் அவர்களை ஆங்கில அரசு தடை செய்த போது அங்கிருந்து இலங்கை வந்து மலையக வாழ் இந்திய மக்களுடன் இணைந்து வாழ்ந்து அவர்களுக்கான உரிமைகளை தேடியறிந்து அதனை பெற்றுத்தருவதற்காக பத்திரிகைகளை உருவாக்கினார். கணவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இங்கு பெண்களுக்கான உரிமை போரிலும், மக்களின் விடுதலை போரிலும் தன்னையும் இணைத்து கவிதைகளை எழுதியதுடன் வீடு வீடாக சென்று பாரதியார் பாடல்களை பாடி புரட்சி தீயினை வளர்த்தார். இவர் மாறுவேடம் பூண்டு நடாத்திய பத்திரிகைகள் தேச நேசன், தேச பக்தன், உரிமைப்போர், தொழிலாளி, சுதந்திர போர் என்பனவாகும்.

நன்றி இணையம் www.fashioner.com

இவர்களின் வழித்தோன்றல்களாக இன்றைய பெண் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சவால் மிக்க இன்றைய ஊடக துறையில் இவர்களின் பணி மெச்சத்தக்கது. இன்றைய நாளில் பெண் ஊடகவியலாளர்கள் சாதிப்பதை விட சவால்களையே அதிகம் சந்திக்கின்றனர். பாலியல் ரீதியான அழுத்தங்கள், ஆணாதிக்கம் என்பன இவர்களை கட்டுப்படுத்தும் காரணிகளில் முதன்மை பெறுகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் தமக்கான பாதுகாப்பு வேலிகளாக கொண்டு இத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை நாம் பாராட்டியேயாக வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமன்றி மேன்மையானவர்கள் அதனை நாம் உணர வேண்டும். மோசமான படைப்புகள் பல பெண்களின் புனை பெயர்களின் வெளிவரும் இன்றைய சவால் மிகுந்த காலத்தில் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பெண்கள் இலக்கிய படைப்பாற்றலிலும், ஊடகத்துறையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாகவும் அமைகின்றது.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Monday, July 18, 2011

கவியரங்கில் பதிவர்கள்..!

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்று (16.07.2011) இடம்பெற்றது. திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற்ற பரத நடன நிகழ்வுகள், தவில் கச்சேரி, வில்லுப்பாட்டு ஆகியவற்றுடன் முத்தாய்ப்பாக அமைந்தது கவியரங்கம்.

கவிஞர்கள் உருவாக்கப்படுபவர்கள். அவர்களின் வாழ்க்கை சூழல், அனுபவித்த, அனுபவிக்கும் நிகழ்வுகளின் தாக்கம், மாறுபட்டதும் புரட்சியானதுமான சிந்தனைகள் கவிஞர்களை உருவாக்கி விடுகின்றன. அவ்வாறே பதிவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்த பதிவர்கள் கவியுலகிலும் நுழைந்தனர். பதிவுகளில் கவிதைகளில் கலக்கி எம்மை கட்டிப்போட்ட கவிச்சக்கரவர்த்திகள் இணைந்து வழங்கிய கவியரங்கம் பற்றிய தகவல்களுடன் இப்பதிவு உங்களுடன்..
இரவு பத்து மணியளவில் அழகிய இரவில் மரங்களால் சூழ்ந்திருந்த ஆலய முன்றலில் கவியரங்கம் ஆரம்பித்தது கவியரங்க தலைவர் லோஷன் அவர்களின் “அனைவருக்கும் வணக்கம்” என்ற வார்த்தையோடு..

தலைநகரில் இருந்தாலும் தாய்மடியை நீங்கி தவித்திருந்தோம்.. ஆனால் தமிழ் என்ற பாலம் எப்போதும் எமை இணைப்பதால் இப்போது சந்திக்கின்றோம்.. என யாழ் மண்ணை தாய்மண்ணாக கொண்டுள்ள கவிஞர்கள் சார்பில் கவித்தமிழ் மொழியால் கவியரங்கத்தை ஆரம்பித்து வைத்த லோஷன் அவர்கள், தொடர்ந்து கவித்தலைப்பை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்த அறிமுகத்தை சற்று கேட்டு பாருங்கள்..



