எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, June 24, 2011

கவியரசு மற்றும் மெல்லிசை மன்னர்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
தமிழ் திரையுலகு இன்று இந்நிலையில் உலகெங்கும் பேசப்படுவதற்கு சிறந்த அத்திவாரமிட்டவர்களில் முக்கியமானவர்களில் இருவரான அமரர் “கவியரசு”கண்ணதாசன், “மெல்லிசை மன்னர்” M.S.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்த தினங்கள் இன்றாகும்..

காலத்தால் அழியாத பாடல்கள் பலவற்றை எமக்களித்த இருவருக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...



இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் என்னைக்கவர்ந்த சில பாடல்கள் இதோ...


1. அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா...

வரிகள்- கவியரசு கண்ணதாசன்
இசை- மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்
படம் - மன்னாதி மன்னன்

வீர உணர்வை கூறும் இப்பாடலுக்கான இசை இன்றும் மனதில் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப கூடியதாகவே உள்ளது..



2. மாலை பொழுதின் மயக்கத்திலே... படம்- பாக்கியலக்ஸ்மி

3. படம்- தை பிறந்தால் வழி பிறக்கும் (1959)
பாடல்- ஆசையே அலை போல நாமெல்லாம் அதன் மேலே...
இப்பாடலானது கண்ணதாசனின் வாழ்வியலில் இருந்தே பாடல் வரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில் இப் பாடலுக்கான காட்சியமைப்பு, கதையமைப்பு என்பவற்றை கேட்டபின் காரில் வீடு திரும்புகின்றார் கண்ணதாசன்.
வரும் வழியில் ஒரு பாலத்தின் மேல் அவரின் கார் நிற்கின்றது. அந்த நேரத்தில் அவரின் கண் ஆற்றை பார்வையிட பாடல் எண்ணம் தோன்றுகின்றது. சட்டென ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதில் வரிகளை குறித்து வைத்துக் கொண்டார். இசை கோர்வையின் பின் இப்போதும் எம் செவிகளில் ரீங்காரம் இடும் இப்பாடலுக்கான இசையை M.S.V அவர்கள் வழங்கவில்லை என்பது சுவாரஸ்யம்..


4.படம் - சூரியகாந்தி
பாடல்- பரமசிவன் கழுத்திலிருந்து...
இன்றும் கண்ணதாசன் என்றால் சட்டென ஞாபகத்தில் வருவது இப்பாடலேதான்.. இப்பாடலின் மற்றொரு சிறப்பு கண்ணதாசன் முதல் முறையாக திரைப்படமொன்றில் நடித்த பாடலாகவும் இதுதான் விளங்குகின்றது.
இப்பாடலில் என் மனம் கவர்ந்த வரிகள்..-காலத்தின் நிலையை உணர்த்தி நிற்கும் வரிகள்..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்..
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..


5.இரு காதல் உள்ளங்களின் உள்ளக்கிடக்கையை பாடலில் கொண்டு வரும் கலையறிந்தவர் கண்ணதாசன் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் அமைந்த பல பாடல்களில் ஒன்றுதான் பாலும் பழமும் திரைப்படத்தின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. என்ற பாடலாகும்..
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்..


6. படம்- சுமைதாங்கி
பாடல்- மயக்கமா..கலக்கமா...
துன்பங்கள் சோகங்கள் வாழ்க்கையை வாட்டும் போது விரக்தியின் விளிம்பில் நிற்கும் எங்களுக்கு ஆறுதல் தந்து கரையேற்றி விட சில ஆலோசனைகள் வேண்டும். அப்படியான தேற்றல் வாக்கியங்கள் பலவற்றை கொண்ட இப்பாடல் மிகவும் என்னை கவர்ந்த பாடல்களில் ஒன்று.


ஒரு மனிதனுக்கு அவன் என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் துன்பம் என்ற ஒன்று வந்து விட்டால் முதலில் மயக்கம், பின் என்ன செய்வது என்ற கலக்கமும் குழப்பமும் வரும். குழப்பநிலை மோசமடைகையில் வாழ்க்கை நடுங்க ஆரம்பிக்கும்.. இத்தனை செயற்பாடுகளையும் ஒரு வசனத்தினுள் கொண்டு வந்து பின் அவற்றில் இருந்து விடுபட வேண்டிய தீர்வுகளை தொடர்ந்து முன்வைக்கும் அவரின் கவியழகு இன்றும் என்னை வியக்கவைக்கின்றது.
இப்பாடல் ஒருவரின் நிஜ வாழ்க்கையில் ஏற்படுத்திய மாறுதல்கள் பற்றிய தகவலை உங்களுடன் பகிர்கின்றேன்..
ஒரு கவிஞர் திரையுலகுக்கான வாய்ப்புகளை தேடி அலைந்த தருணம் அது. எந்த ஒரு கதவும் அவரின் கவிதைகளுக்காக திறக்கவில்லை. வேதனையின் உச்சியில் இனி கவிதை எழுதுவதில்லை என்ற விரக்திக்கே சென்று விட்டார். இந்நேரத்தில் தான் வீதியோரத்தில் இப்பாடலை கேட்கின்றார். புத்துணர்ச்சி பெறுகின்றார். வாழ்க்கையில் ஜெயிக்கின்றார். இன்று திரையுலகில் கவி மார்கண்டேயராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆம் கவிஞர் வாலி அவர்களேதான் இப்பாடலினால் பாடலாசிரியர் ஆனவர்.
இதோ பாடல்..


7.படம்- அவளுக்கென்று ஒரு மனம்
பாடல்- உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
கண்ணதாசன் அவர்கள் தான் எந்த அளவிற்கு தத்துவ பாடல்கள் எழுதுவாரோ அதே அளவிற்கு தரமான காதல் பாடல்களையும் தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளார் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்பாடலாகும்..
பாடலை முழுமையாக கேளுங்கள்... உங்களுக்கும் புரியும்..


8. காதலுக்கும் கண்ணதாசன் காதல் தோல்விக்கும் கண்ணதாசன் என்பார்கள்.. 100%உண்மை எனலாம். இப்பாடல் சோகத்துடனும் காதலுடனும் அமையும் பாடல் இதோ...
படம்- மூன்றாம் பிறை
பாடல் - கண்னே கலைமானே...


9. அடுத்த பாடல் பெண்மையை வர்ணிக்கும் விதமான பல பாடல்களுள் ஒன்று..
படம் - அலைகள்.
பாடல் - பொன்னென்ன பூவென்ன..
வரிகள் ஏலத்தில் விடப்பட்டால் தமிழே கடன் வாங்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன..


10. படம்- சரியாக தெரியவில்லை..
பாடல்- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..
என்னவோ தெரியவில்லை கேட்டவுடன் பிடித்து போன பாடல்களில் இதுவும் ஒரு இடத்தை பெற்றுக்கொண்டமை சூப்பர்.. ஜானகி அவர்களின் குரலுக்கு அடிமையாகிய எனக்கு இப்பாடலும் ஒரு வரமே..


குறிப்பு..- இப்பதிவை ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட மின்தடை இப்பதிவு முழுமையாக்கப்படுவதில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.. இப்போது முடிந்தவரை முழுமையாக்கி விட்டேன்...


நன்றி
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்...


2 Responses so far

  1. தடங்களிலும் பதிவு போடும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஜனகன்.

  2. Unknown says:

    தொகுப்பு அசத்தல் ஜனகன்...
    அருமையான பாடல்கள் also!

Leave a Reply

Photobucket