எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts
Friday, March 2, 2012

இந்துக்களின் போர் - Day 01

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

Battle Of The Hindus – 2012

“இந்துக்களின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக்கல்லுாரி, கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிகளுக்கிடையிலான வருடாந்த துடுப்பாட்ட போட்டி இவ்வருடம் கொக்குவில் இந்துக்கல்லுாரி நாகலிங்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.




நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணித்தலைவர் கிருசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் களமிறங்கினர்
இரு அணி வீரர்களும்
                                    

கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 275 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர். கொக்குவில் இந்துக்கல்லுாரி சார்பில் அணித்தலைவர் பங்குயன் 126 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவர் கடந்த வருட போட்டியில் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்குயனுடன் இணைந்து ஜனுதாஸ் 5 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களையும் ராகுலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.


கீர்த்திகன்                                  05 ஓட்டங்கள்
சத்தியன் ...................................05   ஓட்டங்கள்
பங்கயன் ...................................98  ஓட்டங்கள்
திவாகர் .....................................09      ஓட்டங்கள் 
ராகுலன் ...................................37    ஓட்டங்கள்
ஆதித்தன் .................................05  ஓட்டங்கள்
ஜனுதாஸ் ................................61  ஓட்டங்கள்
சிலோஜன் ...............................06  ஓட்டங்கள்
நிசாந்தன் ..................................02    ஓட்டங்கள்
பார்த்தீபன் ................................06  ஓட்டங்கள்
பவிதரன் ஆட்டமிழக்கால் 03 ஓட்டங்கள்

உதிரி ஓட்டங்கள் – 34


மொத்த ஓட்டங்கள் 275-10 (68.4 ஓவர்கள்)

பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லுாரி சார்பில்
வாமனன் 16 ஓவர்கள் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
ருக்ஸ்மன் 12 ஓவர்கள் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
நிலாஜனன் 05 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகள்
கிருசோபன் 06 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
ஜஸ்மினன் 8.4 ஓவர்கள் 18 ஓட்டங்களுக்கு 1 விக்கட்



தேநீர் இடைவேளையை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யாழ் இந்துக்கல்லுாரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவில் 28 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் மதுசன் 64 ஓட்டங்ளையும்
ஜஸ்மினன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களைத் தவிர,

கல்கோகன்................................... 06 ஓட்டங்கள் (ஓய்வு)
சஜீகன் .............................................00 ஓட்டங்கள்
ருக்ஸ்மன் .....................................00 ஓட்டங்கள்
சிந்துஜன் ஆட்டமிழக்காமல் 09 ஓட்டங்கள்

பந்து வீச்சில் கொக்குவில் இந்துக்கல்லுாரி சார்பில் ராகுலன் 02 விக்கட்டுகளையும்
பங்குயன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.


    போட்டி நாளை காலை 09 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து இடம்பெறும்.
Continue reading →
Saturday, January 14, 2012

தமிழ் எழுத்தியல் துறையிலும் ஊடக துறையிலும் பெண்களின் பங்கு.

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

வணக்கம் நண்பர்களே,
எனது 50வது பதிவினுாடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் பதிவுலக ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களனைவருக்கும் என் நன்றிகள்.
என்னை பதிவெழுத துாண்டியவை லோஷன் அண்ணாவின் பதிவுகள். 
எனக்கு களம் அமைத்து தந்தவர் அன்புக்குரிய மதிசுதா அண்ணா
இவர்கள் இருவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

............................................................................................................................................................................................................................................................................................................

