எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, February 12, 2011

இதயத்தில் இதயத்தின் நாதமாக வெற்றி...!

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

தமிழ் வானொலிகளில் விடியலாய் விளங்கி நாம் எங்கிருந்தாலும் கேளு ராஜா கேளு என எமை அழைத்து பகல் வேளையில் இசைப் பந்தியோடு கையளவில் கற்ற விடயங்களோடு கற்காத பல விடயங்களையும் தெரிய வைத்து எங்கேயும் எப்போதும் மகிழ்வுடன் வாழ எம் துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல்-தீர்வுகள் சொல்லும் நண்பனாக காற்றிலே சிறகுகள் விரித்து வானலையில் இசை ராஜாங்கம் நிகழ்த்தி செவி வழி புகுந்து இதயத்தில் நாதமாய் ஒலிக்கும் நம் வெற்றி புதிய ஆண்டில் கால் பதிக்கும் வேளையில் பூக்கள் பூக்கும் நேரத்தின் நறுமணங்களுடன் இணைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் இதயத்தின் நாதம் வெற்றிக்கு…

மக்களின் தகவல் தொடர்பாடலுக்கும், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கும் ஏற்றதான சிறந்த பயனுள்ள ஊடகமாக வானொலிகள் திகழ்கின்றன. உலகின் அனைத்து பாகங்களிலும் வாழும் மக்களனைவரையும் ஆரம்ப காலம் முதல் இன்று வரை இலகுவாக இணைத்த துறை என்ற பெருமை வானொலி துறைக்கு உண்டு.
இருப்பினும் தமக்கென ஒரு குறுகிய பாதையை தெரிவு செய்து இதுதான் தம் வழி என அடையாளப்படுத்தி கொண்டு செயற்படும் வானொலி அலைவரிசைகள் பல..இசை வானொலிகள், செய்தி வானொலிகள், மத வானொலிகள் என தத்தம் மொழிகளில் தம் சார்ந்த கொள்கைகளை பரப்பும் விதமாகவும் மக்களை ஜனரஞ்சகப்படுத்தும் விதமாகவும் பல்வேறு வானொலி சேவைகள் பணியாற்றுகின்றன.
இப்படியான காலகட்டத்தில் இசை(பாடல்கள்), செய்தி, தகவல்கள், விளையாட்டு, படைப்புகள் என பல்துறைகளையும் உள்வாங்கியது மட்டுமன்றி வெளிக்கள செயற்பாடுகள் மூலமும் மக்களை கவர்ந்து அவர்களின் இதயத்தில் வெற்றி ராஜ்ஜியம் நடாத்தும் வானொலியே இலங்கையின் வெற்றி வானொலி..!

2008ம் ஆண்டு February மாதம் 14ம் திகதி என்ற உன்னத தினத்தில் ஆரம்பித்த வெற்றி இன்று தன் மூன்றாண்டுகள் நிறைவு செய்து நான்காவது ஆண்டில் கால் பதிக்க இருக்கும் இம்மகத்தான தருணத்தில் அது அடைந்த வெற்றிகள் பல பல..

மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக விரும்புகின்ற ஒரு விடயமே – சொல்லே “வெற்றி” என்பது.
இழப்புகள், துன்பங்கள், என்பவற்றிலிருந்து மீண்டு வந்ததும் அவர்கள் மனதில் எழும் எண்ணமே வெற்றி உணர்வு. அப்படியாக, தான் பெற்ற அவ்வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பல்வேறு முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். முயற்சியும் வெற்றியும் இணைபிரியா உறவுகளாக எம் வாழ்வில் இணைந்து நிற்கின்றது. இப்படியாக ஒரு வானொலி, தான் மக்கள் மத்தியில் இடம்பெறவும் அவர்களுடன் சேர்ந்து வெற்றி பெறவும் பல முயற்சிகளை மேற்கொள்ளும். அதில் பிரதானமானது பெயர்..!