அழகான தமிழால் ஆண்டாண்டு காலமாக எம்மை அள்ளி அரவணைத்து அணையாத தாகத்தையும் நெஞ்சில் உரத்தையும் நேர்மை சிரத்தையையும் தந்து நிற்கும் மறைந்தும் மறையா கவி மகாகவி பாரதியே இன்று எங்கள் தலைவன்.. இன்றைய கவியரங்க தலைப்பு மறுபடியும் பாரதி.

ஓடி விளையாடும் பாப்பா முதல் உலகை ஆளும் மகாசக்தி வரை தன் பாட்டு உலகத்திலே அள்ளி அடக்கிய பாரதியின் தேடி எடுத்த நான்கு வரிகளை கவித்தலைப்பாக கொண்டு கவிதைகளை சபையேற்றினர் பதிவுலக கவிஞர்கள். அவ்வகையில் பப்புமுத்து என புகழ் பெற்ற சின்ன வைரமுத்து நித்தியானந்தன் பவானந்தன் அவர்கள் வல்லமை தாராயோ.. என்ற தலைப்பிலும்,

தகவல் தொழில்நுட்பவியலாளரும் பதிவுலகில் சுவடிகளை எழுதி வருபவருமான மாலவன் அவர்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே.. என்ற கவித்தலைப்பிலும்,

பொறியியல் தேர்ச்சியாளர் சிறுகதை புகழ் சுபாங்கன் அவர்கள் ஜெயமுண்டு பயமில்லை மனமே.. என்ற பாரதியின் வரியை துளியளவும் பயமின்றி கவித்தலைப்பாக மாற்றிக்கொண்டும்,

அற்புதமாகவும் அழகாகவும் அடக்கமாகவும் கவிதைகளை படைத்துவரும் ஆதிரை என்ற அரியகுமார் சிறீகரன் அவர்கள் தன் வருங்காலத்துக்காக கண்ணம்மாவை காற்று வெளியில் காதலித்த பாரதியின் வரிகளில் இருந்து காதல் போயின் சாதல் என்ற தலைப்பை தெரிந்து கொண்டும் தத்தம் கவிதைகளை அரங்கேற்றினர்.

முதலில் திருமலை நண்பன் பவன் கவிதை பாட ஆரம்பித்தார்.


பாரதியிடம் அனுமதி கேட்டு பின் கவிதை உரைக்க ஆரம்பித்தார் பவன்.


சுரண்டல்கள் இன்றி பதுக்கல்கள் இன்றி
தணிக்கைகள் அன்றி தாமதம் இன்றி
தயக்கங்கள் இன்றி தடைகளுமின்றி –மடலொன்று வரைய
அது மாற்றங்கள் இன்றி உனை வந்தடைய மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ


என்று தொடர்ந்து சென்ற அவரின் கவிதையில் சிறுபகுதி..



கவியுரைத்து சென்ற பவன் குறித்து கவியரங்க தலைவர் லோஷன் அண்ணா அவர்கள் கூறிய வார்த்தைகள் அற்புதம்.. ரசித்தேன்…


வாலிப வயதில் வனிதையருக்கு மடல் வரையும் பருவத்தில் வாழும் வயதில் வானகம் சென்ற பாரதியிடம் வல்லமை வேண்டி பவன் கவிதை பாடிய வேளையில் அவர் வயதொத்த பாவையர் பலர் ரசித்திருந்தனர் என்பது உதிரித் தகவல்.. அவர்கள் ரசித்தது கவிதையையோ?? பவனையோ?? யாமறியோம்…!