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இந்தியா செல்ல முடிந்தது. அங்கு இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட கருத்தமர்வுகளில் இருந்து பல விடயங்களை கற்க முடிந்தது. அவற்றில் ஒரு கருத்தமர்வில் பகிரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பதிவு தயாராகின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் எழுத்து துறையிலும் ஊடக துறையிலும் அதிகம் சாதித்து வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு என்று சமூகத்தில் இருக்கின்ற வாய்ப்புகளும் காரணமாக அமைகின்றன. ஆண் ஒருவன் சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு தகுதியுடையவன் என பலரும் நம்புவதால் ஆண் படைப்பாளிகளை இன்று நாம் அதிகமாக பார்க்கின்றோம். ஆணுக்கு நிகரானவள் பெண் என்பது நிஜம். அதனால் எந்த துறையாக இருந்தாலும் இன்று பெண்களும் அத்துறைகளில் ஆண்களுக்கு இணையாக கோலுச்சி வருகின்றனர். அந்த வகையில் இன்று இதழியல் துறையில் சாதிக்கும் பெண்களும் பலர் உள்ளனர். அத்துடன் ஆண் இலக்கிய வாதிகள் பெண்களின் பெயர்களை தம் படைப்புகளில் புனை பெயராக கொண்டு எழுதி வருகின்றனர் என்பதன் ஊடாக பெண்கள் இலக்கிய படைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றதல்லவா?

பேராசிரியை தாயம்மாள் அறவாணன்

பெண்கள் பாரதியின் புரட்சிக்கு பின்னர்தான் சமூகத்தில் சாதிக்க வந்தனர் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும் இலக்கிய துறையிலும் இதழியல் துறையிலும் பெண்கள் தமது படைப்பாற்றலை சங்க காலத்திலேயே ஆரம்பித்து விட்டனர். சென்னை பல்கலைகழகத்தில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகின்றது.

நுால்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவரும் கொங்கு பத்திரிகையின் ஸ்தாபகராக விளங்குபவருமான பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பேராசிரியரும் தொடர்பியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியாராவார். கணவரின் இலக்கிய பயணத்திலும் கல்வி பயணத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23 நுால்களை இதுவரை வெளியிட்டு உள்ளார். இவற்றில் சிலப்பதிகாரத்தில் வாய்மொழி கதை, ஔவையார் நுால் என்பன பெருமை பெற்றவையாகும். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக சக்தி விருது, ஔவை விருது முதலிய விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலம் முதல் இன்று வரை உள்ள பெண் கவிஞர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர் தனது ஆய்வினை அடிப்படையாக கொண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது கருத்துரையை நிகழ்த்தினார். சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் அமைந்த பாடல்களில் பல பாடல்களை அக்காலத்தில் இருந்த பெண் கவிஞர்கள் பாடியுள்ளனர். அக்காலத்தில் இருந்த 473 புலவர்களுள் சுமார் 45 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கற்றுத் தேர்ந்த புலவர்களும் இருந்தனர். சாதாரணமான பெண்களும் இருந்தனர். குறத்தி இனத்தை சேர்ந்தவர்களும், பானை செய்யும் பெண்களும், சேலை துவைக்கும் பெண்களும் கூட கவிதாயினிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக குறத்தி இனத்தை சேர்ந்த இளையோதி, குளையோதி ஆகிய பெண் புலவர்களை குறிப்பிடலாம்.

சங்க காலத்தில் கவிபுனைய ஆரம்பித்த பெண்கள் தொடர்ச்சியாக கவிபுனைவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். அந்த வகையில் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மங்கையற்கரசியார் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் புலவர்கள் தோன்றிய வண்ணமே இருந்தனர். இவர்கள் ஆண் புலவர்களுக்கு சவாலாகவும் அவர்களின் கவித்துவத்திற்கு இணையாகவும் பாடல்களை பாடி வந்துள்ளனர். இவர்களில் புலமைப்போரில் ஈடுபட்ட ஔவையாரை இவ்விடத்தில் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும்.


பிற்பட்ட காலத்திலே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கவிஞர்களாக இருந்த ஜானகி அம்மையார், லட்சுமி அம்மையார் ஆகிய இருவரும் பெண் கவிஞர்களுள் முதன்மை பெறுகின்றனர். இவர்களில் லட்சுமி அம்மாள் வியாசட்ட முறையில் அதாவது ஒரு வரியில் அமைந்த விடயத்திற்கு நீண்ட தெளிவான விளக்கம் தருவது வியாசட்ட முறையாகும். அந்த வகையில் வியாசட்ட முறையில் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு தெளிவான பொருளுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஒரே ஒரு பெண் லட்சுமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து 19ம் நுாற்றாண்டின் பெண் கவிஞர்கள் பற்றி பார்த்தால் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். 1909ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆவண காப்பகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண்கள் பற்றிய தகவல்களை அறிய முடிந்ததாக குறிப்பிட்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் அன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால் தான் இன்றைய பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் சுமார் 107 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

