எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, June 4, 2011

“பாடும் நிலா”விற்கு வாழ்த்து பதிவு

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இன்று தன் 65வது அகவையில் கால் பதிக்கும் “குரல் மார்க்கண்டேயர்” “பாடும் நிலா” S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...


கற்கண்டு கொண்டு தூரிகை செய்து.... அதைத் தேனிலே நனைத்தெடுத்து...வான் அலைகளில் வரையப்படும் ராக ஓவியம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்....

காற்றின் மேடையிலே நர்த்தன அற்புதம் நிகழ்த்தும்
ராக வசீகரம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்....

1946 ஜுன் மாதம் 04 திகதி இந்தியாவின் ஆந்திர பிரதேசம்,நெல்லுார் மாவட்டம், கோனேதம்மபெட்டாவில் உதித்த இசை நிலவே நம் பாடும் நிலா S.P.பாலசுப்ரமணியம் (ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்).
தந்தையார் S.P.சாம்பமூர்த்தி இவர் ஹரிஹதா இசைக்கலைஞர் ஆவார். 
S.P.B க்கு 2 சகோதரர்கள் 5 சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரே பாடகி S.P.சைலஜா.
இவரின் மனைவி சாவித்ரி. பிள்ளைகள் S.P.B சரண், S.P.B பல்லவி.

இசையுலகம்.
1964ம் ஆண்டு தெலுங்கு காலச்சார மையம் நடாத்திய இசைப்போட்டியில் அப்போது பொறியியல் மாணவனாக இருந்த S.P.B பங்குபற்றி முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
“நிலவே என்னிடம் நெருங்காதே..” என்ற P.B.சிறீநிவாஸின் பாடல் அவரை திரையுலகிற்குள் தெரிவு செய்து அழைத்து வந்தது.

1969ல் தமிழில் அறிமுகமாகிய எஸ்.பி.பி முதலில் பாடிய பாடல் அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புலமைப்பித்தனின் வரிகளுக்கு M.S.விஸ்வநாதன் மற்றும் K.V மகாதேவன் இணைந்து இசையமைத்த “ஆயிரம் நிலவே வா..”பாடலாகும். இப்பாடலை P.சுசீலா அவர்களுடன் இணைந்து பாடினார் S.P.B


இருப்பினும் முதலில் வெளியாகிய பாடலாக 1969ல் வெளியாகிய சாந்தி நிலையம் திரைப்படத்தின் கண்ணதாசனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த “இயற்கை என்னும் இளைய கன்னி..” பாடல் அமைந்தது.


தொடர்ந்து R.K.சேகர் அவர்களால் மலையாள திரையுலகிற்கு கடல் பாலம்(1969) திரைப்படத்தின் “இன்கடலும் மறுகடலும்..”என்ற பாடலுாடாக அறிமுகமானார்.இவர் பல்வேறு மொழிகளிலும் தொடர்ச்சியாக அறிமுகமாகி பிரபலமடைந்து வருகையில் இந்தி திரையுலகம் தேசிய விருதுடன் இவரை வரவேற்றது. 1981ல் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய Ek Duuje Ke Liye திரைப்படத்தில் பாடிய முதல் ஹிந்தி பாடலே 2வது முறையாகவும் தேசிய விருதை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.


இவரின் தனிப்பட்ட சாதனைகள் என குறிப்பிடும் போது ஒரு தினத்தில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை 1976ல் கர்நாடக இசையமைப்பாளர் உபந்திராவின் இசையில் மேற்கொண்டார். இதில் 15 பாடல்கள் ஜோடிப்பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இதுவரை 15 மொழிகளில் 52,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.இது கின்னஸ் சாதனையும் கூட..


ஒரு திறமையான பாடகர் என்பதைக் கடந்து S.P.B அவர்கள் நடிகராகவும்,இசையமைப்பாளராகவும்,பின்னணி குரல் கொடுப்பவராகவும் மிளிர்ந்துள்ளார். 1969ல் Pellante Noorella Panta என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய இவரை தமிழில் நடிகராக்கி வைத்தார் இயக்குனர் சிகரம் 1987ல் தன் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தினுாடாக..


