எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, June 30, 2011

கடிவாளம் பத்திரிகை வெளியீடு.

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி முழுநேர இரண்டாண்டு ஊடக கற்கை நெறி மாணவர்களின் வெளியீடுகளில் முதல் வெளியீடான ‘கடிவாளம்’ பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

யாழ் பல்கலை கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலை பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், ஊடகக் கல்வியானது கல்விச் செயற்பாடுகளில் முதன்மையானதாகும். இதனை ஒரு கலையாக தனித்துவம் வாய்ந்தவர்கள்; வளர்த்தனர். இன்றைய நிகழ்வின் வெளியீடான பத்திரிகையின் பெயர் கடிவாளம் எனும் போது நான் சற்று சிந்தித்தேன். பொதுவாக எந்த செயற்பாட்டுக்கும் ஒர் கட்டுக்கோப்பான ஓர் வரையறையால் வழிப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் இப்பத்திரிகைக்கு கடிவாளம் எனும் அர்த்தமான பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.

ஏனைய பல்கலை கழகங்களுடன் ஒப்பிடும் போது யாழ் பல்கலை கழகத்திலேயே முதன் முறையாக ஊடக கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. எனவே யாழ் பல்கலை கழக ஊடக மாணவர்கள் மற்றைய பல்கலை கழகங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் தனித்துவம் உள்ளவர்களாகவும் வருவார்கள். ஆகவே இதனுடன் தொடர்புடைய அனைவரும் அர்பணிப்புடன் செயற்பட்டு சமுகத்தை கட்டியெளுப்பும் மாறாத பொறுப்பு எங்களிடம் இருத்தல் வேண்டும். யாழ் பல்கலை கழகத்தின் மகுட வாசகமான ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்பதற்கமைவாக உள்ளதை உள்ளவாறு சொல்வது ஊடகம் என்பதற்கு அமைவாகவும் மாணவர்கள் செயற்பட வேண்டும். எனவே இந்த குறுகிய கால கற்கை நெறியை தொடர்ந்து முதல் முயற்சியாக கடிவாளம் பத்திரிகையினை வெளியிடும் முயற்சியை பாராட்டுவதோடு மாணவர்களின் பணி இன்னமும் சிறக்க யாழ் பல்கலை கழகத்தின் சார்பாக எங்களது உதவி உங்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்புரையாற்றினார். பத்திரிகைகளின் மதிப்பீட்டு உரைகளை குடாநாட்டு பத்திரிகை ஆசிரியர்களும்,எழுத்தாளர்களும்,பேராசிரியர்களும் மேற்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குடாநாட்டு ஊடகவியலாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்த வெற்றி FM-TV நிறுவனத்திற்கும், தீபம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் மற்றும் தொலைபேசி ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வாழ்த்திய சக்தி Fm நிறுவனம், சூரியன் Fm நிறுவனம் மற்றும் பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும் ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஸ் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றி
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,


Continue reading →
Friday, June 24, 2011

கவியரசு மற்றும் மெல்லிசை மன்னர்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
தமிழ் திரையுலகு இன்று இந்நிலையில் உலகெங்கும் பேசப்படுவதற்கு சிறந்த அத்திவாரமிட்டவர்களில் முக்கியமானவர்களில் இருவரான அமரர் “கவியரசு”கண்ணதாசன், “மெல்லிசை மன்னர்” M.S.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்த தினங்கள் இன்றாகும்..

காலத்தால் அழியாத பாடல்கள் பலவற்றை எமக்களித்த இருவருக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...



இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல்களில் என்னைக்கவர்ந்த சில பாடல்கள் இதோ...


1. அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா...

வரிகள்- கவியரசு கண்ணதாசன்
இசை- மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன்
படம் - மன்னாதி மன்னன்

வீர உணர்வை கூறும் இப்பாடலுக்கான இசை இன்றும் மனதில் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப கூடியதாகவே உள்ளது..



2. மாலை பொழுதின் மயக்கத்திலே... படம்- பாக்கியலக்ஸ்மி

3. படம்- தை பிறந்தால் வழி பிறக்கும் (1959)
பாடல்- ஆசையே அலை போல நாமெல்லாம் அதன் மேலே...
இப்பாடலானது கண்ணதாசனின் வாழ்வியலில் இருந்தே பாடல் வரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில் இப் பாடலுக்கான காட்சியமைப்பு, கதையமைப்பு என்பவற்றை கேட்டபின் காரில் வீடு திரும்புகின்றார் கண்ணதாசன்.
வரும் வழியில் ஒரு பாலத்தின் மேல் அவரின் கார் நிற்கின்றது. அந்த நேரத்தில் அவரின் கண் ஆற்றை பார்வையிட பாடல் எண்ணம் தோன்றுகின்றது. சட்டென ஒரு சிகரட் பெட்டியை எடுத்து அதில் வரிகளை குறித்து வைத்துக் கொண்டார். இசை கோர்வையின் பின் இப்போதும் எம் செவிகளில் ரீங்காரம் இடும் இப்பாடலுக்கான இசையை M.S.V அவர்கள் வழங்கவில்லை என்பது சுவாரஸ்யம்..


