எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts
Saturday, December 31, 2011

உண்மை சொல்கின்றேன்..- 2011ல் என் காதல்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..

ஆரம்பமும் முடிவும் எப்போதும் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. அது தானாகவே நடந்து முடிகின்றன.
இன்று 2011 ஆம் இறுதிநாள்.. பல இன்பங்கள், சோகங்கள், மாற்றங்கள், வரவுகள், செலவுகள் என கடந்து வந்த வருடங்கள் தந்த அனைத்தையும் எமக்கு வழங்கியிருக்கின்றது இந்த 2011.
இதில் அரசியல் மாற்றங்கள், எதிர்பாதார நிகழ்வுகள், அதிர்ச்சி தரும் அம்சங்கள் என பல விடயங்களை மீள்பார்வைக்கு கொண்டு வரலாம்.
ஆனால் இந்த விடங்களை நாங்கள் மீண்டும் நினைக்கும் போது ஏதோ ஒரு வெறுப்பும், வேதனைகளும் வருவது தவிர்க்க முடியாதனவாகின்றன. வருடத்தின் இறுதி நாள் - புதிய வருடத்திற்கு இன்னும் ஒரு நாள் என்று இன்றைய டிசம்பர் 31ம் திகதி இருக்கின்ற நிலையில் 2012ஐ வரவேற்க தயாராகும் நாம் மகிழ்ச்சியுடன் 2011க்கு விடை கொடுத்தால் நல்லது தானே. ஆகையால் இப்பதிவு எப்போதும் எம் இன்பத்திலும் துன்பத்திலும் தோழனோடு சேர்ந்து துணை நிற்கும் பாடல்கள், திரைப்படங்கள் பற்றியதாக பேசி செல்லவிருக்கின்றது.

ஆம், 2011ல் வெளிவந்து என் மனதை கவர்ந்த 10 பாடல்களும், 10 திரைப்படங்களுமே இப்பதிவை அலங்கரிக்கவுள்ளன.
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன். நான் ஒரு அனுபவம் மிக்க விமர்சகன் அல்ல. ஆகையால் என் ரசனைகளை இங்கு கொட்டுகின்றேன். அதில் இந்த இலக்கங்கள் ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியால் போகின்றது.
இருப்பினும் இந்த இலக்கங்கள் தரவரிசைக்காக அல்ல என்பதை குறிப்பிட்டு சொல்லுகின்றேன்.

முதலில் பத்து பாடல்கள்.

10- உன்னாலே உன்னாலே...- ஒஸ்தி


இல்லை இல்லை இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும்
கடவுளை போலவே

தேவதையை கனவில் ஏங்கினேன் அப்போ

உன் விழியில் தெரியுதே ஏக்கமும் இப்போ
பூமழையே வானமே துாறுமே அப்போ.
உன் நினைவு துாறலா சேருதே இப்போ.
போன்ற யுகபாரதியின் வரிகளும் பாடலின் இசையும் கவர்ந்து விட அண்மையில் அதிகம் முணுமுணுத்த பாடலாகிப்போனது இப்பாடல்


இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து ரீட்டா பாடிய இப்பாடலின் காட்சியுருவாக்கமும் என்னை கவர்ந்ததும் மகிழ்ச்சி. தேவையற்ற இடைச்செருகலாக அல்லாமல் படத்துடன் ஒன்றித்த இப்பாடலில் சிம்பு மற்றும் ரிச்சா இருவரின் முகபாவங்களும் அருமை. (சிம்புவின் படத்தில் நாயகியை அதிகம் புடவையில் பார்த்ததும் இப்படத்தில்தான்..)


09- என்ன சொல்ல போறாய்..- வேங்கை

பாடலின் அனைத்து வரிகளும் பிடித்து போக ரசித்து கேட்ட பாடல்.
தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் M.L.R.கார்த்திகேயனின் குரலில் இருந்த உணர்வு என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
பாடல் காட்சியின் தேயிலை தோட்டங்களின் ரம்மியம், மிக இலகுவான சந்தத்திற்கேற்ற நடனங்கள் என பல விடயங்களினால் பிடித்து போன பாடலாக இப்பாடல் மாறிப்போனது.



08- குதிக்கிற குதிக்கிற..- அழகர் சாமியின் குதிரை.