கேட்கும் போதும் சொல்லும் போதும் மனதில் உணர்ச்சி பொங்கக் கூடிய எழுச்சியான பெயர் வானொலிக்கு அவசியம். அதை தெளிவாக உணர்ந்த வெற்றி வானொலியினர் மக்கள் அதிகம் விரும்பும் வெற்றி என்ற பதத்தையே பெயராக்கி கொண்டனர். இது அவர்களுக்கு பெரும் வெற்றியையும் கொடுத்தது. நிறுவனத்தை ஆரம்பித்த புதிதில் பெருமளவிலான விளம்பரங்கள் இன்றியே இப் பெயரின் தாக்கத்தினால் குறுகிய காலத்திலே வெற்றி FM பெற்ற வெற்றிகள் பல.

மக்கள் ஆதரவு.
பெயரினால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வெற்றி FM தொடர்ந்து தன் சிறப்பான நிகழ்ச்சி படைப்புகள், பாடல் தெரிவுகள், தரமான திறமையான புதிய அறிவிப்பாளர்கள் இவர்களுடன் முதற்தர முன்னணி அறிவிப்பாளர்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்கள் ஆதரவை பெருமளவில் இந்த மூன்று ஆண்டுகளில் பெற்று கொண்டுள்ளது.
எதிர்வரும் 13ம் திகதியுடன் நிறைவடையவிருக்கும் இதயத்தின் நாதம் வெற்றியின் சரித்திர பயணத்தின் மூன்றாண்டுகளில் வெற்றி செய்த சேவைகள்-பெற்ற வெற்றிகள் பல நுாற்றுக்கணக்கானவை. இதில் கடந்து செல்ல இருக்கும் இந்த மூன்றாவது ஆண்டு வெற்றியின் மிக பெரிய மைல்கல் எனலாம்.

கடந்த ஆண்டு பிறந்த தினத்தின் போது ஒரு பெரிய வரலாற்றை வானொலி துறையில் எழுத வேண்டும் என்ற குறிக்கோளுடன் நம்பிக்கையுடன் மூன்றாம் ஆண்டில் கால் பதித்த வெற்றி முதலில் வெற்றி பெற்றவர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. ஊடக துறையில் சிகரம் தொட்டவர்களை அழைத்து அவர்களின் அனுபவங்களை மீட்டிப்பார்ப்பதன் ஊடாக அவர்களுக்கான கௌரவத்தை வெற்றி வழங்கியது. தொடர்ந்து வெற்றி மேலும் சாதிக்கும் விதமாக தன் ஆளணியை பலப்படுத்தி கொண்டது. அந்த வகையில் முதல் அறிமுகமாக 01.06.2010 அன்று மரிய சீலன் என்ற பலதிறமைகளும் படைப்பாற்றலும் கொண்ட இளைஞன் வெற்றியின் அறிவிப்பாளர்கள்-படைப்பாளிகள் குழுமத்தில் இணைந்து கொண்டார். அவரை தொடர்ந்து ரூபன் ஃபிலிப், தர்ஷிகா, டிலக்ஸனா, துஷானி ஆகிய திறமையானவர்களும் 21.06.2010 அன்று முதல் வெற்றியின் சகல துறை வீர,வீராங்கனைகளாக களமிறங்கினர். இவர்களை அறிமுகப்படுத்தி வைத்த போது திரு.A.R.வாமலோஷன் அண்ணா அவர்கள் கூறியது “இவர்கள் எம்மோடு-உங்களோடு இணைந்து வெற்றியின் வெற்றி பயணத்தில் வெற்றி காண இருப்பவர்கள்…” என்பதாகும்.
அத்துடன் இத்தினத்தில் இருந்து புதிய நிகழ்ச்சி மாற்றங்களும் நடைமுறைக்கு வந்தன. அன்று வரை காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகி வந்த விநோத வியுகம் நிகழ்ச்சிக்கு பதிலாக அன்று முதல் “கேளு ராஜா கேளு” நிகழ்ச்சியும் இரவு 8 மணி முதல் 11 மணி வரை “நண்பனிடம் சொல்லுங்கள்” துயர் பகிரும் அருமையான நிகழ்ச்சியும் அறிமுகமானது. இவ்விரு நிகழ்சிகளையும் ரூபன்,டினேஷா,Hisham Mohamed,மரிய சீலன் இவர்களுடன் அண்மைகாலம் முதல் தர்ஷி ஆகியோர் நிகழ்ச்சி அறிமுகமாகி 250 நாட்கள் கடந்து வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய வண்ணமுள்ளனர்.