பவனை தொடர்ந்து கணனியின் காவலன், IT அரிச்சுவடி, மாலவன் அண்ணா அவர்களின் கவிதை இடம்பெற்றது.

மனதில் தேங்கியிருந்த பலவற்றினை நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் கவிதை வடிவில் அழகாக படைத்திருந்தார் மாலவன் அண்ணா.


இயற்கை அழகுடனும், நகைச்சுவையுடனும் ஆரம்பித்த அவரின் கவிதையில் சூரியனக்கு முன் எழுந்து ஊர் உறங்கிய பின் உறங்கும் இளைஞர்களின் ஆதங்கங்கள் பரவிக்கிடந்தன. அத்துடன் இன்றைய சமூகத்தின் திருமண சந்தை குறித்தும் சாடியிருந்தார் மாலவன் அண்ணா


பலத்த கரகோஷங்களுடன் தொடர்ந்த இவரின் கவிதையில் எனக்கு பிடித்த வரி ஒன்று உள்ளது.. வடக்கின்... 
மீதியை அவரின் பதிவில் பாருங்களேன்..

தொடர்ந்து ஜெயமுண்டு பயமில்லை மனமே என்ற காலனை காலால் உதைத்த பாரதியின் வரியில் அமைந்த கவித்தலைப்பில் கவிபாடினார் சுபாங்கன் அவர்கள்.


பாரதியுடன் உரையாடினால் எப்படி இருக்கும்..? என்ற வடிவத்தில் சம்பாசணை முறையில் கவி பாடிய சுபாங்கன் அட்டகாசமான வரிகள் பலவற்றையும் இடமறிந்து பயன்படுத்தியிருந்தார். நீங்கள் தான் கவிஞர்களாக இருந்தால் கசியும் மௌனத்தில் இருந்து கண்டு பிடித்து கொள்ளுங்கள் அவற்றை..

“நீர் போல் மாறு.. பாத்திரத்தின் வடிவம் படிக்கப்பழகு..
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டு விட்டு அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு..” என்ற வரிகள் ரசிக்க வைத்தன..

சுபாங்கனை தொடர்ந்து காதலை கவிப்பொருளாக கொண்ட ஆதிரை அண்ணா அவர்களின் காதல் போயின் சாதல் என்ற கவிதை கவியரங்கில் இடம்பெற்றது.


“காதலை பாடுவது கூட ஒரு வகையில் சாதல் தானே” என்று அழகாக ஆரம்பித்த அவரின் கவிதைகள் காமம் கடந்து நின்றன.


“ஞாபகம் இருக்கிறதா..?? நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ குனிய.. இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திலேதான் ஒரு காவியம் ஆரம்பமான கதை..” என்ற வரிகள் அங்கிருந்தவர்களின் கரகோஷங்கள், விசில் சத்தங்களை கடந்து ஒலித்து நின்றது.




இவரின் கவிதையில் “உடல் பாடையில் போகும் போதும் கூட உண்மைக்காதல் சாவதில்லை..” என்ற வரி என்னை கவர்ந்து நின்றது..


தன் மனதில் காதல் நிரப்பி அதை தமிழால் தொட்டு தாளில் கவிதையாக்கி காதல் பாடி நின்ற ஆதிரை அண்ணாவிற்கு முற்கூட்டிய வாழ்த்துகள்..

பாரதியை அந்தக்கால கவிஞன் என்று யாரும் சொல்ல முடியாத காரணத்தை உணர்த்தி நின்ற இக் கவியரங்கம் இன்றைய நிலையில் நம்மவர்களின் ஆதங்கங்களுடனும் ஏக்கங்களையும் சந்தேகங்களையும் மிகச்சிறப்பாகவும் சூட்சுமமாகவும் வெளிப்படுத்தி நின்றது என்பதே தமிழன்னையின் மனதில் தோன்றி நிற்கும் பாராட்டுக் கருத்தாகும்.