இசைஞானியின் இளமை குரல்,அதில் இருந்த நளினம், எளிமையான பாடல் வரிகள், காட்சியமைப்பு என அனைத்து அம்சங்களினாலும் கவரப்பட்ட பாடல்.
நான் ரசித்து பார்த்த படங்களில் அழகர் சாமியின் குதிரை படமும் ஒன்று.
நடிகனுக்கு உரிய வரைமுறையை கடந்து சாதாரண மனிதனும் நடிகன்தான் என காட்டிய படம்தான் அழகர் சாமியின் குதிரை.



07- நீ கோரினால்..- 180

2011 முழுவதும் தன் வரிகளினால் ஆக்கிரமித்திருந்தவர் மதன் கார்க்கி எனலாம்.
கார்க்கியின் அழகிய வரிகளினால் கட்டுண்டு ரசித்த பாடல் இது.
என் மீதி பார்வை பிம்ம பூவே பட்டுப்போகாதே..
சரத்தின் இசையில் இடம்பெற்ற இப்பாடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மயக்கும் தன்மையை இன்றும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரினதும் குரல்களின் நளினமும் அருமை.



06- தம்பி தம்பி..- சங்கமம் இசைத்தொகுப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி மாணவர்களின் படைப்பில் உருவான சங்கமம் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் இது.
மாணவர்களின் குறும்புத்தனங்களையும் சொல்லி அவர்களுக்கு அறிவுரை தருவதாகவும் அமைந்த இப்பாடலின் வரிகள் அருமை.
மாணவன் மதீசனின் வரிகளுக்கு சத்தியன் இசையமைக்க ஜெகதீஸ் அருமையாக பாடியிருந்தார்.
பாடலை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.
இலங்கையில் இப்பாடலை வெற்றி பெற வைத்த வெற்றி வானொலிக்கும் நன்றிகள்.



05- முளைச்சு மூணு...- வேலாயுதம்

பெண்ணை வர்ணித்து களைத்து விட்ட கவிஞர்கள் இன்று எதை எதையோ கொண்டு வர்ணிக்க விவேகா காய்கறிகளை கொண்டு வர்ணித்தது இப்பாடல் பிடிக்க பிரதான காரணம்.
மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகாய்
கனிந்த காய் தோட்டம் நீதானா..?


சிரிப்பு கற்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கரு வண்டு அடி விழுந்தேன் அதைக் கண்டு.. - அடடடடா..


பிரசன்னா மற்றும் சுப்ரியா ஜோசி பாடிய பாடலில் பிரசன்னாவின் குரலின் நளினம் அழகு.. (அதிலும் பாவம் என் நெஞ்சு.. என்ற இடம்)



04- கம்பி மத்தாப்பு...- சேவற்கொடி

அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்



கவிப்பேரரசு வைரமுத்துவின் எளிமையான வரிகள் - பெண்ணின் ஒவ்வாரு செயலையும் கிராமிய காதலாக்கிய வரிகள் 
சத்தியாவின் தாளம் போட வைக்கும் இசையில் M.L.R. கார்த்திகேயன் தன்னை ரசிகர்கள் ரசிக்கும் பாடகராக நிலைநிறுத்திய பாடல்.

துாங்கி எழுந்தா பிள்ளை அழகு.. அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு..


03- ஜகிட தோம்...- தெய்வதிருமகள்

எந்த நேரத்திலும் உற்சாகம் தரும் பாடல் வரிகள். வரிகளை விழுங்காமல் பாடும் S.P.Bன் குரல் மற்றும் மாயா,ராஜேஸ் ஆகியோரின் இணைக்குரல்கள் என்பவற்றால் முதலில் கவர்ந்த பாடல் படம் வெளியாகிய பின்னர் காட்சியோடு இணைந்தும் பிடித்துப்போனது.
நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விலக்க ஒரு சூரியன் அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்..
இந்த வரிகள் நான் சோர்ந்திருக்கும் போது உற்சாகம் தந்தன. காலம் கடந்தும் என் மனதில் நிலைக்கும் பாடலாக இது மாறியது-மாறும் என்பதே உண்மை
இந்த வருடத்தில் நான் அதிகம் கேட்ட பாடலும் இதுதான்.