மேலும் பல புதியவர்கள் வெற்றியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றி சற்று பின்னர் பார்ப்போம்.

புதியவர்கள் வருகையின் போது தம் எதிர்கால வாழ்க்கைக்காகவும், புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கவுமென S.சதீஸ், R.ரஜீவ் மற்றும் திருமதி.வைதேகி சிறீபவன் ஆகிய மூவரும் வெற்றியில் இருந்து விடைபெற்றுக் கொண்டனர். அவர்கள் விடைபெற்ற Hisham அண்ணா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி போல பதிந்து நேயர்கள் மனதிலிருந்து மறக்க முடியாதவை.

வானலை ஊடாக நேயர்களை சந்தித்த வெற்றி அவர்களை நேரடியாக சந்திக்கும் பணியை திட்டமிடல் விரிவாக்க பிரிவின் ஜெய்சன்,விஜய் ஆகியோரின் வழிநடத்தலில் தொடர்ந்தது. இதன்மூலம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம். கிழக்கு மாகாணம், மலையகம், தலைநகர் என அனைத்து கிராமங்கள் நகரங்களிலிலும் வெற்றி வேருன்ற தொடங்கியது. இதுமட்டுமன்றி சமய,சமூக,கலாசார நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள், என்பவற்றிற்கு ஊடக அனுசரணைகளையும் வழங்கியது மட்டுமன்றி நடமாடும் சேவைகள், கண்காட்சிகள்,விழிப்புணர்வு செயற்திட்டங்கள் என்பவற்றிற்கும் தன் பங்களிப்பை வழங்கியது. இதில் முக்கியமானது வெற்றி மலையகத்தில் செய்த கண் சிகிச்சை முகாம் எனலாம்.
இதனால் நேயர்களிடையே பெரும் நன்மதிப்பை அதிகரித்து கொண்ட வெற்றிக்கு பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பெருகிய வண்ணமிருந்தனர். இதற்கு சான்று வெற்றியின் விடியல் நிகழ்ச்சிக்கு வந்து குவியும் கருத்துகள்(SMS & PHONE) மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளுக்கு வந்து சேரும் வாழ்த்துகள்,கருத்துகள்,பதில்கள் ஆகியன.
ஒரு தடவை கேளு ராஜா கேளு நிகழ்ச்சிக்கு வந்த பதில்களின் எண்ணிக்கையை பார்த்து நான் அனுப்பிய SMS…
Enna anna...name list Jaffna varai neelama erukku..good work anna&akka..best wishes...janakan-avarangal

இப்படியாக தொடர்ச்சியாக நேயர்களின் ஆதரவையும் தரமான நிகழ்ச்சிகளையும் கொண்டு வெற்றி வானலையாக வெற்றி Fm திகழ்திருந்த போது கடந்த ஆண்டில் நடுப்பகுதியில் சில கயவர்கள்-காடையர்களின் அடாவடிக்கு வெற்றி உட்பட நேர்ந்தது. 30.07.2010 அன்று அதிகாலை வேளையில் வெற்றி அலுவலகத்தினுள் நுழைந்த 15 பேர் கொண்ட காடையர்கள் குழு வெற்றியின் செய்தி பிரிவை தாக்கியும் தீயிட்டும் சென்றது. இதில் பணியில் இருந்த இரு செய்தியாளர்கள் பலத்த காயமடைந்தது மட்டுமன்றி வெற்றியின் செய்தி கோப்புகள் அனைத்தும் தீக்கு உணவாகின. இச்சம்பவம் நேயர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தின் விசாரணைகள் இன்றும் இழுத்தடிக்கப்படுவதும் குற்றவாளிகள் கண்டறியப்படாமையும் விசனத்திற்குரியது.

