எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, January 14, 2012

தமிழ் எழுத்தியல் துறையிலும் ஊடக துறையிலும் பெண்களின் பங்கு.

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

வணக்கம் நண்பர்களே,
எனது 50வது பதிவினுாடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் பதிவுலக ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களனைவருக்கும் என் நன்றிகள்.
என்னை பதிவெழுத துாண்டியவை லோஷன் அண்ணாவின் பதிவுகள். 
எனக்கு களம் அமைத்து தந்தவர் அன்புக்குரிய மதிசுதா அண்ணா
இவர்கள் இருவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

............................................................................................................................................................................................................................................................................................................

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இந்தியா செல்ல முடிந்தது. அங்கு இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட கருத்தமர்வுகளில் இருந்து பல விடயங்களை கற்க முடிந்தது. அவற்றில் ஒரு கருத்தமர்வில் பகிரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பதிவு தயாராகின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் எழுத்து துறையிலும் ஊடக துறையிலும் அதிகம் சாதித்து வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு என்று சமூகத்தில் இருக்கின்ற வாய்ப்புகளும் காரணமாக அமைகின்றன. ஆண் ஒருவன் சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு தகுதியுடையவன் என பலரும் நம்புவதால் ஆண் படைப்பாளிகளை இன்று நாம் அதிகமாக பார்க்கின்றோம். ஆணுக்கு நிகரானவள் பெண் என்பது நிஜம். அதனால் எந்த துறையாக இருந்தாலும் இன்று பெண்களும் அத்துறைகளில் ஆண்களுக்கு இணையாக கோலுச்சி வருகின்றனர். அந்த வகையில் இன்று இதழியல் துறையில் சாதிக்கும் பெண்களும் பலர் உள்ளனர். அத்துடன் ஆண் இலக்கிய வாதிகள் பெண்களின் பெயர்களை தம் படைப்புகளில் புனை பெயராக கொண்டு எழுதி வருகின்றனர் என்பதன் ஊடாக பெண்கள் இலக்கிய படைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றதல்லவா?

பேராசிரியை தாயம்மாள் அறவாணன்

பெண்கள் பாரதியின் புரட்சிக்கு பின்னர்தான் சமூகத்தில் சாதிக்க வந்தனர் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும் இலக்கிய துறையிலும் இதழியல் துறையிலும் பெண்கள் தமது படைப்பாற்றலை சங்க காலத்திலேயே ஆரம்பித்து விட்டனர். சென்னை பல்கலைகழகத்தில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகின்றது.

நுால்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவரும் கொங்கு பத்திரிகையின் ஸ்தாபகராக விளங்குபவருமான பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பேராசிரியரும் தொடர்பியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியாராவார். கணவரின் இலக்கிய பயணத்திலும் கல்வி பயணத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23 நுால்களை இதுவரை வெளியிட்டு உள்ளார். இவற்றில் சிலப்பதிகாரத்தில் வாய்மொழி கதை, ஔவையார் நுால் என்பன பெருமை பெற்றவையாகும். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக சக்தி விருது, ஔவை விருது முதலிய விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலம் முதல் இன்று வரை உள்ள பெண் கவிஞர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர் தனது ஆய்வினை அடிப்படையாக கொண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது கருத்துரையை நிகழ்த்தினார். சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் அமைந்த பாடல்களில் பல பாடல்களை அக்காலத்தில் இருந்த பெண் கவிஞர்கள் பாடியுள்ளனர். அக்காலத்தில் இருந்த 473 புலவர்களுள் சுமார் 45 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கற்றுத் தேர்ந்த புலவர்களும் இருந்தனர். சாதாரணமான பெண்களும் இருந்தனர். குறத்தி இனத்தை சேர்ந்தவர்களும், பானை செய்யும் பெண்களும், சேலை துவைக்கும் பெண்களும் கூட கவிதாயினிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக குறத்தி இனத்தை சேர்ந்த இளையோதி, குளையோதி ஆகிய பெண் புலவர்களை குறிப்பிடலாம்.

சங்க காலத்தில் கவிபுனைய ஆரம்பித்த பெண்கள் தொடர்ச்சியாக கவிபுனைவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். அந்த வகையில் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மங்கையற்கரசியார் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் புலவர்கள் தோன்றிய வண்ணமே இருந்தனர். இவர்கள் ஆண் புலவர்களுக்கு சவாலாகவும் அவர்களின் கவித்துவத்திற்கு இணையாகவும் பாடல்களை பாடி வந்துள்ளனர். இவர்களில் புலமைப்போரில் ஈடுபட்ட ஔவையாரை இவ்விடத்தில் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும்.