02- பட்டாம் பூச்சி..- காவலன்

பொதுவாகவே பாடல்களில் சந்திரன், நிலவு, நிலா முதலிய வார்த்தைகள் வந்தால் என்னமோ தெரியவில்லை உடனேயே எனக்கு பிடித்து விடும். அப்படி ஒரு பாடல்தான் இது. விஜயின் பாடல்கள் எல்லாமே பிடித்தாலும் இப்பாடல் மீது ஒரு தனி ஈர்ப்பு.
காரணம் பாடலை பாடிய இருவரின் குரலிலும் உள்ள வசீகரம். பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்பதில் வரிகளுக்கு இருக்கும் பங்கின் அதே அளவு பங்கு பாடகர்களிடமும் உள்ளது.
முகம் தெரியாத காதலிக்காக ஏங்கும் தன் காதலன்(பரீட்சை நேரத்திலும்) தன்னைப் பற்றியே தன்னிடம் கூறியதும் அவள் மனதில் தோன்றும் இந்த பாடல் படம் வரமுன்னமே பாடலின் இசை,வரிகள்,இவற்றுடன் K.K மற்றும் ரீட்டா வின் குரல் ஆகியவற்றால் கவர்ந்து நின்றது.

“ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்...”
“யானை தந்தத்தின் சிலை நீயே..தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே..” 

காட்சியில் விஜயின் முற்றுமுழுதான மாற்றம்,அசினின் அழகு (படம் முழுக்க அசின் நடிப்பிலும் அழகிலும் மீண்டும் அசர வைக்கின்றார்..) என்பன இன்னும் பாடல் மீதான காதலை துாண்டி விட்டது..!




01- யாரோ நீ....உறை விட்டு வந்த வாளோ.. - உருமி


மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்றோ
ஒளியோ ஒளியின் தெளிவோ பிளிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ..?
வைரமுத்துவின் வைர வரிகளுக்கு மீண்டும் ஒரு சாட்சி.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் பெரும்பாலும் இசையினால் வருடிச் செல்வது அன்றைய நாளில் இருந்து இன்று வரை தொடர்கின்றது. அதில் இப்பாடலும் ஒன்று.
ஹரிகரனின் காந்த குரலுடன் ஸ்வேதா மோகனின் காதல் குரல் இணையும் போது பாடலில் ஒரு ஏகாந்த சுகம் இணைகின்றது.
பாடலின் ஆரம்ப இசை எம்மை ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க முடியாதது. ஆனாலும் கதைக்களம், பாடல் படமாக்கப்பட்ட விதம் இதனை நிருபித்து விட்டது.




காதல் பூக்களின் வாசம் உன் கூந்தல் எங்கிலும் வீசும்
பார்வைகள் எனும் படையெடுப்பாலே பாதத்தில் விழுந்திடும் தேசம்
எனை வெல்லும் பாகம் மிக பெரிது நான் தோற்கும் பாகம் மிகச்சிறிது..
காமம் தாண்டிய முனிவனும் உனது கண்களை தாங்குதல் அரிது..
உன் அழகினால் எனை அழிக்கிறாய்.. நீ ஆடை கொள்ளும் பெண் நெருப்பா..??ஆஹா. என்ன வரிகள் கவிஞரே..


இந்த பாடலின் காட்சியமைப்பையும் மலையாள வடிவத்தையும் பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியினுாடக சென்று பார்க்கவும்..
Urumi Song - Aaro nee aaro

சரி நண்பர்களே.. இவை மட்டுமன்றி இன்னும் பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தாலும் 2012க்கும் நான் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்றால் அவை இவைதான்.
மேலும் நண்பன் திரைப்படத்தின் பாடல்களில் அஸ்க் லஸ்கா..., இருக்காண்ணா.., என் ஃப்ரண்ட போல.., All Is Well ஆகிய பாடல்களும், 3 திரைப்படத்தின் நீ பார்த்த விழிகள்.. பாடலும் என்னை கவர்ந்துள்ளன. இவை 2012ன் பாடல்களின் வரிசைக்குள் இடம்பெறும் என நம்புகின்றேன்.

முடிந்தால் இன்றிரவு மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன். அல்லது மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.



நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,


Continue reading →
Tuesday, July 12, 2011

கவிதையும் கவிதை சார்ந்த இடமும்…வைரமுத்து

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
கடலில்தான் முத்து கிடைக்குமாம்..! ஆனால் மழை வேண்டி வானம் பார்த்திருக்கும் தேனி மாவட்டத்திலும் ஒரு முத்து கிடைத்தது. ஆம் இரு விலையுயர்ந்த கற்கள் ஒன்றாக சேர்ந்து வடுகபட்டியில் வைரமுத்தானது. பாரதிக்கு பின் தமிழை நேசித்த கவிஞனும் இவரே, தமிழ் நேசித்த கவிஞரும் இவரே..