இந்த கருமையான சம்பவத்தினால் வெற்றியின் செய்தி பிரிவு ஒருவார காலமாக முடக்கப்பட்டிருந்தது.இதனால் செய்திகள் ஒரு வாரகாலம் இடம்பெறாமல் இருந்தது வேதனை பதிவுகளாகும்.
இருப்பினும் வீறு கொண்டெழுந்த வெற்றியின் பயணம் அசுரவேகமெடுத்தது. நிகழ்ச்சி முகாமையாளராக இருந்து 19.08.2010ல் வெற்றியின் பணிப்பாளராக திரு.A.R.V.லோஷன் அண்ணா பதவியேற்றதை தொடர்ந்து வெற்றியின் வளர்ச்சி போக்கு பலரை ஆச்சரியபட வைத்தது.

இலங்கையின் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு வெற்றியின் நிலையக்குறுயிசைகள் தயாரிக்கப்பட்டது முதல் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டது என வெற்றியின் அடுத்தகட்ட பயணம் ஆரம்பித்தது. உலக பிரசித்தி பெற்ற மாயாஜால நிபுணர் பேராசிரியர் P.M.மித்ரா அவர்களின் மாயாஜால் நிகழ்ச்சியை கொழும்பு,நுவரேலியா,வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நிகழ்த்தி சாதித்தது. மேலும் பல முக்கிய நிகழ்வுகளுக்கு ஊடக அனுசரணைகளையும் வழங்கியது.
இவ்விடத்தில் 08.10.2010ல் இடம்பெற்ற பதவி உயர்வும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றியின் பயணத்தில்.. வெற்றியின் அறிவிப்பாளர் Hisham அவர்கள் முகாமையாளராக அன்றைய தினம் பதவி உயர்வு பெற்றுக் கொண்டார்.

வெற்றியின் இசைபிரிவில் பிரதீப் அவர்களும் தயாரிப்பு பிரிவில் விமல் அவர்களும் பிரதானமாவர்களாக இருக்கின்றனர்.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இந்த பிரமாண்டமான வெற்றிகளை தொடர்ந்து புதிய அனுசரணையாளர்கள், விளம்பரதாரர்கள், என பலர் வெற்றிக்கு கிடைத்தனர். ஒரு கட்டத்தில் வெற்றியின் விடியல் நிகழ்ச்சிக்கு 8 அனுசரணையாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின் அது நிகழ்ச்சியின் தன்மையை பாதிக்கும் என்பதால் படிப்படியாக குறைக்கப்பட்டு ஏனைய நிகழ்ச்சிகளுக்கு பகிரப்பட்டிருப்பதாக உணர்கின்றேன்.
முக்கியமான தினங்களில் அதாவது தீபாவளி,நத்தார் தினங்களில் விஷேட நிகழ்ச்சிகளை தயாரித்து வெற்றி திறம்பட அரங்கேற்றியது. அதில் கோல்மால், திரைப்படம்(VTV) என்பன குறிப்பிடத்தக்கன. மேலும் V For வெற்றி V for விளையாட்டு 2010 ஒக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டதும் விளையாட்டு பிரியர்களுக்கு அவதாரத்துடன் இணைந்து பெருவிருந்தளித்தது. அத்தோடு “வெற்றி பெற்றவர்கள்” நிகழ்ச்சி மூத்த வானொலியாளர்களின் அனுபவங்களையும் ஆளுமைகளையும் இக்காலத்தவர்கள் அறியும் விதமாக அமைவதும் இது இத்துறைக்கு வரத் துடிப்பவர்களுக்கு சிறந்த ஆரோக்கியமான அடிப்படை கற்கையையும் வழங்குகின்றது.