4.படம் - சூரியகாந்தி
பாடல்- பரமசிவன் கழுத்திலிருந்து...
இன்றும் கண்ணதாசன் என்றால் சட்டென ஞாபகத்தில் வருவது இப்பாடலேதான்.. இப்பாடலின் மற்றொரு சிறப்பு கண்ணதாசன் முதல் முறையாக திரைப்படமொன்றில் நடித்த பாடலாகவும் இதுதான் விளங்குகின்றது.
இப்பாடலில் என் மனம் கவர்ந்த வரிகள்..-காலத்தின் நிலையை உணர்த்தி நிற்கும் வரிகள்..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்..
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..


5.இரு காதல் உள்ளங்களின் உள்ளக்கிடக்கையை பாடலில் கொண்டு வரும் கலையறிந்தவர் கண்ணதாசன் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் அமைந்த பல பாடல்களில் ஒன்றுதான் பாலும் பழமும் திரைப்படத்தின் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. என்ற பாடலாகும்..
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்..


6. படம்- சுமைதாங்கி
பாடல்- மயக்கமா..கலக்கமா...
துன்பங்கள் சோகங்கள் வாழ்க்கையை வாட்டும் போது விரக்தியின் விளிம்பில் நிற்கும் எங்களுக்கு ஆறுதல் தந்து கரையேற்றி விட சில ஆலோசனைகள் வேண்டும். அப்படியான தேற்றல் வாக்கியங்கள் பலவற்றை கொண்ட இப்பாடல் மிகவும் என்னை கவர்ந்த பாடல்களில் ஒன்று.


ஒரு மனிதனுக்கு அவன் என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் துன்பம் என்ற ஒன்று வந்து விட்டால் முதலில் மயக்கம், பின் என்ன செய்வது என்ற கலக்கமும் குழப்பமும் வரும். குழப்பநிலை மோசமடைகையில் வாழ்க்கை நடுங்க ஆரம்பிக்கும்.. இத்தனை செயற்பாடுகளையும் ஒரு வசனத்தினுள் கொண்டு வந்து பின் அவற்றில் இருந்து விடுபட வேண்டிய தீர்வுகளை தொடர்ந்து முன்வைக்கும் அவரின் கவியழகு இன்றும் என்னை வியக்கவைக்கின்றது.
இப்பாடல் ஒருவரின் நிஜ வாழ்க்கையில் ஏற்படுத்திய மாறுதல்கள் பற்றிய தகவலை உங்களுடன் பகிர்கின்றேன்..
ஒரு கவிஞர் திரையுலகுக்கான வாய்ப்புகளை தேடி அலைந்த தருணம் அது. எந்த ஒரு கதவும் அவரின் கவிதைகளுக்காக திறக்கவில்லை. வேதனையின் உச்சியில் இனி கவிதை எழுதுவதில்லை என்ற விரக்திக்கே சென்று விட்டார். இந்நேரத்தில் தான் வீதியோரத்தில் இப்பாடலை கேட்கின்றார். புத்துணர்ச்சி பெறுகின்றார். வாழ்க்கையில் ஜெயிக்கின்றார். இன்று திரையுலகில் கவி மார்கண்டேயராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஆம் கவிஞர் வாலி அவர்களேதான் இப்பாடலினால் பாடலாசிரியர் ஆனவர்.
இதோ பாடல்..


7.படம்- அவளுக்கென்று ஒரு மனம்
பாடல்- உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
கண்ணதாசன் அவர்கள் தான் எந்த அளவிற்கு தத்துவ பாடல்கள் எழுதுவாரோ அதே அளவிற்கு தரமான காதல் பாடல்களையும் தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளார் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்பாடலாகும்..
பாடலை முழுமையாக கேளுங்கள்... உங்களுக்கும் புரியும்..


8. காதலுக்கும் கண்ணதாசன் காதல் தோல்விக்கும் கண்ணதாசன் என்பார்கள்.. 100%உண்மை எனலாம். இப்பாடல் சோகத்துடனும் காதலுடனும் அமையும் பாடல் இதோ...
படம்- மூன்றாம் பிறை
பாடல் - கண்னே கலைமானே...


9. அடுத்த பாடல் பெண்மையை வர்ணிக்கும் விதமான பல பாடல்களுள் ஒன்று..
படம் - அலைகள்.
பாடல் - பொன்னென்ன பூவென்ன..
வரிகள் ஏலத்தில் விடப்பட்டால் தமிழே கடன் வாங்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன..