அவரின் சமூகச் சூழல், வாழ்க்கை கோலம், சிந்திய வியர்வை,ரத்தம் என்பன சேர்ந்து ஒரு கவிஞனாக இவரை மாற்றிப்போட்டது. தமிழ் கவிதை உலகிலே தன் பத்தொன்பதாவது வயதில் “வைகறை மேகங்கள்” ஊடாக கால்பதித்தார். தொடர்ந்து இவர் எழுதிய “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” இவரின் வாழ்க்கை பாதையையே திருப்பிப் போட்டது எனலாம். ஆம், இந்த கவிதை நுால் தான் வைரமுத்துவை பாரதிராஜாவுக்கு அடையாளம் காட்டி நின்றது. பாரதிராஜா 1980ல் தயாரித்த நிழல்கள் திரைப்படத்தில் கன்னிப்பாடல் எழுதினார் வைரமுத்து. இப்பாடலை எழுதிய போதுதான் அவருக்கு முதல் மகன் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று எழுத ஆரம்பித்த இவரது பேனா இன்று 60000 பாடல்களை கடந்தும் எழுதிக்கொண்டே இருக்கின்றது.. தொடர்ந்தும் எழுதும்.

தமிழ் மொழியை உலகளவில் கொண்டு செல்வதில் இவரின் கவிவரிகளுக்கும் முக்கிய இடமுண்டு. பூங்காற்று திரும்புமா என்ற கேள்வியில்  தேசிய விருது என்ற முதல் மரியாதையை பெற்றுக்கொண்ட கவிபேரரசு தொடர்ந்து சின்ன சின்ன ஆசைகளை முதல் முறை கிள்ளிப்பார்த்து போறாளே பொன்னுத்தாயி என தெய்வம் தந்த பூவாகிய கள்ளிக்காட்டில் பொறந்த தாயை தன் அன்பில் ஊறிய தமிழில் பாட மீண்டும் மீண்டும் என 6 தடவைகள் தேசிய விருதுகள் இவரை கௌரவித்தன…இல்லை இவரால் கௌரவிக்கப்பட்டன.

இன்றைய பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு அவர்களுக்கு நான் எழுதும் இந்த வாழ்த்துப்பதிவு சற்று வித்தியாசமானது. இவரின் பாடல்களை மட்டும் இப்பதிவு பாடி நிற்கப்போவதில்லை. இவரின் கவிதைகள், இவருக்கான கௌரவங்கள் என்பவற்றையும் பேசி நிற்கவுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறை கடக்க இருக்கும் இவரின் பாடல்கள் பல்வேறுபட்ட மாற்றங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. 35 வருடங்களில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்கள் இவரின் கவிதைகளுக்கும் மாற்றங்கள் கொடுத்தன. ஆனால் இவரை திரையுலகில் இருந்து மாற்றவில்லை. ஏனெனில் இவரின்றி எங்கே தமிழ் பாடல்களை படைப்பது..?

58வது வயதில் கால் பதிக்கும் இவரிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் அவரின் பதில் இப்படி இருக்கும்.. 
“58 என்று என் ஜாதகம் சொல்லுகிறது.. ஆனால் 28 தெரிகிறது என்று உடல் சொல்லுகிறது. ஆனால் 18ல் இருப்பதாக மனசு சொல்லுகிறது..” என்பார்.

உண்மைதான் மனது 18 வயதில் இருந்தால் தான் காதல் கவிதைகள் கற்பனைகளை கிழித்துக்கொண்டு வரும். இவரும் ஒரு காதலன் தான். தன் அன்பு மனையாளான பொன்மணி வைரமுத்து அவர்களை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கபிலன், மதன் கார்க்கி என இரு பெயர் சொல்லும் புதல்வர்கள்.