பெண் கவிஞர்களின் தோற்றத்தில் அவர்களின் இளவயது திருமணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. கணவன் இறந்த பின் அப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு கல்வி கற்பித்தலை ஊக்குவித்ததால் அப்பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ந்தனர். பின் சமூகத்தின் மீதான அவர்களின் பார்வை அகல விரியவே அவர்கள் கவிஞர்களாக மாறினர்.

விழுப்புரம் அகலாம்பிகை என்ற பெண் சிறுவயதிலேயே விதவையானவர். பின் இரட்டணை என்ற ஊரில் தங்கியிருந்து ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யாப்பு நயம்பட பல்வேறு கவிதைகளை வெளியிட்டார். இவரின் சிறப்புக்குரிய படைப்பாக மகாத்மா காந்தி தொடர்பாக இவர் எழுதிய ஏழு காண்டங்களை கொண்ட நுால் விளங்குகின்றது.
பத்மாவதி, கிருஸ்ணவேணி ஆகிய சகோதரிகள் கும்மியடிக்கும் பெண்களாக விளங்கினர். இவர்களிடம் இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற இசை அறிவின் காரணமாக இவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் இசயோடு இணைந்து காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண பெண்ணாகிய சம்பூர்ணம் என்பவர் சமையல் செய்து கொண்டே தமயந்தி நாடகம் தொடர்பாக கவிதைகளை எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வை.மு.கோதைநாயகி

இவ்வாறாக பெண்கள் கவித்துறையில் சாதித்தது மட்டுமன்றி பல பெண்கள் இன்றும் ஊடக துறையில் சாதித்த வண்ணம் உள்ளனர். தமிழ் மொழியே தெரியாத வை.மு.கோதைநாயகி என்ற பெண் கணவரின் துணையோடு நின்று 15 நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த ஜெகன்மோகினி பத்திரிகையின் ஸ்தாபகராகவும் இப்பெண் விளங்கியுள்ளார். அத்துடன் பல பெண்கள் நாடு கடந்து சென்றும் பத்திரிகை துறையில் செயற்பட்டிருக்கின்றனர். இன்றைய தமிழ் பெண் பத்திரிகையாளர்களின் கதாநாயகிகளில் முக்கியமானவர் இலங்கையின் மலையத்தில் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக கணவருடன் இணைந்து போரிட்ட மீனாட்சியம்மாள் நடேசையர் அவர்கள்.
மீனாட்சியம்மாள் நடேசையர்

இந்திய வம்சாவளி மக்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்திரிகைகள் ஊடாக குரலெழுப்பி வந்த நடேசையர் அவர்களை ஆங்கில அரசு தடை செய்த போது அங்கிருந்து இலங்கை வந்து மலையக வாழ் இந்திய மக்களுடன் இணைந்து வாழ்ந்து அவர்களுக்கான உரிமைகளை தேடியறிந்து அதனை பெற்றுத்தருவதற்காக பத்திரிகைகளை உருவாக்கினார். கணவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இங்கு பெண்களுக்கான உரிமை போரிலும், மக்களின் விடுதலை போரிலும் தன்னையும் இணைத்து கவிதைகளை எழுதியதுடன் வீடு வீடாக சென்று பாரதியார் பாடல்களை பாடி புரட்சி தீயினை வளர்த்தார். இவர் மாறுவேடம் பூண்டு நடாத்திய பத்திரிகைகள் தேச நேசன், தேச பக்தன், உரிமைப்போர், தொழிலாளி, சுதந்திர போர் என்பனவாகும்.