10. படம்- சரியாக தெரியவில்லை..
பாடல்- கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..
என்னவோ தெரியவில்லை கேட்டவுடன் பிடித்து போன பாடல்களில் இதுவும் ஒரு இடத்தை பெற்றுக்கொண்டமை சூப்பர்.. ஜானகி அவர்களின் குரலுக்கு அடிமையாகிய எனக்கு இப்பாடலும் ஒரு வரமே..


குறிப்பு..- இப்பதிவை ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட மின்தடை இப்பதிவு முழுமையாக்கப்படுவதில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.. இப்போது முடிந்தவரை முழுமையாக்கி விட்டேன்...


நன்றி
மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்...


Continue reading →
Wednesday, June 22, 2011

டீன் ஏஜ் கவர்மென்டின் Chief Minister விஜய்..- பிறந்த நாள் வாழ்த்துகள்

13 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இன்று இளைஞர்களின் நாயகன் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் 37வது பிறந்த நாள்..!

நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை..இருந்தும் தீவிர விஜய் ரசிகனாக இருக்கும் நான் அவரின் பிறந்த தினத்தில் ஒரு பதிவை பரிசாக்கி மகிழ்கின்றேன். இப்பதிவானது விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் ஸ்பெஷலாக விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.

 1974 ஜுன் மாதம் 22ம் திகதி சென்னையில் திரு.S.A.சந்திரசேகர், திருமதி ஷோபா சந்திரசேகர் ஆகியோர்க்கு மகனாக பிறந்தார் விஜய். இவர் பெற்றோரின் பாசமிகு மகனாகவும் தங்கைக்கு பாசமிகு அண்ணனாகவும் விளங்கினார். இருந்தும் அவர் தன் தங்கையை சிறு வயதிலேயே இழந்த வேதனையில் துவண்டிருந்த போது அவரை சோகக்கடலில் இருந்து கரையேற்றியது நடனக்கலை.

சிறுவயதிலேயே நடனத்தை முறையாக கற்ற விஜய் தன் தந்தை இயக்கிய திரைப்படங்கள் சிலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் ஊடாக திரையுலகில் நுழைந்தார். 1984ல் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகினார். அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..
அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன்(1985), சட்டம் ஒரு விளையாட்டு(1987) ஆகிய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

1992…. ரஜனி,கமல்,கார்த்திக்,பிரபு என திரையுலகில் சவாலான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அப்போது நாளைய திரையுலகிற்கான தீர்ப்பை எழுத வந்தார் கதாநாயகனாக விஜய். ஆக்ஸன் திரைப்படத்தில் ஆரம்பித்த அவரின் திரையுலக வாழ்வு 1996ல் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நிலையான ஒரு இடத்தை பதித்துக்கொண்டது. தொடர்ந்து காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா என நடிப்பில் முத்திரை பதித்து வந்தார்.

1999ல் வெளியாகிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற ஆரம்பித்தார். 2000ம் ஆண்டில் வெளியான குஷி, ப்ரியமானவளே மற்றும் 2001ல் வெளியான ப்ரண்ஸ், பத்ரி ஆகிய திரைப்படங்களும் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கிச் சென்றன. அத்துடன் இக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களிலும் விஜய் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியமானவளே திரைப்படத்தில் “மிஸிஸி ஸிப்பி…” பாடலும் ப்ரண்ஸ் திரைப்படத்தில் “ருக்கு ருக்கு..” பாடலும் பத்ரி திரைப்படத்தின் “என்னோட லைலா..” பாடலும் பெரும் பிரபல்யமான பாடல்களாகும்.



பகவதி திரைப்படத்தின் மூலம் ஆக்ஸன் ஹீரோவாக மாறிய விஜய் கில்லி, திருமலை,திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி என எதிரிகளை தன்னை வருத்தும் ஆக்ரோசமான சண்டைக்காட்சிகளில் புரட்டி எடுத்தார்.. இந்நிலையில் 2007ல் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளியானது. பெரிதாக பெயர் பெறாவிட்டாலும் விஜய் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.
சில சடுதியான வீழ்ச்சிகளை தொடர்ந்து இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியாக காவலன் திரைப்படம் மீண்டும் அவரை ரசிகர்களின் காவலனாக மாற்றியது. சீன திரைப்பட விழாவில் பெரிதும் புகழை பெற்ற திரைப்படம் இளைய தளபதியை நீண்ட நாட்களின் பின் Soft Hero வாக மாற்றிவைத்தது.

விரைவில் வெளியாக உள்ள வேலாயுதம் திரைப்படமும் அதனைத் தொடர்ந்து வெளிவரவுள்ள நண்பன் திரைப்படமும் நிச்சயமாக பெரு வெற்றி பெறும் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்…உறுதியுமாகும்.

இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களில் ஒன்றான திருப்பாச்சி அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சச்சின், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன் ஆகிய திரைப்படங்கள் தெலுங்கிலும் போக்கிரி ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு திரைப்படமாக்கப்பட்டுள்ளன..