இன்று வரை கவிஞர் அவர்கள் 14 கவிதை தொகுப்புகளை படைத்துள்ளார். அவையாவன,
  • வைகறை மேகங்கள்,
  • சிகரங்களை நோக்கி..,
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்,
  • தமிழுக்கு நிறமுண்டு,
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்,
  • இதனால் சகலமானவர்களுக்கும்,
  • இதுவரை நான்,
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்,
  • பெய்யென பெய்யும் ழை,
  • நேற்று போட்ட கோலம்,
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்,
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்


அத்துடன் 5 நாவல்கள் இவரின் சிந்தனையில் இருந்து வெளிவந்துள்ளன. (தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்)

மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதைக்குள் நுளைந்த தமிழ் கவியுலகிற்கு கிடைத்த அறிவுப்பொக்கிஸம் இவர்.
இலக்கண தமிழ் மட்டும் இவரின் கவிதைகளை அலங்கரிக்கவில்லை.. பேச்சுத்தமிழும், வட்டாரத்தமிழும், அறிவியல் தமிழும் ஏன் மழலை தமிழும் இவரின் கவிதைகளுக்குள் அகப்படாமல் வளர்ந்ததில்லை. அதற்கு ஒரு உதாரணம்.

தமிழ் மீது இவருக்கு அடங்காத காதல். எந்த கவிதையில், எந்த பாடலில் இவர் தமிழ் பற்றி சொல்லவில்லை என்றால் அது சாத்தியமில்லை. தமிழ் பற்றிய இவரின் பாடல்களில் என்னைக் கவர்ந்தது டுயட் திரைப்படத்தின் 'தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…' என்ற பாடலாகும்

இவரின் ஒரு கவிஞன் என்ற கவிதையை படித்துப்பாருங்கள்.. கவிஞனின் உண்மை நிலை தெரியும்.

உயிர் பிழிந்து எழுதுவான்
சுடர்விட்ட சொல்லெடுத்து
மொழிக்கு ஒளியூட்டுவான்

கண்ணில் மழைகட்டும் போதெல்லாம்
பூமி உதைப்பான்; புரட்சி எழுதுவான்
ஆயினும் - பரிகாசமே பரிசாய்ப் பெறுவான்.

காலக்கண்ணாடி என்பான் தன்னை
ஒருபயலும் அதில் முகம்பார்த்ததில்லை

கடல்கடக்கும் பறவைகாள்!
சிறகுவலித்தால் எங்கே
சிரமபரிகாரம் என்பான்

சுற்றும் பூமி நின்றுவிடில்
சூழ்காற்று எங்குறையும் எனவியப்பான்

சமூகம் அவனைவிட்டுப்
பத்தடி தள்ளியே பயணித்தது

உறைந்துகிடக்கும் நிலாவெளிச்சமென்று
பனித்துளிகள் பார்த்து இமைதொலைப்பான்

அவனுக்கு
நாட்டுவைத்தியமே
நல்லதென்றாள் பாட்டி

கோடுகளற்ற நாடுகள்
வேலிகளற்ற வீடுகள்
வறுமைகளைந்த வாழ்வு
கண்ணீர் கழிந்த சமூகம்

ஊர்மேடையேறி உரக்கப்பாடுவான்
குல்லாய் தொலைத்த கோமாளியென்றது கூட்டம்

பெயர்கள் கூட
ஜாதிமத அடையாளம் காட்டுமாதலால்
எல்லார்க்கும் பெயர்களைந்து
எண்களிடச் சொல்வான்
அவனை மனிதப்பிரஷ்டம் செய்யச் சொன்னது மதம்

சில்லறைகள் ஓசையிடும்
சமூகச் சந்தையில்
அடங்கிபோனது அனாதைப்புல்லாங்குழல்

பொறுத்த கவி ஒருநாள்
பொறுமை துறந்தான்
தன் கவிதைகளை
நெற்றியில் எழுதி
ஒட்டிக்கொண்டான்

கூட்டத்தை ஊடறுத்துக்
கவிபாடிக் கலைத்தான்
ஊசியின் காதோடும்
ஒப்பித்தான் கவிதைகளை
தெருக்கள் வெறிச்சோடின

ஒரு கையில் தீப்பந்தமேந்தி
மறுகையில் கவிதையேந்தி
நிர்வாணமாக ஊர்வலம் போனான்
கண்கள் - கதவுகள் அடைத்துக்கொண்டன

தாஜ்மகால் சுவரில்
தார் எழுதினான்
காலையில் கைதாகி
மாலையில் விடுதலையானான்

ஒருநாள்...
பறவைகள் எச்சமிடும்
கோயில் கோபுரமேறி...
கலசம் உருகக் கவிதை கூவினான்

நிர்வாகம் அவனை
இறங்கும்வரை கெஞ்சியது
இறங்கியதும் கிழித்தது

நேற்று...
தன் முதற்கவிதை வெளிவந்த பத்திரிகையின்
முதற்பிரதி கொள்ள
உயிர்பிதுங்கும் பரபரப்பில்
ஓடிக் கடந்ததில் -
சாலை விபத்தில் செத்துப்போனான்

மொத்த ஊரும் திரும்பிப் பார்த்து
மரித்துப் போயினன்
.............................................................................................