நன்றி இணையம் www.fashioner.com

இவர்களின் வழித்தோன்றல்களாக இன்றைய பெண் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சவால் மிக்க இன்றைய ஊடக துறையில் இவர்களின் பணி மெச்சத்தக்கது. இன்றைய நாளில் பெண் ஊடகவியலாளர்கள் சாதிப்பதை விட சவால்களையே அதிகம் சந்திக்கின்றனர். பாலியல் ரீதியான அழுத்தங்கள், ஆணாதிக்கம் என்பன இவர்களை கட்டுப்படுத்தும் காரணிகளில் முதன்மை பெறுகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் தமக்கான பாதுகாப்பு வேலிகளாக கொண்டு இத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை நாம் பாராட்டியேயாக வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமன்றி மேன்மையானவர்கள் அதனை நாம் உணர வேண்டும். மோசமான படைப்புகள் பல பெண்களின் புனை பெயர்களின் வெளிவரும் இன்றைய சவால் மிகுந்த காலத்தில் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பெண்கள் இலக்கிய படைப்பாற்றலிலும், ஊடகத்துறையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாகவும் அமைகின்றது.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Thursday, July 7, 2011

கைவிடப்பட்டுள்ள நிலையில் வரலாற்று சின்னங்கள்

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணத்தில் மன்னர் காலம் தொட்டு இன்று வரை அதிகளவில் பிரபல்யம் பெற்ற பிரதேசமாக காணப்படுவது நல்லுார் பிரதேசமாகும். மன்னர் காலத்தில் அவர்களின் இராசதானிகள், அரண்மனைகள் என அரசியல் ரீதியாகவும் ஆலயங்கள் என்பதனுாடக பண்பாட்டு ரீதியிலும் நல்லுார் பிரபல்யம் பெற்றிருந்தது. இதனால் வாழையடி வாழையாக வந்த சந்ததியினருக்கு யாழ்ப்பாணம் என்றதும் நல்லுார் சட்டென ஞாபகம் வரும் விதத்தில் மனதில் பதிந்திருந்தது, பதியப்பட்டிருந்தது.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போதும் இது அசையாதிருந்தது. விடுமுறையை களிப்பதற்காக யாழ்ப்பாணம் வருபவர்களின் பிரதான தரிசனமாக நல்லுார் காணப்படுகிறது. உள்ளுர் மக்களாலும் வெளியுர் மக்களாலும், வெளிநாட்டு மக்களாலும் நிரம்பியிருந்த நல்லுார் 1980 களின் ஆரம்ப காலத்தில் இலங்கையில் உண்டான பதற்ற நிலையும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற 30 ஆண்டு யுத்தம் என்பன காரணமாக வெறிச்சோடி போகும் நிலை உண்டானது.

2002ல் ஏற்பட்ட சமாதான சூழ்நிலையின் போது வெளி பிரதேச மக்களின் வருகை யாழ்ப்பாணத்தை நோக்கி மீள ஆரம்பித்ததும் நல்லூர் பிரதேசம் மேலும் பிரபலம் பெற ஆரம்பித்தது. எனினும் இது 2007 வரையே தொடர்ந்தது.

2009ல் யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதி சூழல் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு யாழ்ப்பாணத்தை நோக்கி திரும்பியது. தினசரி தென்னிலங்கை சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பலநுாற்றுக்கணக்கில் யாழ் வர தொடங்கினர். இதன் காரணமாக சோர்ந்திருந்த நல்லுார் மீண்டும் சுறுசுறுப்பாகியது. 

பொதுவாகவே நல்லுார் கந்தசுவாமி ஆலயம் இலங்கை பற்றி அறிந்தவர்களின் மத்தியில் பிரசித்தி பெற்றது. ஆகையால் யாழ்ப்பாணம் நோக்கி வரும் இந்தியா உட்பட பல நாடுகளின் பயணிகள் நல்லுார் வந்து செல்ல தவறுவதில்லை. நல்லுார் முருகன் ஆலயம் பெரிய அழகிய கோபுரம், புதிதாக அமைக்கப்படும் கோபுரம், பரந்த ஆலய வளாகம் என மிக பிரமாண்டமான வடிவமைப்புடன் தோற்றமளிக்கின்றது.
மேலும் ஆலயத்தினை சூழ உள்ள திருமண மண்டபங்கள், மணிமண்டபங்கள், நினைவுகற்கள் முதலியவும் சுற்றுலா பயணிகளின் பார்வையில் அகப்படுகின்றன.