புத்தாண்டு தினம்.
புதிய வருகையை நிலைநிறுத்தும் புத்தாண்டு தினம் வெற்றிக்கும் புதிய வருகையை கொடுத்தது. Voice Of Asia நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த வெற்றி 01.01.2011 முதல் Universal Network (pvt) Lid நிறுவனத்தின் அங்கமாக இணைந்து கொண்டது. இந்நிகழ்வு வானொலி வரலாற்றில் புதிய சரித்திரத்தை உருவாக்கியது எனலாம். முற்றுமுழுதாக தமிழர்களால் தமிழர்களுக்காக நடாத்தப்படும் வானொலியாக இதயத்தின் நாதம் வெற்றி Fm அமைந்து கொண்டது.
இந்த புதிய இணைப்பானது மேலும் வெற்றியை பலப்படுத்தியது. அன்றைய தினத்தில் இருந்து புதிய நிகழ்ச்சி மாற்றங்களும், புதிய ஏற்பாடுகளும், புதிய முயற்சிகளும் படிப்படியாக வெற்றியில் இடம்பெற ஆரம்பித்தது. அவ்வகையில் பங்குச்சந்தை, நாணயமாற்று, வர்த்தக சந்தை, போக்குவரத்து என பல விடயங்களை பகிரும் “ஓடு பாடு தேடு” நிகழ்ச்சியும் கவிதைகள் பகிரும் “நிலாக்கிறுக்கல்” நிகழ்ச்சியும் அறிமுகமானதுடன் லட்சம் தரும் அதிரடி புதிரடி, தங்கநாணய வேகம் விவேகம், ஆகிய நிகழ்ச்சி பரிசுதிட்டங்களுடன் விடியலில் பங்குசந்தை விடயங்கள், நாளொரு தளம், நேற்றைய நாளின் பிரபலம் ஆகிய விடயங்களும் கேளு ராஜா கேளு நிகழ்ச்சியில் ஞாபகம், இனியவளே, அந்நியன் ஆகிய விடயங்களும் பகல் பந்தியும் சமையல் சரோஜா விடயமும் கற்றது கையளவில் ஆய்வு, இதுவும் சொல்வோம் இன்னமும் சொல்வோம் முதலிய விடயங்களும் சேர்க்கப்பட்டன-வரவேற்கப்பட்டன.