வைரமுத்துவிற்கு வாழ்க்கையை படிக்கத் தெரியும்,ரசிக்கத் தெரியும், வாழவும் தெரியும். அதனை அவரே உணர்த்துகின்றார் இங்கு..


பாங்கொங்,கனடா,கொங்கொங் ஆகிய நாடுகளில் தமிழ் கற்பிக்கும் பள்ளி அமைத்து தமிழ் வளர்த்து வரும் கவிஞர் அவர்களுக்கு 1986ல் கவிப்பேரரசு என்ற விருதுப்பெயர் கிடைத்தது. 2003ல் பத்மஹீ விருது கிடைத்தது. இவரின் கள்ளிக்காட்டு இதிகாசம் 2003ல் சாகித்ய அக்கடமி விருதையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.
தன் வாழ்க்கை வரலாற்றை 28வது வயதிலேயே எழுதிய ஒரே கவிஞர் இவர்தான். இதுவரை நான் என்பது தான் அவரின் சுயசரிதை. இந்நுாலை மின்னுாலாக பெற இங்கு செல்லவும்.

'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் கரைகளில் தாடி வளர்த்தவாறு, கானல் நீரில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் என சமகால இளைஞர்களின் மனதிலெல்லாம் நம்பிக்கை நாற்றுகளை நடத்தான். தன் முதுகில் ஒரு லட்சியக் குடத்தைச் சுமந்து கொண்டு இந்த நத்தை நகர்ந்தது எப்படி என்பதைச் சோர்ந்து கிடப்பவர்களுக்குச் சொல்லத்தான். நீர் பசையில்லாத பாறைகளின் இடுக்கில் முளைத்த இந்தக் கறுப்பு விதை கிளைகளை மேலே விரிப்பதற்காகச் சூரியனோடு நடத்தி போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும் இளைய தமிழனுக்குள் ஒரு சுயநம்பிக்கையைச் சுரக்க வைக்க வேண்டும். 

ஒரு கவிஞனிடம் மாறுபட்ட எண்ணங்கள் பரவிக்கிடக்கும். எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவனே கவிஞன். அதற்கு விதிவிலக்கல்ல நம்ம கவிபேரரசு. அவர் எழுதிய ஒரு மாறுதலுக்காக என்ற கவிதை அதற்கொரு சான்று.


ஒரேமாதிரி சுற்றும் பூமி 
ஒரேமாதிரி வீசும் காற்று 
ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் 
ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை 

மழையும் வழக்கம்போல் 
மேலிருந்து கீழாய் 

தேதிபார்த்து வந்து 
தேதிபார்த்துப் போகும் 
வசந்தம் 

ஒரேமாதிரி உணவு 
ஒரேமாதிரி துாக்கம் 
ஒரேமாதிரி கனவு 

எப்படித்தான் நூறாண்டு 
இருப்பதோ இம்மாநிலத்தே? 

வாழ்முறை சற்றே 
மாற்றுக மனிதரீர் 

வாரத்தில் ஒர்நாள் 
பகலெல்லாம் தூங்கி 
இரவெல்லாம் விழிமின் 

பகல் 
பிறர்க்காக நீவிர்வாழ 
இரவு 
உமக்காக நீவிர்வாழ 

வானஇலை விரித்து 
நட்சத்திரம் தெளித்து 
நிலாச்சோறு பரிமாறுமியற்கை 

அருந்தாமல் தூங்கும் 
பசியோடு மனிதகுலம் 

இரவெல்லாம் விழிமின் 
நட்சத்திரம் முணுமுணுக்கும் 
ஓசைகள் காதுற்றால் 
நல்ல செவியுமக்கு 

ஒரு கண்ணாடித்துண்டு கொண்டு 
நிலவைச் சிறையெடுமின் 

கண்-காது-இருதயம் 
துருப்பிடிக்குமுன் துலக்குவீர் 

வானத்தின் நீளஅகலம் தெரியுமா? 