அத்தோடு ஏனைய மொழிகளில் வெளியாகிய படங்களையும் தமிழில் மொழிபெயர்த்து தருவதிலும் விஜய் பின்தங்கியதில்லை. இவ்வாறு வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். அவ்வாறு வெளியாகிய படங்கள் பற்றிய விபரங்கள் கீழே..


விஜயின் பாடகன் அவதாரம் 1994ல் தேவா திரைப்படத்தில் அரங்கேறியது. அத்திரைப்படத்தில் இரு பாடல்களை விஜய் பாடியிருந்தார். அதில் ஒரு பாடல் இதோ..


தொடர்ந்து “தொட்டப் பெட்டா..”(விஷ்ணு-1994), “பம்பாய் சிட்டி…”(கோயம்புத்துார் மாப்பிள்ளை-1995), 1996ல் “திருப்பதி போனா மொட்டை..”(மாண்புமிகு மாணவன்), “அஞ்சாம் நம்பர் பஸ்ஸிலேறி..”(காலமெல்லாம் காத்திருப்பேன்), “சிக்கன் கறி..”(செல்வா) ஆகிய பாடல்களையும் “ஊர்மிளா ஊர்மிளா..”(ஒன்ஸ்மோர்- 1997), “விழியில் விழி மோதி..”(காதலுக்கு மரியாதை- 1997) என்ற பாடல்களையும் பாடினார்.


1998ம் ஆண்டு இவரின் பாடகர் வரலாற்றின் பொற்காலம் எனலாம். ப்ரியமுடன் திரைப்படத்தின் “மௌரியா மெளரியா..” பாடலும் நிலாவே வா திரைப்படத்தில் அமைந்த “நிலவே நிலவே….”, “சந்திர மண்டலத்தை…” ஆகிய பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தன.





அத்துடன் வேறு ஒரு நடிகரின் திரைப்படத்தில் பாடும் பண்பையும் விஜய் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் 1998ல் வேலை திரைப்படத்தில் காலத்துக்கு “ஒரு கன..” என்ற பாடலையும் பெரியண்ணா திரைப்படத்தில் “நான் தம் அடிக்கிற…” மற்றும் “ரோட்டுல ஒரு…” ஆகிய பாடல்களையும் துள்ளித்திரிந்த காலம் திரைப்படத்தின் “டிக் டிக் டிக்…”ஆகிய பாடல்களையும் இதற்கு சான்றாக கூறலாம்.




பின்னர் 1999ல் நெஞ்சினிலே திரைப்படத்தில் “தங்க நிறத்துக்குதான்..” பாடலையும் 2000ம் ஆண்டில் “இரவு பகலை…” “சின்னஞ் சிறு…”(கண்ணுக்குள் நிலவு) ஆகிய பாடல்களுடன் ப்ரியமானவளே திரைப்படத்தில் அமைந்த “மிஸிஸி ஸிப்பி..” பாடலையும் விஜய் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து 2001ல் பத்ரி திரைப்படத்தில் “என்னோட லைலா..” பாடலையும் 2002ல் ப்ரண்ட்ஸில் “ருக்கு ருக்கு..” பாடலையும், தமிழன் திரைப்படத்தில் “உள்ளத்தை கிள்ளாதே..” பாடலையும் பகவதியின் “கொக்ககோலா..” பாடலையும் விஜய் சிறப்பாக பாடியிருந்தார்.


இறுதியாக இவர் பாடிய திரைப்பட பாடல் 2005ல் வெளியான சச்சின் திரைப்படத்தின் “வாடி வாடி வாடி..” பாடலாகும்.
இன்று வரை ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோள் விஜய் மீண்டும் திரைப்படத்தில் பாடவேண்டும் என்பதாகும். அது எப்போது நிறைவேறும் பொறுத்திருந்து பார்ப்போம்..

விஜய் வேலாயுதம் திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பின் போது பாடிய பாடல் இதோ..
விஜயின் அரசியல் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்பாடல் வரிகளை அவரின் குரலிலேயே கூர்ந்து கவனியுங்கள்..


குறிப்புக்கள்..:-
* விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள பிறந்த நாள் அறிக்கை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..
* விஜயின் மொத்த திரைப்படங்களினதும் பாடல்களையும் இங்கே ஒரே தளத்தில் பெறலாம்..

விஜயின் குரலில் வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
1998ல் வெளியாகி ஹிட் ஆன நிலாவே வா திரைப்படத்தில் இடம் பெற்ற நிலவே நிலவே.. என்ற பாடலாகும்.
வேகமான பாடலாக ஆரம்பிக்கும் இப்பாடல் இடையில் மெதுவாக செல்வதும் பின் வேகமடைவதும் சூப்பர்.
காதலியின் பதிலை வேண்டி நிற்கும் இப்பாடலில் விஜயின் கெஞ்சல்,ஏக்கம் கலந்த குரல் பிரமாதம்..!
அத்துடன் 
வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா..
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் இங்கு கலைந்ததுண்டா..
சொல்கின்ற மொழிகளில் தீர்ந்து விடும்.. சொல்லாத காதல் தீர்வதுண்டா..
ஆகிய வரிகளும்,
உள்ளங்கள் பேசும் மொழியறிந்தால் உன் ஜீவன் துடிக்க தேவையில்லை.. என்ற வரியும் என்னை மிகவும் கவர்ந்தவையாகும்..