இந்த அருமையான கவியரங்கத்தை நேரில் காணும் வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்த இறைவனுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள். அத்துடன் அடிக்கடி என் வரவை உறுதி செய்த பவனுக்கும் கோடி நன்றிகள்..


இளைய லோஷன் ஹர்ஸுவின் குறும்புகள் ரசிக்க வைத்தன.. தந்தைக்காக மாலவன் அண்ணாவுடன் செய்த குறும்பு சண்டை அபாரம்..


நள்ளிரவு கடந்தும் என்னுடன் சில நிமிடங்களை செலவிட்ட சுபாங்கன் அண்ணா, ஆதிரை அண்ணா, மாலவன் அண்ணா ஆகியோருக்கும் என் அன்பின் அண்ணா லோஷன் அண்ணா குடும்பத்தினருக்கும் என் நன்றிகள்..


நன்றி
மீண்டும் சந்திப்போம்..,
என்றென்றும் அன்புடன்..,
Continue reading →
Wednesday, June 15, 2011

யாழ் - வற்றாப்பளை. ஒரு வரண்ட பயணம் (புகைப்பட தொகுப்பு)

7 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் வாசகர்களே,




I’m Celebrating World Bloggers’ Day 2011

Theme: The Roles of Bloggers




பதிவர்களுக்கு வாழ்த்துகள்..

மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அந்த மகிழ்ச்சி இப் பதிவில் நிச்சயம் இருக்காது. ஏனெனில் சிதைந்த மண்ணின் கதை பற்றிய புகைப்பட தொகுப்பே இன்றைய என் பதிவு.

கடந்த 13.06.2011 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த பொங்கல்,பூஜை நிகழ்வுகளுக்காக நானும் என் நண்பர்களும் திங்களன்று யாழில் இருந்து முல்லைத்தீவு புறப்பட்டோம். A9 வீதி ஊடாக மாங்குளம் வரை சென்று பின் முல்லைத்தீவு சென்றோம்.

வெள்ளையர்களிடம் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி நின்ற கோவில் அல்லவா அது..

ஆலயத்தில் இரவு முழுவதும் தங்கி மறுநாள் (14.06.2011) காலையில் மீண்டும் யாழ் திரும்பினோம் புதுக்குடியிருப்பு வீதி வழியாக..
இந்த வீதியுடனான பயணம் தந்த வேதனைகள் சொல்லிலடங்காதவை.. நாம் அன்று பார்த்த இடம்தானா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தன அவற்றின் நிலை. இவ்வேதனைகளை வார்த்தையில் சொல்வதை விட பார்த்து உணர்வது சிறந்தது.

முறிகண்டியில் இலங்கைப் பாடகர் திரு.ரகுநாதன் அவர்களுடன் எதிர்பாராத சந்திப்பு.

மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில்..

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஒட்டுசுட்டான் சந்தியில் வீதி விளக்கப்படம்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்


ஊற்றாங்கரை பிள்ளையார் கோவில்(தண்ணீர் ஊற்றுப் பிள்ளையார்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய காட்சிகள்.

ஆலய முகப்பு

நந்திக்கடல் (நேரம் மாலை 07.00)

                           
விமானப்படையினர் மேற்கொண்ட பூக்கள் சொரியும் நிகழ்வின் காணொளி..


நந்திக்கடலில் சூரியோதயம் (நேரம் காலை 06.20)


புதுக்குடியிருப்பு - அநாதைகளாக இங்கு இவைகளும் வெளியில் மக்களும்

செல்வந்த பூமியின் இன்றைய நிலை.



குண்டுகளால் எங்களை எதுவும் செய்ய முடியாது..இது நம்ம ஏரியா..


படைகளின் சேதமடைந்த சொத்துகள்


குறிப்பு :- இது ஒன்றும் அரசியல் ரீதியில் அமைந்த பதிவு அல்ல.. ஒரு யுத்தம் நடந்த பூமியின் உண்மைத் தோற்றத்தை உலகறிய செய்யும் முயற்சி மாத்திரமே.

படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அவற்றை தனித்தனியே க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவிலொரு பாடல்.
இன்றைய பதிவில் பகிரவுள்ள பாடல் 1970ல் வெளிவந்த “என் அண்ணன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலொன்றாகும்.
மக்கள் திலகம் M.G.R அவர்கள் நடித்த இத்திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு K.V.மகாதேவன் அவர்கள் இசையமைக்க T.M.சௌந்தரராஜன் பாடிய “கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே..” என்ற பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்பாடல் பற்றி என் முகப்புத்தகத்தில்..,

சரி நண்பர்களே நாம் மீண்டும் சந்திப்போம் மற்றொரு பதிவில்..,
நன்றி
என்றென்றும் அன்புடன்


Continue reading →
Friday, December 10, 2010

வீதிகளும்(ளில்) விதிகளும்...

6 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இது என் இன்றைய இரண்டாவது பதிவு...(பதிவேற்ற அதிகாலையாகி விட்டதே...) இதற்கு முன் தந்த பதிவு என் நண்பனின் பார்வையில் வந்தது....இப்போது வரும் இப் பதிவு என் பார்வையில் பட்ட விடயம் பற்றி பேச உள்ளது....

யாழ்ப்பாணத்தில் இவ்வருட ஆரம்பத்திலேயே ஆரம்பித்த பணி வீதிகள் அகலமாக்கல் செயற்பாடு...! தொடங்கிய போதே பல சர்ச்சைகள் எதிர்ப்புகள்...இருப்பினும் மக்களுக்கு நன்மை தரும் விடயம் இது என்பதாலோ அல்லது அரசியல் செல்வாக்கோ இவ் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கின..வழக்குகள், தீர்ப்புகள் என இழுபட்டு பின் எப்படியோ ஒரு மாதிரியாக ஆரம்பித்த அகலமாக்கல் பணி முதலில் யாழ்-பருத்தித்துறை வீதியில் வல்லை வெளிக்கும் ஆவரங்காலுக்கும்(2km) இடைப்பட்ட வீதியை அகலமாக்கியது...பின் புத்துார் வரை விரிவாக்கப்பட்ட இச் செயற்பாடு முழுமையாக நிறைவேற வெறுமனே 3 மாதங்களாகின....
ஆனால் அதை தொடர்ந்து இப்பணிகளின் வேகம் ஆமை வேகத்தை மிஞ்சியது...கிட்டத்தட்ட இவ்வருடத்தின் வைகாசி-ஆனி மாத காலத்தில் ஆரம்பித்த இன்று வரை முழுமையாக முடியவில்லை.... இதில் என்ன வேதனை என்றால் இதுவரை பூரணமான வீதியின் துாரம் கிட்டத்தட்ட 6km களே..(நீர்வேலி-வல்லை சந்தி) ஆனால் நீர்வேலியில் இருந்து கோப்பாய் வரை வீதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு சிறிது இடையுறு ஏற்படுத்தி வேலைகள் நடந்து வருகின்றன..
           சரி எல்லாம் ஒழுங்காதானே நடக்குது...உனக்கு இப்ப என்ன பிரச்சினை என்று நீங்க கேட்கிறது புரிகிறது...
பிரச்சினை என்னவென்றால் மழைகாலம் ஆரம்பித்து இப்போது உக்கிர நிலையில் இருப்பதுதான்....
வீதிகளின் அகலம் குறுக்கப்பட்டு இருப்பதால் குறிப்பிட்ட இடங்களில் வீதிகளில் பயணம் என்பது அந்தரத்தில் நடப்பதற்கு சமன்...! தேங்கி நிற்கும் வெள்ளம் வீதியை சாரதிகளுக்கு மறைக்கின்றன…அதிலும் மழை பொழியும் நேரம் என்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..!
இதற்கு சான்று, இங்கு நடக்கும் விபத்துகள்....
சித்திரை மாத ஆரம்பத்தில் காலையில் கொட்டும் மழையின் மத்தியில்  மினி பஸ் கவிழ்ந்து நடத்துனர் தலை நசிந்து மரணமான கொடூரம் உதாரணம்....
மரணங்களை சொத்தாக பிறப்பின் போதே வாங்கி வந்தவர்கள் யாழ் மக்கள் என்பதால் பின் நடந்த விபத்துகள் பெரிதும் உயிர் ரீதியான இழப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் உடமை சேதத்தினை ஏற்படுத்தியிருந்தன....
தனியார் சொத்துக்கள் மட்டுமன்றி அரச-பொதுச் சொத்துகளும் சேதமாகி இருக்கின்றன..இதற்கு உதாரணம் காட்டுவதாய் அமைந்ததே இவ் விபத்து....!(09/12/2012)
சில மாதங்களுக்கு முன் தொண்டைமானாறு-பருத்தித்துறை வீதியில் விபத்துக்கு பின் இடம்பெற்ற விபத்து இது.....
நீர்வேலி வில்லு வளைவினை அடுத்து வரும் சற்று தொலைவில் நேற்றுக்காலை 09.30 மணியளவில் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை தாண்டி முன் நோக்கி செல்ல முற்பட்ட போது வீதியில் காணப்பட்ட சதுப்பு தன்மையால் பயணிகளுடன் வந்த பேருந்து சரிந்தது...வீதி அருகில் இருந்த தென்னை மரம் தாங்கி கொண்டதால் பஸ் குடை சாயவில்லை...அப்படி நிகழ்ந்திருந்தால்......???

விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தின் பின் அவ்வழியால் நண்பருடன் மோட்டார் சைக்கிளில்-உந்துருளியில் யாழ்ப்பாணம் சென்ற போது சம்பவத்தை அறிந்ததும் என் கையடக்க தொலைபேசி “கிளிக்” செய்த புகைப்படம் இது.......



வீதி அகலமாக்கலில் வடமராட்சி பகுதியின் தற்போதைய நிலைவரங்கள் பற்றி பதிவர் ம.தி.சுதா அவர்கள் எழுதினால் பொருத்தமாய் இருக்கும் என எண்ணுகின்றேன்....!




வழக்கமாக என் பதிவோடு திருக்குறளையும் தரும் நான், இப் பதிவை தயாரிக்கும் போது இரவின் தனிமையை போக்கிய S.P.B, சித்ரா, K.J.யேசுதாஸ், உன்னிகிருஸ்ணன், ஹரிஹரன், மனோ, A.R.RAHMAN, S.ஜானகி, ஆகியோருக்கு நன்றி கூறுகின்றேன்..அத்துடன் ஒரு மனதை கவர்ந்த பாடல் வரிகள் முழுமையாக......

வாடா நண்பனே வேளாண்மை அன்பனே
பட்டணம் தாண்டி நாம் போகலாம் வா...
நாளை இந்தியா கிராமத்தில் உள்ளதாம்
அங்கு நாம் சென்று தான் பார்க்கலாம் வா...

இந்த ஏரோட்டம் இங்கே இல்லாம
பள பள பட்டண சாலையில் காரு ஓடுமா....
இங்க சேத்தோட கூத்து ஆடாம
பள பள five star hotel லில் பந்தி நடக்குமா...
ஏ...உணவோ உடையோ கொடுப்பது யாரு
நிலமென்னும் தாய்தானே...