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகைப் 
பேட்டி காண்பீர் 

வயதாக ஆக 
வாழ்வோடு ஏன் விவாகரத்து? 
நெருங்கி வாருங்கள் 

குழந்தையோடு கூடி விளையாடித் 
திட்டமிட்டுத் தோற்றுப் போங்கள் 

கண்ணிரண்டும் மூடித் 
தொலைபேசி சுழற்றுங்கள் 

எதிர்முனையில் எவர் வரினும் 
அன்றைய விருந்துக்கழையுங்கள் 

வீட்டுப்பிள்ளையர்க்கு விடுமுறைவிட்டு 
நீங்கள் ஒருநாள் பள்ளிசெல்லுங்கள் 
இரண்டு புரியும் உமக்கு 
ஒன்று : உங்கள் அறியாமை 
இரண்டு : பிள்ளையர் பெருமை 

உடைந்தமேகம் முத்துநீர் சிதறினால் 
ஓடுங்கள் ஓடுங்கள் 
எங்கே மழையின் கடைசித்துளியோ 
அங்கே நில்லுங்கள் 

மழைக்கு வெளியே நின்று 
மழையை ரசியுங்கள் 
மழைபெய்த களிமண் நிலமாய் 
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும் 

பணம் கிடந்தால் மட்டுமல்ல- 
ஓடும்பேருந்தில் ஏறும் பெண்ணின் 
கூந்தல் பூஉதிர்ந்தாலும் 
காவல்நிலையம் ஒப்படையுங்கள் 

மரணம்கூட வித்தியாசமாயிருக்கட்டும் 
அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும்

..............................................................................................

வைரமுத்து அவர்களுக்கு தாய் என்றால் தனிப்பிரியம். தன்னை சுமந்து பெற்ற தாய் பற்றி அவர் எழுதிய கவிதைகள், பாடல்கள் ஏராளம் ஏராளம்.. அதில் என்னை மட்டுமல்ல உங்களுக்கும் பிடிக்கும் ஒரு பாடல்.. ஆயிரம் தான் கவி சொன்னேன்.. அழகழகாய் பொய் சொன்னேன்.. பெற்றவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலயே…


போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்று சொல்வார்கள். பொதுவாக இந்த குணம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது வாய்த்த ஒரு சிலரில் இவரும் ஒருவர் எனலாம்.. இதோ அவர் சொல்லுகின்றார். இது போதும் எனக்கு என்று..

அதிகாலை ஒலிகள் 
ஐந்துமணிப் பறவைகள் 
இருட்டு கதவு தட்டும் சூரியவிரல் 
பள்ளியெழுச்சி பாடும் உன் 
பாதக்கொலுசு 
உன் கண்ணில் விழிக்கும் 
என் கண்கள் 
இதுபோதும் எனக்கு 

தண்ணீர் போலொரு வெந்நீர் 
சுகந்தம் பரப்பும் துவாலை 
குளிப்பறைக்குள் குற்றாலம் 
நான் குளிக்க நனையும் நீ 
இதுபோதும் எனக்கு 

வெளியே மழை 
வேடிக்கை பார்க்க ஜன்னல் 
ஒற்றை நாற்காலி 
அதில் நீயும் நானும் 
இதுபோதும் எனக்கு 

குளத்தங்கரை 
குளிக்கும் பறவைகள் 
சிறகு உலர்த்தத் 
தெறிக்கும் துளிகள் 
முகம் துடைக்க உன் முந்தானை 
இதுபோதும் எனக்கு 

நிலா ஒழுகும் இரவு 
திசை தொலைத்த காடு 
ஒற்றையடிப்பாதை 
உன்னோடு பொடிநடை 
இதுபோதும் எனக்கு 

மரங்கள் நடுங்கும் மார்கழி 
ரத்தம் உறையும் குளிர் 
உஷ்ணம் யாசிக்கும் உடல் 
ஒற்றைப் போர்வை 
பரஸ்பர வெப்பம் 
இதுபோதும் எனக்கு 

நிலாத் தட்டு 
நட்சத்திரச் சோறு 
கைகழுவக் கடல் 
கைதுடைக்க மேகம் 
கனவின் விழிப்பில் 
கக்கத்தில் நீ 
இதுபோதும் எனக்கு 