மீண்டும் நம்ம மின்சார கண்ணன், மாண்பு மிகு மாணவன், பெண்களின் ப்ரியமானவன், எங்களை குஷிப்படுத்தும் யூத்தான அழகிய தமிழ் மகன், இதயங்களின் வேட்டைக்காரன், தமிழக மக்களின் எதிர்கால காவலன் எங்களின் நண்பன்(ப்ரண்ட்ஸ்), திரையுலகின் சுக்கிரன் என்றும் வெற்றிகளையே நாளைய தீர்ப்பாக எழுதும் தமிழன் இளைய தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..




விழித்திரு..தனித்திரு.. பசித்திரு… ஜெயித்திடு..

நன்றி.
மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்...,


Continue reading →
Friday, June 17, 2011

ஒரே ஒரு காதலை பேசும் 08 திரைப்படங்கள்

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

மொகலாய அரச வம்சம் வீரத்துக்கு மட்டுமன்றி காதலுக்கும் பெயர் பெற்றது. ஷாஜகான்-மும்தாஜ் (இன்றைய தினமே மும்தாஜின் நினைவு தினம்) அக்பர்-ஜோதா என நீண்டு செல்லும் அரச காதல் காவியங்களில் பிரபலமானது சலீம் அனார்கலி காதல் கதையாகும். அக்பர் ஜோதா தம்பதியனரின் மூன்றாவது மகனான சலீம் (முன்னைய இரு பிள்ளைகள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர்) தன் எட்டு வயது முதல் போர்களத்தில் நின்று போராடி 14 ஆண்டுகளின் பின் நாடு திரும்புகின்றான். நாடு திரும்பியவன் சிலையாக நின்ற உயிருள்ள அனார்கலியை (இது அக்பரினால் அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயராகும்) காதலிக்க ஆரம்பிக்க இருவருக்குள்ளும் காதல் வளர்ந்து பெரு விருட்சமாகின்றது. இக்காதலை தந்தை அக்பர் எதிர்க்க மகன் சலீம் அவருக்கெதிராக அனார்கலியை மீட்க போர் புரிகின்றான். போர் முடிவில் சலீம் மரணதண்டனை கைதியாகின்றான். தண்டனை நிறைவேறும் சமயத்தில் அனார்கலி தானே முன் வந்து சரணடைய சலீம் விடுதலையாகின்றான். அனார்கலிக்கு மரணம் நிச்சயிக்கப்படுகின்றது. கடைசி ஆசையாக மொகலாயத்தின் ஒரு இரவு ராணியாகின்றாள் அனார்கலி. மறுநாள் உயிருடன் கல்லறையாக்கப்படுகின்றாள்.

இந்த உருக்கமான காதல் கதை வெறும் கட்டுக்கதை என்றும் கூறப்படுகின்றது. அக்பர் வரலாற்றிலோ சலீம் வரலாற்றிலோ அனார்கலி பற்றிய குறிப்புகள் இல்லை என்றும் இது சுவாரஸ்யத்துக்காக உருவான கதை என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சலீம் பல மனைவியரை கொண்டிருந்தான் என்றும் அவனுக்கு முதல் திருமணம் 1585 பெப்ரவரி 13ம் திகதி மன்பாவதி பாயுடன் நடந்ததாகவும் பின் மொகலாயர்கள் பல தாரங்களை கொண்டிருக்கலாம் என்ற விதிப்படி ஜகத் கோசின் மற்றும் இளவரசி மன்மதி ஆகியோருடன் நுார்ஜஹான் (உலகின் ஒலி) என்ற மெஹர்-உல்-நிசா (இன்றும் மிக உயர்ரக வாசனைத் திரவியமான அத்தர் எனும் ரோஜாப்பூவில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தை கண்டுபிடித்தவர்) என்பவரையும் திருமணம் செய்து கொண்டதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

எது எப்படியிருப்பினும் சுவாரஸ்யமான - உருக்கமான இக் காதல் கதையை மையப்படுத்தி இந்திய துணைக்கண்ட சினிமா 08 திரைப்படங்களை கண்டுள்ளது. இந்திய சினிமாவில் 07 திரைப்படங்களும் பாக்கிஸ்தான் சினிமாவில் 01 திரைப்படமும் வெளியாகி உள்ளன. 

இந்திய சினிமா ஒலி இன்றி இருந்த காலத்திலேயே முதல் திரைப்படம் வெளியானது.