மக்களை வானலையில் மகிழ்விப்பது மட்டுமன்றி அவர்களின் துன்பத்திலும் நேரடியாக இணைந்து பங்கெடுத்தல் செயற்பாட்டை வெற்றி மேற்கொண்டது வெற்றியின் மனிதாபிமான செயற்பாட்டை விளக்கி நின்றது. கடந்த மார்கழி முதல் 20 நாட்களுக்கு மேலாக பொழிந்த மழையினால் கிழக்கு மாகாணம் அவதியுற்ற வேளையில் வெற்றியின் “எம்மால் முடியும்” செயற்திட்டத்தின் மூலம் 13.01.2010ல் இருந்து மிக குறுகிய நாட்களுக்குள் அம்மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவுகள், புதிய ஆடைகள், மருந்துகள்,வைத்திய உதவிகள் என்பன கொழும்பிலிருந்தும் மலையகம் மற்றும் இதர பகுதிகளில் இருந்தும் மட்டக்களப்பு நோக்கி சென்றடைந்தது.
இப்பணியில் பதிவர்களும் இணைந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த இக்கட்டான தருணத்தில் வெற்றியின் கிழக்கு மாகாண நேயர்கள் ஒன்றிணைந்து சிரமதான, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய தகவல்கள் லோஷன் அண்ணாவின் தளத்திலிருந்து..
கடந்த பொங்கல் தினத்தன்று வெற்றி தன் பொங்கல் நிகழ்வை கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் நேயர்களுடன் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் மனதில் நீங்காத இடத்தை நிலையாக பெற்ற வெற்றி தன் உட்கட்டமைப்பை வலுப்படுத்த ஆரம்பித்தது. அந்த வகையில் 21.01.2011ல் சக்ஸிவர்ணன் அவர்களும், 22.01.2011ல் நம் பதிவுலக நண்பர் கோபிகிருஸ்ணா (கங்கொன்) அவர்களும் 26.01.2011ல் சூர்யா மற்றும் நதீஸ் ஆகியோரும் 31.01.2011ல் ஜெயமன் அவர்களும் வெற்றியில் திறமைக்கு முதலிடம் கொடுத்து உள்வாங்கப்பட்டனர். இவர்கள் தற்போது அறிவிப்பாளர்களாகவும் இணை தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.
உலக கிண்ண கிரிக்கட் காய்ச்சல் இலங்கையில் பரவ ஆரம்பித்தும் வெற்றி சூடு பிடித்தது. போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகளை 750 பேருக்கு 2500 அனுமதி சீட்டுகள் என்ற அடிப்படையில் இலங்கையில் வெற்றி மட்டுமே வழங்கி வருகின்றது. அத்துடன் உலக கிண்ண உலா, அணிகள் பற்றிய அறிமுகம், உடனடி தகவல்கள் என அனைத்து விடயங்களும் வெற்றியில் இடம்பெற்று நடைமுறையில் உள்ளன. இதில் சிறப்புக்குரிய மற்றொரு விடயம் கடந்த February 01ம் திகதி வெற்றியின் உலக கிண்ண பாடல் சமீலின் இசையில் ரஜீவ், பிரஷாந்தினி, ஷமீல், Nicky(USA), J Light(USA) ஆகியோரின் குரலில் வெற்றியின் கூட்டு முயற்சியில் ”வெற்றி வரும் சுற்றி வரும்..கிண்ணம் இனி எங்கள் வசம்…” என அறிமுகமானது. அத்துடன் சமீலும் வெற்றியுடன் இணைந்து கொண்டார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நேரத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடலில் எனக்கு பிடித்த சிலவரிகள்..
விதிகளை மீறி எதிரிகள் கூடி சதி செய்தார் அன்று
வலிகளை மறந்து வழிகளைகண்டோம்
முயற்சியும் பயிற்சியும் மூச்சென கலந்திட..
துணிவுடன் இறங்குஜெயம் ஜெயம்...
எதிர்ப்பவன் கண்ணில் பயம் பயம்...
நம்பிக்கையே உன் பலம்பலம்...
அடிகள் இடி போல் வானைப்பிளக்கட்டுமே...
வெற்றி வரும் சுற்றி வரும்
கிண்ணம் இனி எங்கள் வசம்
சிக்ஸ் அடிக்கும் எங்கள் கரம்- எட்டுத்திக்கும் Come onSrilanka..


கடந்த காலத்தில் பெற்ற வெற்றிகளுடன் இனிவரும் காலத்திலும் வெற்றி Fm ஐ தேடி வெற்றிகள் வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

லோஷன் அண்ணாவின் படைப்பில் வெற்றியின் விடியல் காத்திரமாக காலையில் ஒலிக்கின்றது. வியாழன் விடியல் பல கேள்விகளின் ஊடாக தெளிவான விளக்கங்களை பெற்று தந்து அறிவை மேம்படுத்துகின்றது - தேடலை வளப்படுத்துகின்றது.

ரூபன் அண்ணா டினேஷா அக்கா தற்போது தர்ஷி அக்கா ஆகியோரின் படைப்பில் காலை நேரத்தின் சுவாரஸ்யத்தை சினிமா சார்ந்த புதிர்களின் ஊடாகவும் கலகலப்பான உரையாடல்களினாலும் கேளு ராஜா கேளு அதிகரிக்க வைக்கின்றது.

பகல் வேளையின் வயிற்று பசியை உணவு தீர்த்து வைக்க இசைப்பசியை தீர்த்து வைக்கின்றது விமல் அண்ணா தர்ஷி அக்கா தற்போது டினேஷா அக்கா ஆகியோரின் படைப்பில் பரிமாறப்படும் பகல் பந்தி.!