பூ பூக்கும் வாழை புதுப்பொண்ண போல
பணிஞ்சு பணிஞ்சு பாக்குது..உன்ன குனிஞ்சு குனிஞ்சு பாக்குது..
விளைஞ்ச கரும்பு வளைஞ்சு நிக்குது..
கொழுத்த மனுசன் நிமிந்து நிக்கிறான்…
உப்பான மண்ணில் உற்பத்தி செஞ்சும்
விளைஞ்ச கரும்பு இனிக்குது.. அது புளிஞ்சா சக்கர கொடுக்குது...
கெட்டது செஞ்சும் கரும்பு இனிக்கும் நல்லது செய்ய மனசு கசப்பா…
மண்ண பொளந்தா ஒண்ணு கிடைக்கும்
ஒண்ண பொளந்தா என்ன கிடைக்கும்…
அட சாமி மறந்தும் பூமி கைவிடாது…
ஒரு முருங்க மரமும் பசுவும் போதும் ஏழை வாழ்வு நிறைஞ்சு போகும்..
அடடா ஒரு கலப்பை இருந்தா பொன்னும் மின்னும்....

நீ ஒரு நெல்ல போட்டா பல நெல்லு விளையும்
இதான் மண்ணின் ரகசியம்....
அது இயற்கை தந்த அதிசயம்...
வெவ்வேறு சாதி ஒண்ணாக சேர்த்தால்
ஒட்டு மாங்கனி கிடைக்குது..
இது எட்டு நாளைக்கு ருசிக்குது....
சில மலர்கள் செத்தும் மணக்கும்
நீ மறைந்தால் என்ன மணக்கும்...
அட மனிதா மனதில் கர்வம் வேண்டாம்...
ஒரு மலரும் செடியும் கொடியும் புல்லும் மனிதன் படிக்க பாடம் சொல்லும்…
அடடா அதை படிக்க உள்ளம் வெல்லும் வெல்லும்….!
Continue reading →
Wednesday, December 1, 2010

இப்படியும் பயணம்.............!

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இன்று மாலை 5.30 மணி இருக்கும்...! எனது கல்வி செயற்பாட்டை முடித்து நெல்லியடியில் அமைந்திருக்கும் esoft கணனி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக நெல்லியடி பஸ் நிலையத்தில் என் நண்பருடன் (தன்சயன்) நின்றிருந்தேன். சுமார் 15 நிமிடத்தின் பின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்வதற்காக (750 சாலை இலக்கம் கொண்ட பஸ்) வந்து நின்றது. நானும் என் நண்பரும் பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டோம்..அந்த நேரம் பஸ் நடத்துனர் பயணச்சீட்டு எடுப்பதற்காக எம்மிடம் வந்தார்..என் நண்பர் அச்சுவேலியில் இறங்க இருந்ததால் “ஒரு அச்சுவேலி ஒரு ஆவரங்கால்” என கூறி ரூபா 40 ஐ அவரிடம் நீட்டினேன் இரண்டு 20 ரூபாய் நோட்டுகளாக..
அவரும்
நெல்லியடி – அச்சுவேலி 18.00
நெல்லியடி – ஆவரங்கால் 20.00
        என்று பயணச்சீட்டு எழுதி எம்மிடம் தந்து விட்டு சென்று விட்டார்..(மீதி 02 ரூபாய் நாம் வழக்கமாய் கேட்பதில்லை..கேட்டால் கிடைப்பதுமில்லை..)
சரி என்று பயணத்தை ஆரம்பித்த நாம் இமையாணன்,வல்வை என்னும் இடங்களை கடந்து அச்சுவேலியை வந்தடைந்தோம்.. அங்கு என் நண்பர் இறங்கி விட நான் தனித்து பயணத்தை தொடர்ந்தேன்..