1928ல் Loves of a Moghul Prince என்ற பெயரில் Charu Roy, Seetha Devi, Sawan Singh நடிப்பில் இக்கதை சத்தமில்லா திரைப்படமாக வெளியானது. திரைப்படத்தை Charu Roy, Prafulla Roy ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர்.

 

பின் பிரதீப் குமார், நுார்ஜஹான் ஆகியோர் சலீம் அனார்கலியாக நடிக்க 1953ல் நந்திலால் ஜஸ்வந்லால் இயக்கத்தில் அனார்கலி  अनारकली என்ற பெயரில் வெளியானது முதல் பேசும் மொகலாய படம். இத்திரைப்படம் இந்தி மொழி திரைப்படமாக அமைந்தது. 175 நிமிடங்கள் கொண்ட இந்த பேசும் திரைப்படம் Mono ஒலிநயத்துடன் கறுப்பு வெள்ளை திரைப்படமாக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் C.ராமச்சந்திராவின் இசையில் லதா மங்கேஸ்கர் அவர்கள் பாடியிருந்தார்கள். இதில் Yeh Zindagi Usiki Haiஎன்ற பாடல் பெயர் பெற்றதாகும்.


02 ஆண்டுகள் கழித்து தெலுங்கு திரையுலகம் இக்கதையை திரைப்படமாக்கியது. Vedantam Raghavaiah அவர்களின் இயக்கத்தில் A.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி நடிப்பில் அவரின் தயாரிப்புடன் அனார்கலி என்ற பெயரிலேயே வெளியானது. பாடல்களை Samudrala Raghavacharya எழுத ஆதிநாராயண ராவ் இசையமைக்க கண்டசாலா, K.ஜிக்கி, P.சுசீலா, P.லீலா ஆகியோர் பாடினர்.


பின் 1958ல் பாக்கிஸ்தானுக்கு கதை சென்றது. அங்கு Anwar Kamal Pasha இயக்கத்தில் உமர் அஜ்நல்வியின் திரைக்கதை அமைப்புடன் முகமட் அவ்ஷால், சுதி, நுார்ஜஹான் நடிப்பில் அனார்கலி  اناركلی ) என்ற பெயரில் ஜுன் 06ம் திகதி வெளியாகி பெரு வெற்றி பெற்றது.




மீண்டும் இந்திய சினிமாவே இக்கதையை திரும்பிப்பார்க்க ஆரம்பித்தது 1960ல். Mughal-e-Azam (मुग़ल- आज़म,) என்ற பெயரில் K.Asif அவர்களின் 18 வருட கடின உழைப்பினை தொடர்ந்து 09 வருடங்கள் தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வெளியாகியது இத்திரைப்படம். பிருத்விராஜ் கபுர்(அக்பர்), திலீப் குமார்(சலீம்), அழகு பதுமையாக கண்களில் காதலை கொண்டு வந்த மதுபாலா(அனார்கலி) ஆகியோர் நடித்த இத்திரைப்படம் $11,500,000 பணத்தை வசூலித்தது. இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றித்திரைப்படங்களில் இந்த கறுப்பு வெள்ளைத்திரைப்படமும் ஒன்றாகும்.

அனார்கலி கொல்லப்படுவதாக இருந்த கதையில் அவரின் தாயாருக்கு அக்பர் வழங்கியிருந்த வாக்குறுதிக்கேற்ப ரகசிய சுரங்கம் ஊடாக நாட்டை விட்டு தாயாருடன் அனார்கலி அனுப்பி வைக்கப்படுவதாக இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்திய ராணுவத்தினரின் உதவியுடன் இத்திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நௌசாத் அவர்களின் மனதை வருடும் இந்துஸ்தானி இசையில் அமைந்த பாடல்களை முகமட் ராஃவி, லதா மங்கேஸ்கர், ஷாம்ஷாட் பேகம் ஆகியோர் பாடினர். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.


இத்திரைப்படத்தின் வசனங்கள் இன்றும் பலராலும் பேசப்படுகின்றன. Amanullah Khan, Kamal Amrohi, Wajahat Mirza, Ehsan Rizvi ஆகியோர் இணைந்து எழுதிய வசனங்களுக்காக 1961ல் சிறந்த வசனங்களுக்கான  Film fare விருதும் வழங்கப்பட்டது.

ஆவணி 05ம் திகதி 1960ல் உலகெங்கும் 150 தியேட்டர்களில் வெளியாகிய இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவாளர்(R.D.மித்துர்) ஆகியவற்றுக்கான Film fare விருதுகளையும் 1961ல் தட்டிச்சென்றது.


தந்தை பெரியார் அவர்கள் பார்த்த நான்கு திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும்.(ஏனையவை ஔவையார்,சந்ரலேகா,சூரியகாந்தி) அத்துடன் எகிப்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் ஓடிய ஒரே ஒரு இந்திய திரைப்படமும் இதுதான்.