பிற்பட்ட காலத்திலே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கவிஞர்களாக இருந்த ஜானகி அம்மையார், லட்சுமி அம்மையார் ஆகிய இருவரும் பெண் கவிஞர்களுள் முதன்மை பெறுகின்றனர். இவர்களில் லட்சுமி அம்மாள் வியாசட்ட முறையில் அதாவது ஒரு வரியில் அமைந்த விடயத்திற்கு நீண்ட தெளிவான விளக்கம் தருவது வியாசட்ட முறையாகும். அந்த வகையில் வியாசட்ட முறையில் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு தெளிவான பொருளுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஒரே ஒரு பெண் லட்சுமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து 19ம் நுாற்றாண்டின் பெண் கவிஞர்கள் பற்றி பார்த்தால் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். 1909ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆவண காப்பகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண்கள் பற்றிய தகவல்களை அறிய முடிந்ததாக குறிப்பிட்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் அன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால் தான் இன்றைய பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் சுமார் 107 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

பெண் கவிஞர்களின் தோற்றத்தில் அவர்களின் இளவயது திருமணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. கணவன் இறந்த பின் அப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு கல்வி கற்பித்தலை ஊக்குவித்ததால் அப்பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ந்தனர். பின் சமூகத்தின் மீதான அவர்களின் பார்வை அகல விரியவே அவர்கள் கவிஞர்களாக மாறினர்.

விழுப்புரம் அகலாம்பிகை என்ற பெண் சிறுவயதிலேயே விதவையானவர். பின் இரட்டணை என்ற ஊரில் தங்கியிருந்து ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யாப்பு நயம்பட பல்வேறு கவிதைகளை வெளியிட்டார். இவரின் சிறப்புக்குரிய படைப்பாக மகாத்மா காந்தி தொடர்பாக இவர் எழுதிய ஏழு காண்டங்களை கொண்ட நுால் விளங்குகின்றது.
பத்மாவதி, கிருஸ்ணவேணி ஆகிய சகோதரிகள் கும்மியடிக்கும் பெண்களாக விளங்கினர். இவர்களிடம் இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற இசை அறிவின் காரணமாக இவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் இசயோடு இணைந்து காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண பெண்ணாகிய சம்பூர்ணம் என்பவர் சமையல் செய்து கொண்டே தமயந்தி நாடகம் தொடர்பாக கவிதைகளை எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வை.மு.கோதைநாயகி

இவ்வாறாக பெண்கள் கவித்துறையில் சாதித்தது மட்டுமன்றி பல பெண்கள் இன்றும் ஊடக துறையில் சாதித்த வண்ணம் உள்ளனர். தமிழ் மொழியே தெரியாத வை.மு.கோதைநாயகி என்ற பெண் கணவரின் துணையோடு நின்று 15 நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த ஜெகன்மோகினி பத்திரிகையின் ஸ்தாபகராகவும் இப்பெண் விளங்கியுள்ளார். அத்துடன் பல பெண்கள் நாடு கடந்து சென்றும் பத்திரிகை துறையில் செயற்பட்டிருக்கின்றனர். இன்றைய தமிழ் பெண் பத்திரிகையாளர்களின் கதாநாயகிகளில் முக்கியமானவர் இலங்கையின் மலையத்தில் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக கணவருடன் இணைந்து போரிட்ட மீனாட்சியம்மாள் நடேசையர் அவர்கள்.
மீனாட்சியம்மாள் நடேசையர்

இந்திய வம்சாவளி மக்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்திரிகைகள் ஊடாக குரலெழுப்பி வந்த நடேசையர் அவர்களை ஆங்கில அரசு தடை செய்த போது அங்கிருந்து இலங்கை வந்து மலையக வாழ் இந்திய மக்களுடன் இணைந்து வாழ்ந்து அவர்களுக்கான உரிமைகளை தேடியறிந்து அதனை பெற்றுத்தருவதற்காக பத்திரிகைகளை உருவாக்கினார். கணவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இங்கு பெண்களுக்கான உரிமை போரிலும், மக்களின் விடுதலை போரிலும் தன்னையும் இணைத்து கவிதைகளை எழுதியதுடன் வீடு வீடாக சென்று பாரதியார் பாடல்களை பாடி புரட்சி தீயினை வளர்த்தார். இவர் மாறுவேடம் பூண்டு நடாத்திய பத்திரிகைகள் தேச நேசன், தேச பக்தன், உரிமைப்போர், தொழிலாளி, சுதந்திர போர் என்பனவாகும்.

நன்றி இணையம் www.fashioner.com

இவர்களின் வழித்தோன்றல்களாக இன்றைய பெண் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சவால் மிக்க இன்றைய ஊடக துறையில் இவர்களின் பணி மெச்சத்தக்கது. இன்றைய நாளில் பெண் ஊடகவியலாளர்கள் சாதிப்பதை விட சவால்களையே அதிகம் சந்திக்கின்றனர். பாலியல் ரீதியான அழுத்தங்கள், ஆணாதிக்கம் என்பன இவர்களை கட்டுப்படுத்தும் காரணிகளில் முதன்மை பெறுகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் தமக்கான பாதுகாப்பு வேலிகளாக கொண்டு இத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை நாம் பாராட்டியேயாக வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமன்றி மேன்மையானவர்கள் அதனை நாம் உணர வேண்டும். மோசமான படைப்புகள் பல பெண்களின் புனை பெயர்களின் வெளிவரும் இன்றைய சவால் மிகுந்த காலத்தில் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பெண்கள் இலக்கிய படைப்பாற்றலிலும், ஊடகத்துறையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாகவும் அமைகின்றது.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,

Leave a Reply