பொதுவாக சுற்றுலா பயணிகளின் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்பாக இருப்பது குறித்த ஓர் இடத்தில் அனேக விடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். அதனால் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் நல்லூர் ஆலய சுற்றுப்புறத்தில்  விற்பனை நிலையங்கள் பல தற்போது அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நல்லுார் சிறு வர்த்த நகராகி விட்டது

இவை பயணிகளை கவர்ந்திழுக்கின்றன என்பது ஒருபுறமிருக்க அவர்களை மேலும் மகிழ்விக்க கூடிய இடங்களும் நல்லுாரை சுற்றி காணப்படுகின்றன. ஆனால் அவை இன்று கவனிப்பாரற்ற நிலையில் சிதையும் தறுவாயில் உள்ளன. அதனால் அவை அனுபவிக்கும் நிலையில் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.
தரைமட்டமாக்கப்பட்டுள்ள பூங்காவின் ஒரு பகுதி

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் வீதியில் சுமார் 800m தொலைவில் பூங்கா ஒன்று காணப்பட்டது. அன்று இப்பூங்காவானது சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களுடன் அழகிய தோற்றத்துடன் ரம்மியமாக விளங்கியிருந்தது. ஆனால் இன்றோ இப்பூங்கா கைவிடப்பட்ட பிரதேசம் போல காட்சியளிக்கின்றது. சிறு வயதில் நான் விளையாடிய இந்த கிட்டுப்பூங்காவில் இருந்த ஊஞ்சல்கள் இன்று ஆட்டமின்றி காணப்படுகின்றன. அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கை குகை, செயற்கை குன்று செயற்கை நீர்வீழ்ச்சி என்பனவும் இன்று அழியும் நிலையில் காணப்படுகின்றன.



பூங்காவில் உள்ள குகை ஒன்றின் சிதைவடைந்த பகுதி

தொடர்ந்து பருத்தித்துறை வீதியில் செல்கையில் உள்ள நுழைவாயில், மந்திரி மனை முதலியனவும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. இக்கட்டிடங்களின் சுவர்கள் வெடித்தும்,கட்டிடத்தின் சுவர்களை ஊடறுத்து மரங்கள் வளர்ந்திருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. நீண்டகாலமாக இவற்றை பாதுகாக்கும் வேலைகள் எதுவும் இக்கட்டிடங்களுக்கு இடம்பெறவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே.



தமிழா்களின் பண்டைய வரலாற்றை பேசிநிற்கும் தடங்களில் முக்கிய இடம் வகிக்கும் இவ்விடங்களுடன் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் சிலை ஒன்றும் இங்கு காணப்படுகின்றது. தமிழர்களின் ஓயாத வீரத்தினை பாராட்டி நிற்கும் இச்சிலையானது இன்று முறையான பராமரிப்பு இனை்மையால் உடைந்து விடும் சாத்தியத்தில் காணப்படுகின்றது.

இச்சிலையில் உள்ள சங்கிலிய மன்னனின் குதிரையினது முகமானது மிகவும் சிதைவடைந்துள்ளது. மன்னனின் பட்டத்து குதிரையின் மூக்கு உடைந்த நிலையில் அந்த சிலையை நான் கண்ட போது பல்வேறு நடைமுறை சம்பவங்கள் மனதில் வந்து போயின. இவ்வாறான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள் பல யாழில் சிதைவடைந்த நிலையில் இருப்பது மனவேதனையை தரும் விடயங்களாகவே அமைகின்றது.

இவ்வாறன வருந்த தக்க விடயத்தின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இங்கு,

சுற்றுலா பயணிகளினால் நாட்டிற்கு கிடைக்கும் வருமானம் மிக அதிகமாகும். அதிலும் காலநிலை ரீதியாக நோக்குகையில் யாழ்ப்பாணத்தின் காலநிலையானது வருடமொன்றிற்கு எட்டு மாதங்கள் வரை சுமுகமாகவே இருக்கும். இதனால் அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை யாழ் நோக்கியதாக அமைகின்றது. ஆனால் இங்கிருக்கின்ற வளங்கள் உரியவர்களினால் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் வேண்டா வெறுப்பாக கைவிடப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் யாழ்ப்பாணம் வரும் இவர்கள் திரும்பிச்செல்லும் போது ஏமாற்றத்துடனேயே செல்கின்றனர்.