தபோவனக் குடில் 
தரைகோதும் மரங்கள் 
நொண்டியடிக்கும் தென்றல் 
ஆறோடும் ஓசை 
வசதிக்கு ஊஞ்சல் 
வாசிக்கக் காவியம் 
பக்க அடையாளம் வைக்க 
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ 
இதுபோதும் எனக்கு 

பூப்போன்ற சோறு 
பொரிக்காத கீரை 
காய்ந்த பழங்கள் 
காய்கறிச் சாறு 
பரிமாற நீ 
பசியாற நாம் 
இதுபோதும் எனக்கு 

மூங்கில் தோட்டம் 
மூலிகை வாசம் 
பிரம்பு நாற்காலி 
பிரபஞ்ச ஞானம் 
நிறைந்த மௌனம் 
நீ பாடும் கீதம் 
இதுபோதும் எனக்கு 

அதிராத சிரிப்பு 
அனிச்சப்பேச்சு 
உற்சாகப்பார்வை 
உயிர்ப் பாராட்டு 
நல்ல கவிதைமேல் 
விழுந்து வழியும் உன் 
ஒரு சொட்டுக் கண்ணீர் 
இருந்தால் போதும் 
எதுவேண்டும் எனக்கு
?


யார் நாட மாட்டார்கள் உங்களை…! எது அலங்கரிக்காது உங்களை..!
அண்மையில் விஜய் தொலைக்காட்சி உங்களுக்கு விருது வழங்கும் போது விழா மேடையில் ஒரு கவிதை உங்கள் நடையில் சிவகார்த்திகேயனால் வாசிக்கப்பட்டது. 
அத்தனையும் உண்மை… நீங்கள் கலிபோர்னியாவில் பிறந்திருந்தால் அமெரிக்கா ஆங்கிலம் அன்றே வல்லரசாகியிருக்கும்.


கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் செம்மொழி மாநாட்டில் கவிபேரரசு வைரமுத்து அவர்களின் தலமையில் கிளம்பீற்று காண் தமிழ் சிங்கக் கூட்டம் என்ற கவியரங்கு நடைபெற்றது. அதில் தமிழ் குறித்த அவரின் கவிதை ஒலி வடிவில்..



இறுதியாக மீண்டும் மீண்டும் எங்கள் தமிழ் கவிஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை மனதார வழங்கி இந்த வரலாறு காணாத நீண்ட பதிவை நிறைவு செய்கின்றேன்.. கவித்தலைவர் பற்றி பதிவு எழுதினால் அதுவும் நீளமாகின்றது கவிப்பேரரசின் கவிதைகளின் எண்ணிக்கை போல….

புதுக்கவிதை பேனாவில் மரபுக்கவிதையின் மரபணுக்களை மையாக ஊற்றி
நீ எழுதும் வாக்கியம் தமிழ் இலக்கியம் இதுவரை கண்டிராத தனி இலக்கியம்..

கண்ணதாசனுக்கு பிறகு விதவையாய் கிடந்த மெட்டுக்களுக்கு கவிதை பொட்டுக்கள் இட்டு
வாழ்க்கை தந்த சீர்திருத்த கவிஞன் நீ..


தேசமே கொண்டாடும் பாடல்களின் சந்தம் நீ..
ஆனால் என்றென்றும் தமிழுக்கே சொந்தம் நீ..


உன் பாடல்கள் பாமரனும் கேட்டவுடன் புரிந்து கொள்ள முடியும்
அதே பாடலை ஆராய்ச்சி படிப்புக்கும் எடுத்துக்கொள்ள முடியும்
ஆம் நீ ஞானிகளுக்கு எழுதினால் அதில் கருத்து மழை பொழியும்
குழந்தைகளுக்கு எழுதினால் அதில் எழுத்துப் பிழை தெரியும்


நீ தேசிய விருது வாங்குவது இது ஆறாம் முறை
உன் இல்லம்தான் இனி இலக்கணத்தின் ஆறாம் திணை

வைரமுத்துவின் கவிதையில் இருந்தே அவருக்கொரு வாழ்த்து..



குறிப்பு :- கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “தாஜ்மஹாலில் ஒரு கவியரங்கம்” என்ற கவிதையை அவரின் கம்பீர குரலிலேயே கேட்க இத்தளத்திற்கு செல்லுங்கள்..
காதலை ரசித்து சுவைத்து பாருங்கள்..

நன்றி
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்..,
Continue reading →
Photobucket