உலகில் கற்ற விடயங்களை விட கற்காத விடயங்களே கடலளவில் பரந்து கிடக்கின்றது. அப்படியான விடயங்களை சுடச் சுட எம்முடன் பகிர்ந்து கொள்கின்றது Hisham அண்ணா தொடங்கி தற்போது வனிதா அக்கா வழங்கும் கற்றது கையளவு.!

புதிதாக அறிமுகமாகி மக்களின் அன்றாட பணிகளை இலகுவாக்க உதவும் ஓடு பாடு தேடு நிகழ்ச்சிக்கு வாழ்த்துகளும் தேடி தரும் சீலன் அண்ணாவிற்கு நன்றிகளும்..

மயக்கும் மாலை பொழுதில் கலகலப்பான உரையாடல்கள் ஊடாக வாழ்த்துகளை பரிமாறுகிறது பாபு அண்ணா, டிலக்ஸனா அக்கா ஆகியோர் கலக்கும் எங்கேயும் எப்போதும்.!

இன்பத்தில் மட்டுமன்றி துன்பத்திலும் பங்கெடுக்கும் நண்பனாக நேயர்களின் துன்பங்களை துடைக்கின்றது Hisham அண்ணாவின் நண்பனிடம் சொல்லுங்கள்.!

துாங்காத விழிகளில் இசை மீட்டும் கவிதைகள் கலந்து வானலையில் எமை தழுவி செல்லும் நிகழ்ச்சி காற்றின் சிறகுகள்.. வருட ஆரம்பத்தில் சதீஸ் அண்ணாவும் தொடர்ந்து ரஜீவ் அண்ணாவும் பின் சீலன் அண்ணாவும் வழங்கிய நிகழ்ச்சியை தற்போது சூர்யா அண்ணா வழங்குகின்றார்.

இசைப்பிரியர்களின் விருப்பத்தெரிவாக விளங்கி இரவுப்பணிகளை தடுக்கும் துாக்கத்தை துாக்கி போடுகின்றது சக்ஸியின் இசை ராஜாங்கம்..!

கவிதைகளுடன் நிலாக்கிறுக்கலும், நறுமண வாழ்த்துகளுடன் பூ பூக்கும் நேரமும் அன்றைய நாளை இரவிலிருந்து பகலுக்கு நதீஸ் அண்ணா, துஷி அக்காவின் வழிகாட்டலில் அழைத்து செல்கின்றன..
அவ்வாறே வார இறுதி நாட்களில் புதிர்கள் போடும் “அதிரடி புதிரடி”(சனி), “வேகம் விவேகம்”(ஞாயிறு), ஏன் எதற்கு எப்படி”(சனி) நிகழ்ச்சிகளும், நகைச்சுவை, கலகலப்பு, வாழ்த்துகள் என பல்சுவை விருந்தாக “உலாவரும் உற்சாகம்”(சனி), “வாங்க நீங்க”(ஞாயிறு), “குதுாகல குடும்பம்”(ஞாயிறு), “தாம் துாம்”(ஞாயிறு) நிகழ்ச்சிகளும், திரைப்படங்கள், பாடல்கள் என்பவற்றின் தரவரிசையை-விமர்சனத்தை சொல்லும் 20 புதுஇசை(சனி), “சினிமாலை”(ஞாயிறு) நிகழ்ச்சிகளும், விரிவான அலசலுடன் விளையாட்டு பிரியர்களின் தெரிவாக சனி தோறும் லோஸன் அண்ணா விமல் அண்ணா வழங்கும் “அவதாரமும், மூத்த வானொலியாளர்களை கௌரவிக்கும் “வெற்றி பெற்றவர்களும்”, காலத்தால் அழியாத இடைக்கால,பழைய பாடல்களை தரும் “தீரா ராகம்”, “அமரகானம்”(ஞாயிறு) நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணைந்து வார இறுதி நாட்களை உற்சாகப்படுத்தி பூரணப்படுத்துகின்றன.