 

பின்பு ஜெமினி பட அதிபர் S.S.வாசன் அவர்களினால் தமிழில் மொழிமாற்றம் பெற்று அக்பர் என்ற பெயரில் 1961ல் வெளியானது.

கம்பதாசன் பாடல்களுக்கு வரி எழுத நௌஷாத்தின் அதே மெட்டுகளுக்கு உருவான பாடல்களை P.சுசீலா,ராதா ஜெயலக்ஸ்மி ஆகியோர் பாடினார்கள்.



இப்பாடலின் ஹிந்தி வடிவத்தை கேட்க,பார்க்க இங்கே செல்லவும்..
இத்திரைப்படம் பற்றி மேலும் கூற வேண்டும்..கால ஒழுங்கில் வருகின்றேன்.

 

தமிழைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அனார்கலி மிளிர்ந்தாள். 1966ல் Kunchacko அவர்களின் தயாரிப்பு, இயக்கத்தில் பிரேம் நஸீர், K.R.விஜயா நடிப்பில் பாபுராஜின் இசையுடன் அனார்கலி അനാർക്കലി திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படத்தின் வசனங்களை Vaikom Chandrasekharan Nair எழுத பாடல்களை வயலார் (Vayalar) எழுதினார். பாடல்களை P.சுசீலா, K.J.ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, L.R.ஈஸ்வரி ஆகியோர் பாடினார்கள்.

 

நீண்ட நாட்களின் பின்னர் 2004ல் இவர்களின் கதை திரைக்கு மீண்டும் வந்தது. ஆனால் வித்தியாசமாக..

J.S Films நிறுவனத்தார் 185 நிமிட திரைப்படமாக மாற்றி Mughal-e-Azam  திரைப்படத்தை தந்தார்கள். இதில் விசேடம் என்னவென்றால் அப்போது கறுப்பு வெள்ளை திரைப்படமாக இருந்தது இப்போது வண்ண திரைப்படமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமாக மிகவும் உன்னிப்பாக செதுக்கியுள்ளனர் கணனிவல்லுனர்கள்..அவர்களுக்கு ஒரு சல்யுட்.

 

மறு ஆண்டே அத்திரைப்படதை தமிழிலும் மொழிபெயர்த்து தந்தனர். வசனங்களால் பேசப்பட்ட இத்திரைப்படத்தினை நேற்று மீண்டும் பார்த்தேன் மொழிமாற்றத்தின் பின் வசனங்களை விளங்கி கொள்ள முடிந்தது எனலாம். கவிதை நடையில் வரும் வசனங்கள் நச்..

சலீம் போர்க்கள பாசறையில் நின்று கவிதை எழுதிக்கொண்டிருப்பான்..அப்போது நண்பன் துர்ஜன் சிங் கேட்பான்.

வாள்களின் சத்தத்தின் நடுவில் கற்பனை சிதறாமல் எப்படி??

சலீம்:- போர்க்களத்திலும் கவிஞன் வாள் கவிதை பேசும்.. வேப்பமரங்களுக்கு மத்தியில் மாமரம் நாட்டால் சுவை மாறுமா?

துர்ஜன்:- இல்லை.

சலீம்:- அது போலத்தான் போர்க்களத்திலும் கவிஞன் கற்பனை வற்றாது.

 

மற்றொரு சந்தர்பத்தில் அனார்கலி ஒரு இரவுக்கான ராணியாக முடி சூடி கொண்டதும் அக்பரை பார்த்து “இப்போது முடி சூடிக்கொண்ட இந்துஸ்தான் ராணி அனார்கலி தங்களின் நாளைய கொலைக் குற்றத்தை இன்றே மன்னித்தருள்கின்றாள்..” என்பாள்.. இப்படி ஒரு வார்த்தை சவுக்கடியை எந்த மன்னனும் வாங்கியிருப்பானா??

 

இத்திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த வசனம்.. ஒரு கவிதை போட்டியின் முடிவில்(காதலின் ஆரம்பத்தில்) சலீம் பரிசளிக்கையில் அனார்கலிக்கு முள்ளும் எதிரான போட்டியாளருக்கு பூவும் வழங்குவான். அனார்கலி கூறுவாள் “நான் மிகவும் அதிஸ்டசாலி..முள் வாடாது... பூ வாடி விடும்..இது போதும் இளவரசே”

 

இத்திரைப்படத்தின் இனிமையான பாடல்கள் ஏற்கனவே அக்பர் திரைப்படத்தில் தமிழில் வந்திருந்தாலும் சில மாறுதல் வரிகளுடன்(நேரடி மொழி பெயர்ப்பு) மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் இனிய குரலில் கேட்க கிடைத்தது.. அனைத்தும் சூப்பர்.

அதிலும் உந்தன் சபையில் எந்தன் விதியை..என்று அப்போது P.சுசீலா, ராதா ஜெயலக்ஸ்மி ஆகியோர் பாடிய இரட்டைக் குரல் பாடலை ஸ்வர்ணலதா தனித்து குரல் மாற்றிப்பாடிய விதம் அருமையான ரசனையை தந்தது..அந்த ரசனையை நீங்களும் அனுபவியுங்கள்..