ஆகவே யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பகுதியாக விளங்கும் நல்லுார் பகுதியை குறித்த தரப்பினர் துரித முயற்சி எடுத்து அழகு படுத்துவதன் ஊடாக இனி வரவிருக்கும் சுற்றுலா பயணிகளையும் கவரகூடியதாக இருக்கும். அத்துடன் யாழ்ப்பாணத்தின் வரலாறு பேசும் சின்னங்கள் அழிவடையாமல் பாதுகாக்கப்படுவதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு யாழ் மண்ணின் தொன்மை புலப்படுத்தபடும். ஆகையால் இதற்கான நடவடிக்கைகளை குறித்த தரப்பினர் மேற்கொள்வது காலத்தின் காட்டாயமாகும்.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,
Continue reading →
Thursday, June 30, 2011

கடிவாளம் பத்திரிகை வெளியீடு.

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் நான்காம் அணி முழுநேர இரண்டாண்டு ஊடக கற்கை நெறி மாணவர்களின் வெளியீடுகளில் முதல் வெளியீடான ‘கடிவாளம்’ பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

யாழ் பல்கலை கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலை பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், ஊடகக் கல்வியானது கல்விச் செயற்பாடுகளில் முதன்மையானதாகும். இதனை ஒரு கலையாக தனித்துவம் வாய்ந்தவர்கள்; வளர்த்தனர். இன்றைய நிகழ்வின் வெளியீடான பத்திரிகையின் பெயர் கடிவாளம் எனும் போது நான் சற்று சிந்தித்தேன். பொதுவாக எந்த செயற்பாட்டுக்கும் ஒர் கட்டுக்கோப்பான ஓர் வரையறையால் வழிப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் இப்பத்திரிகைக்கு கடிவாளம் எனும் அர்த்தமான பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.

ஏனைய பல்கலை கழகங்களுடன் ஒப்பிடும் போது யாழ் பல்கலை கழகத்திலேயே முதன் முறையாக ஊடக கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. எனவே யாழ் பல்கலை கழக ஊடக மாணவர்கள் மற்றைய பல்கலை கழகங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் தனித்துவம் உள்ளவர்களாகவும் வருவார்கள். ஆகவே இதனுடன் தொடர்புடைய அனைவரும் அர்பணிப்புடன் செயற்பட்டு சமுகத்தை கட்டியெளுப்பும் மாறாத பொறுப்பு எங்களிடம் இருத்தல் வேண்டும். யாழ் பல்கலை கழகத்தின் மகுட வாசகமான ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்பதற்கமைவாக உள்ளதை உள்ளவாறு சொல்வது ஊடகம் என்பதற்கு அமைவாகவும் மாணவர்கள் செயற்பட வேண்டும். எனவே இந்த குறுகிய கால கற்கை நெறியை தொடர்ந்து முதல் முயற்சியாக கடிவாளம் பத்திரிகையினை வெளியிடும் முயற்சியை பாராட்டுவதோடு மாணவர்களின் பணி இன்னமும் சிறக்க யாழ் பல்கலை கழகத்தின் சார்பாக எங்களது உதவி உங்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் சிறப்புரையாற்றினார். பத்திரிகைகளின் மதிப்பீட்டு உரைகளை குடாநாட்டு பத்திரிகை ஆசிரியர்களும்,எழுத்தாளர்களும்,பேராசிரியர்களும் மேற்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் குடாநாட்டு ஊடகவியலாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்திகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்த வெற்றி FM-TV நிறுவனத்திற்கும், தீபம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் மற்றும் தொலைபேசி ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வாழ்த்திய சக்தி Fm நிறுவனம், சூரியன் Fm நிறுவனம் மற்றும் பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும் ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஸ் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றி
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,


Continue reading →
Photobucket