இந் நிலையில் ஆவரங்கால் சந்தி என்ற இடத்தில் இ.போ.ச பயணச்சீட்டு பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறினர்..வழக்கம் போல் பயணச்சீட்டை பரிசோதித்து கொண்டு வந்த அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார்..
பார்த்தவர் என்னிடம் கேட்டது.. “எங்க போறீங்க..??”
நான் “ஆவரங்கால்”
அவர் “ஆவரங்கால் எவடம்”
நான் “ஆவரங்கால் யுனியனடி(Union)”
அவர் “யுனியனடி???அப்படி எண்டா 06 ரூபாய்க்கு டிக்கட் எடு” என்றார்.
ஆசனத்தில் இருந்து சடுதியாக எழுந்த நான் “ஏன்?” என்று கேட்டேன்..
அவர் சொன்னார் “ஆவரங்கால் யுனியன் புத்துாரில் இருக்கு..அதால எடுக்கணும்” என்றார்..
நான் “இவடம்  எப்ப புத்துார் ஆனது..??” என்றேன் மறுபடியும்..
ஆடிப்போன அவர் மௌனமானார்...
நான் தொடர்ந்தேன்..
“நான் பிறந்து வளர்ந்தது இங்க…எனக்கு தெரியாம எப்படி??? எண்ட N.I.C ல கூட ஆவரங்கால் எண்டே இருக்கு...அப்படி இருக்க எப்படி இது புத்துார் ஆனது...??” என்று கேள்வி எழுப்பினேன்..
தடுமாறிப்போன அவர் சமாளிக்க முற்பட்டார்…
 இவ்விடத்தில் நீங்கள் அறிய வேண்டிய விடயம்..
ஆவரங்கால் புத்துார் எல்லை நான் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 100m தொலைவில் உள்ளது..
நான் பாடசாலை காலத்தில் பயணிக்கும் போது மாதாந்த பருவச்சீட்டில் ஆவரங்கால் என்றே பதியப்பட்டிருந்தது..
பாடசாலை காலத்தின் பின் தற்போது யாழ்ப்பாணம் செல்வதற்காக அதே யுனியனின் முன் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸில் புறப்படும் போது பஸ் நடத்துனர் ஆவ – யாழ்(ஆவரங்கால் – யாழ்ப்பாணம்) என்றே எழுதி 35 ரூபாய்க்கு பயணச்சீட்டு தருவார்..பணமும் பெற்று கொள்வார்..!
இப்படியாக இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் போது இவ்விடம் ஆவரங்கால் ஆக இருக்க (அதுவே உண்மை) நெல்லியடியில் இருந்து இங்கு வர மட்டும் இவ்விடம் புத்துாராக மாறுவது எப்படி....??? என்பது குழப்பத்துக்குரிய கேள்வியாகும்.
      சரி இனி விடயத்துக்கு வருவோம்..
அவரோ 06 ரூபாய்க்கு டிக்கட் எடுக்கும் படி கூறவும் நான் அதை மறுப்பதுமாக இருக்க நான் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது..
பஸ் சாரதியை நான் கேட்டு கொண்டதை அடுத்து பஸ் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டது..
எனினும் வாக்குவாதம் தொடர்ந்தது..
இந்நிலையில் சட்டென்று வீதியில் இருந்த கடையொன்றின் பெயர்பலகை என் கண்ணில் தட்டுப்பட்டது...அதை அவர்களிடம் காண்பிக்க பஸ்ஸில் அவர்களை நோக்கிய ஏளனச்சிரிப்பு உதிர்ந்தது... வெட்கிப்போன அவர்கள் சரி சரி தம்பி இதோட இத விடப்பா...என்று கூற நானும் பஸ்ஸில் இருந்து இறங்கினேன். அப்போது சாரதி என்னை பார்த்து “இதாண்டா சரி” என்ற  பொருளில் புன்னகைக்க பெருமிதம் என்னுள்....

      இப்படி உண்மை இருக்க ஏன் இந்த நடத்துனர்கள்,பரிசோதகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்...?
இப்படியான செயற்பாடுகள் நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கின்றது..இதை தடுக்க நாம் நம் பிரதேசத்தின் எல்லை,பரப்பு,வீதி அமைப்பு போன்ற விடயங்களை முறையாகவும் தெளிவாகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




பதிவில் ஓர் குறள்
குறள் 385:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு.

கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

மு. உரை:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

Translation:
A king is he who treasure gains, stores up, defends, 
And duly for his kingdom's weal expends.

Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
Continue reading →
Photobucket