இங்கு எந்தன் விதியை உந்தன் சபையில் சோதித்தே நானும் பார்ப்பேனே… என மாறுகின்றது பாடல்..

 முதலில் பழைய பாடல்..



புதிய வடிவில் வந்த பாடல்..

 

சலீம் அனார்கலி கதையை பேசிநின்ற இத்திரைப்படங்கள் மத்தியில் சலீமின் தந்தை,தாயான அக்பர் ஜோதா காதல் கதையை ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் 2008ல் A.R.ரகுமானின் இசையுடன் தந்தார் அஸ்தோஸ் கௌசிகர். மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படமும் ஸாஜகான் மும்தாஜ் காதலை கூறும் அக்பர் ஹானின் தாஜ்மஹால் திரைப்படமும் மொகலாய காதலை பேசி நிற்கின்றது என்பது வித்தியாசமானதும் ரசிக்கத்தக்கதுமாகும்.


நன்றி.., மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்,


Continue reading →
Wednesday, June 15, 2011

யாழ் - வற்றாப்பளை. ஒரு வரண்ட பயணம் (புகைப்பட தொகுப்பு)

7 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் வாசகர்களே,




I’m Celebrating World Bloggers’ Day 2011

Theme: The Roles of Bloggers




பதிவர்களுக்கு வாழ்த்துகள்..

மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அந்த மகிழ்ச்சி இப் பதிவில் நிச்சயம் இருக்காது. ஏனெனில் சிதைந்த மண்ணின் கதை பற்றிய புகைப்பட தொகுப்பே இன்றைய என் பதிவு.

கடந்த 13.06.2011 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த பொங்கல்,பூஜை நிகழ்வுகளுக்காக நானும் என் நண்பர்களும் திங்களன்று யாழில் இருந்து முல்லைத்தீவு புறப்பட்டோம். A9 வீதி ஊடாக மாங்குளம் வரை சென்று பின் முல்லைத்தீவு சென்றோம்.

வெள்ளையர்களிடம் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி நின்ற கோவில் அல்லவா அது..

ஆலயத்தில் இரவு முழுவதும் தங்கி மறுநாள் (14.06.2011) காலையில் மீண்டும் யாழ் திரும்பினோம் புதுக்குடியிருப்பு வீதி வழியாக..
இந்த வீதியுடனான பயணம் தந்த வேதனைகள் சொல்லிலடங்காதவை.. நாம் அன்று பார்த்த இடம்தானா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தன அவற்றின் நிலை. இவ்வேதனைகளை வார்த்தையில் சொல்வதை விட பார்த்து உணர்வது சிறந்தது.

முறிகண்டியில் இலங்கைப் பாடகர் திரு.ரகுநாதன் அவர்களுடன் எதிர்பாராத சந்திப்பு.

மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில்..

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஒட்டுசுட்டான் சந்தியில் வீதி விளக்கப்படம்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்


ஊற்றாங்கரை பிள்ளையார் கோவில்(தண்ணீர் ஊற்றுப் பிள்ளையார்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய காட்சிகள்.

ஆலய முகப்பு

நந்திக்கடல் (நேரம் மாலை 07.00)

                           
விமானப்படையினர் மேற்கொண்ட பூக்கள் சொரியும் நிகழ்வின் காணொளி..


நந்திக்கடலில் சூரியோதயம் (நேரம் காலை 06.20)


புதுக்குடியிருப்பு - அநாதைகளாக இங்கு இவைகளும் வெளியில் மக்களும்

செல்வந்த பூமியின் இன்றைய நிலை.



குண்டுகளால் எங்களை எதுவும் செய்ய முடியாது..இது நம்ம ஏரியா..


படைகளின் சேதமடைந்த சொத்துகள்


குறிப்பு :- இது ஒன்றும் அரசியல் ரீதியில் அமைந்த பதிவு அல்ல.. ஒரு யுத்தம் நடந்த பூமியின் உண்மைத் தோற்றத்தை உலகறிய செய்யும் முயற்சி மாத்திரமே.

படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அவற்றை தனித்தனியே க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவிலொரு பாடல்.
இன்றைய பதிவில் பகிரவுள்ள பாடல் 1970ல் வெளிவந்த “என் அண்ணன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலொன்றாகும்.
மக்கள் திலகம் M.G.R அவர்கள் நடித்த இத்திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு K.V.மகாதேவன் அவர்கள் இசையமைக்க T.M.சௌந்தரராஜன் பாடிய “கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே..” என்ற பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்பாடல் பற்றி என் முகப்புத்தகத்தில்..,

சரி நண்பர்களே நாம் மீண்டும் சந்திப்போம் மற்றொரு பதிவில்..,
நன்றி
என்றென்றும் அன்புடன்


Continue reading →
Photobucket