வாரநாட்களின் நிகழ்சிகள் பற்றிய முன்னோட்டம்..


வெற்றியின் வெற்றிமிக்க மூன்றாண்டு பயணத்தில் கடந்து செல்ல இருக்கும் மூன்றாம் ஆண்டின் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டது மன மகிழ்ச்சியை தருகின்றது.
இப்பதிவை எழுத எண்ணிய எனக்கு முதலில் அனுமதி வழங்கி தகவல்களையும் ஆலோசனைகளை தந்துதவிய வெற்றியின் பணிப்பாளர் அன்புக்குரிய திரு A.R.V.லோஷன் அண்ணாவிற்கும் உதவிகள் செய்த நண்பர் அறிவிப்பாளர் ரூபன் அண்ணா அவர்களுக்கும் என் இதய நன்றிகள்.
மேலும் இந்த இசைவடிவங்களையும் பதிவையும் ஒழுங்குபடுத்த ஆலோசனைகள் தந்த என் நண்பன் நல்லுார் பிரஜன் என வானலையில் தன்னை தெரியப்படுத்தும் பிரஜாபதி அவர்களுக்கும் நன்றிகளை பகிர்கின்றேன்.
இதயத்தின் நாதம் வெற்றி Fm தன் வெற்றிப் பயணத்தின் நான்காம் ஆண்டில் கால் பதிக்கவிருக்கும் இத்தருணத்தில் மீண்டும் வெற்றிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு தொடர்ந்தும் இதயத்தின் நாதம் வெற்றியுடன் இதய பூர்வமாக இணைந்திருப்போம்.

என்றும் எம்முடன் வெற்றி FM..நாம் என்றும் வெற்றியுடன்..

இதயத்தின் நாதம் வெற்றி..வாழ்க்கைக்கு வெற்றி..

வெற்றி நேயர்களில் சிலர் பகிர்ந்துள்ள வாழ்த்துகளை இங்கே கேட்க முடியும்..

மீண்டும் சந்திப்போம்
என்றும் அன்பின்,
நண்பர்களே.. Face book, மின்னஞ்சல் தளங்களில் பகிரப்பட்ட கருத்துகள் இங்கே..


10 Responses so far

 1. வெற்றிக்குடும்பத்துக்கு வாழ்த்துக்கள். :)

 2. Bavan says:

  வாவ், வெற்றி பற்றி வெற்றிகரமான அலசல்..:)

  வெற்றிக்கு முற்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஜனகனுக்கும்..:))

 3. sanjeevan says:

  மூன்றே மூன்று ஆண்டுகளில் முதல்தர வானொலிகளில் ஒன்றாக மாற்றியது லோசன் அண்ணாவின் தனித்திறமை...
  காலை எழுந்தவுடன் விளையாட்டுச்ச்செய்தி கேட்க என்னைப்போல் பலர் தேடும் அலைவரிசை வெற்றி....
  வெற்றிக்குடும்பத்துக்கு எனது வாழ்த்துக்கள்!!!

 4. S.S.BABU says:

  உங்களை போன்ற நேசிக்கும் உள்ளங்கள் இருக்கும்வரை என்றுமே வெற்றிக்கு வெற்றியே....... வாழ்த்துக்கள் ஜனகன்....

 5. game zone says:

  vettriyai nesikkum ungalai pondra neyargalukku vettri thalai vanangugiradhu

 6. அருமையாக பல நினைவுகளை மீட்டிச் சொன்னீர்கள்...
  வாழ்த்துக்கள் வெற்றி...
  வடமராட்சியில் இருந்தபடி வெற்றியின் நிண்ட நாள் நேயராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வேன்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

 7. வெற்றிக்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்திற்காக தனக்கு பிடித்தமான வானொலித் துறையில் இருந்து விளகிய இன்னொரு அறிவிப்பாளரைப் பற்றி மறந்துவிட்டீர்கள் போல் தெரிகின்றது.

 8. வாழ்த்துக்கள்

Leave a Reply