இதுவரை 70 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதில் 23 தமிழ் திரைப்படங்களும் 37 தெலுங்கு திரைப்படங்களும் 08 கர்நாடக திரைப்படங்களும் 01 மலையாள திரைப்படமும் உள்ளடங்குகின்றன.
தன் பாடகர் அனுபவத்தை கொண்டு இசையமைப்பாளராக அறிமுகமாகியது 1977ல் தெலுங்கில் கன்யகுமாரி என்ற திரைப்படத்தினுாடாக.. தமிழில் ரஜனிகாந் ன் துடிக்கும் கரங்கள் திரைப்படம் மூலம் 1983ல் கால்பதித்தார். S.P.B இதுவரை 47 திரைப்படங்களுக்கு இசை வழங்கியுள்ளார். அதில் 05 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இறுதியாக உன்னை சரணடைந்தேன்(2003) திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

         சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்.. - துடிக்கும் கரங்கள்

பின்னணிக்குரல் கலைஞராக கமல்ஹாசன்,அர்ஜுன் சர்ஜா முதலிய பல நடிகர்களுக்காக பிற மொழிகளில் குரல் கொடுத்துள்ளார். இன்றும் தெலுங்கு மொழியில் கமல்ஹாசனுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகின்றார். மேலும் 1997ல் அன்னமயா திரைப்படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான நந்தி விருதை வென்றெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

விருதுகள் & அங்கீகாரங்கள்.
பாடும் நிலா அவர்கள் தன் குரலினால் குவித்த விருதுகள் ஏராளம் ஏராளம்..அவற்றில் 24 நந்தி விருதுகளும்(21 பாடகர், 01 இசையமைப்பு, 01 டப்பிங், 01 துணைநடிகர்) 03 Film Fare விருதுகளும் இவை அனைத்துக்கும் கிரீடமாக 06 தேசிய விருதுகளும் அவரை அலங்கரித்துள்ளன.
Film Fare விருதுகள் மூன்றும் Maine Pyar Kiya (1989-ஹிந்தி) திரைப்படத்தின் “தில் தீவானா..” பாடலுக்கும், Sri Ramadasu (2006- தெலுங்கு) படத்தின் “அடிகடுகோ..” பாடலுக்கும், 2007ல் தமிழின் மொழி திரைப்படத்தின் “கண்ணால் பேசும் பெண்ணே..” பாடலுக்காகவும் வழங்கப்பட்டன.


தேசிய விருதுகள்.
* Dr.K.விஷ்வானந் இயக்கத்தில் 1979ல் வெளியான சங்கராபரணம் என்ற தெலுங்கு திரைப்படத்துக்காக முதல் தேசிய விருது கிடைத்தது S.P.Bக்கு..ஆனால் இப்பாடலுக்கான கர்நாடக சங்கீத அறிவு அப்போது S.P.B யிடம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்..கேள்விஞானத்திலேயே இப்பாடலை அவர் பாடியிருந்தார்.
                         K.V.மகாதேவனின் இசையில் ”ஓம்கார நாதானு..”*1982ல் கமல்ஹாசன்,ரதி,மாதவி நடித்த K.பாலசந்தரின் Ek Duuje Ke Liye திரைப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த் பக்ஸியின் வரிகளுக்கு லக்ஷ்மிகாந் இசையமைத்த தேரே மேரே பீச்சுமே..(Tere Mere Beech Mein) பாடல் இரண்டாவது தேசிய விருதை பெற்றுத்தந்தது.


*மீண்டும், தெலுங்கில் 1984ல் வெளிவந்த Dr.K.விஷ்வானந் இயக்கத்தில் கமல்ஹாசன்,ஜெயபிரதா நடித்த சாகர சங்கமம் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் விருதி சுந்தர ராம மூர்த்தியின் வரிகளுடன் இடம்பெற்ற “வேதம் அனுவன நாதம்..” பாடல் மூன்றாவது விருதை பெற்று தந்தது. இப்படத்துக்காக இளையராஜாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


*மீண்டும் இளையராஜவின் இசையில் 1989ல் ருத்ர வீணை (தெலுங்கு) திரைப்படத்தின் “செப்பாலனே உந்தி..” பாடலுக்காக நான்காவது தேசிய விருது..
பாடல் வரிகள்- சிறீ வெண்ணில சீதாராமா சாஸ்திரி


* அதனை தொடர்ந்து ஹம்சலேகாவின் இசையில் 1996ல் வெளியான Ganayogi Panchakshari Gavayi (கர்நாடகம்) திரைப்படத்தின் “உமண்டு குமண்டு கன கார..” பாடலின் நெளிவு சுழிவுகள் ஐந்தாவது தேசிய விருதை பாடும் நிலாவிற்கு பெற்றுக்கொடுத்தது..


* 6வது தேசிய விருது.. இளையவரான இசைபுயலின் இசைவடிவில் உருவான பாடலுக்காக கிடைத்தது.. 1998ல் மின்சாரகனவு திரைப்படத்தின் “தங்கத்தாமரை மலரே..” பாடலுக்காக விருது வழங்கப்பட்டது. இதுவே இவரின் தமிழ் பாடலுக்கான முதல் தேசிய விருதாகவும் அமைந்தது.

இவ்வாறு விருதுகள் பல பெற்ற இவருக்கு மேலும் 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் 1999,2009,2010 ஆகிய ஆண்டுகளில் டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டதோடு 2001ல் பத்ம ஸ்ரீ விருதும் 2011ல் பத்ம பூஸன் விருதும் இந்திய அரசால் வழங்கி கௌரவம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2009ல் ஆந்திர பல்கலைக்கழகம் “கலாபரபூர்ண” என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.


40 ஆண்டுகள் இசையுலகில் இருந்தாலும் இன்றும் சலிக்காமல் அதே இளமைக்குரலில் பாடும் S.P.B ஐ ரசிகர்கள் பாடும் நிலா என செல்லமாக அழைப்பர். இதற்கு சரியான விளக்கத்தை வைரமுத்து முன்வைத்தார். 
“பாலு பாட ஆரம்பித்தது நிலா பாட்டில்.. அதை தொடர்ந்து நிலவை காதலித்தார்,காமுற்றார்,வெறுத்தார், ஆனாலும் நிலா அவரை வெறுப்பதாக இல்லை.. அதிக நிலா பாடல்களை பாடியிருப்பதால், பாடுவதால் இவருக்கு ”பாடும் நிலா” எனும் பெயர் களங்கமல்லாத பொருத்தம்” என்றார்


இன்று தன் 65வது அகவையில் காலெடுத்து வைக்கும் அந்த இளைஞனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளை இப்பதிவின் ஊடாக தெரிவிக்கின்றேன். 


கடந்த வருடம் வெற்றி Fm ல் பாடும் நிலாவின் பிறந்த தினத்திற்கு வாழ்த்தி கூறிய கவிதை ஒலிகோப்புகளால் மெருகேற்றப்பட்டுள்ளது.. கேட்டுப்பாருங்களேன்..குறிப்பு :-  பாடும் நிலாவின் பாடல்களில் என் தெரிவுகள் பற்றிய பதிவு விரைவில் வர உள்ளது.


நேற்று கொழும்பு நகரின் முதல்நிலை வானொலியாக வெற்றி Fm தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.. எல்லையற்ற மகிழ்ச்சி..தொடர்ந்தும் இணைந்திருப்போம்.


அத்துடன் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள சமூக பணியாகிய வெற்றியின் மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்கு வாழ்த்துகளையும் வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. அனைவரும் ஆளுக்கொரு மரம் அவரவர் இல்லங்களில் அல்லது அலுவலகங்களில் நாட்டுமாறு என் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்..
                                                   நாளைய பசுமை..இன்றைய நாளில்..


நன்றி மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்,


5 Responses so far

 1. உங்கள் பதிவு மூலம் S.P.B கு என் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்கிறேன்....

 2. Bavan says:

  SPBக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:-))

  வெற்றிக்கும் இனிய வாழ்த்துக்கள்..:-))

 3. sinmajan says:

  எல்லாப் பாடல்களையும் கேட்டாச்சு.. :) தரமான தொகுப்பு..
  தொடர்ந்து கலக்குங்கள்.

 4. சூப்பர் பதிவு

  வாழ்த்துக்கள்

 5. டினு அண்ணா, நண்பன் பவன், சின்மயான் அண்ணா, துஷ்யந்தன் அண்ணா அனைவருக்கும் நன்றிகள்..

Leave a Reply