எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, November 12, 2010
0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
னித மொழியும் மொழியியல் ஆய்வுகளும்,கோட்பாடுகளும்
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என ன்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறுதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந் ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.(செம்மொழி மாநாட்டில் கேட்டிருப்பீர்கள்)
பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது.
 • விளக்கமுறையும் வரலாற்றுமுறையும் (Synchronic and diachronic) -- விளக்கமுறை, என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மொழியின் நிலையைக் கருத்திலெடுத்து ஆய்வு செய்வதைக் குறிக்கும். வரலாற்றுமுறை என்பது ஒரு மொழியின் அல்லது ஒரு மொழிக் குழுவின் வரலாற்றையும், அவற்றில் எவ்வாறான அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வதாகும்.
 • கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு முறை -- கோட்பாட்டு மொழியியல், தனிப்பட்ட மொழிகளை விவரிப்பதற்கான சட்டகங்களை (frameworks) உருவாக்குவதுடன், அனைத்து மொழிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் கவனத்திற் கொண்டுள்ளது.
 • சூழ்நிலைசார் மற்றும் சுதந்திரமான -- இப்பகுப்பு தொடர்பில் சொற்கள் சரியாக நிலைநிறுத்தப்படாததால், வசதி கருதி இப் பெயர்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் பெரு மொழியியல் (macrolinguistics), நுண் மொழியியல் (microlinguistics), என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறது. சூழல்சார் மொழியியல், ஒரு மொழி எவ்வாறு இந்த உலகத்துடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை, அதன் சமூகச் செயற்பாடு, எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பவற்றைக் கருத்திலெடுத்து ஆராய்கின்றது.சுதந்திர மொழியியல், மொழிகளின் புறநிலை அம்சங்களைக் கருத்தில்கொள்ளாது, அம் மொழிகளைத் தனியாக ஆராய முற்படுகிறது.
இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே "மொழியியலாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் "கோட்பாட்டு மொழியியல்" என்று அழைக்கப்படுகிறது.
கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன:
 • ஒலிப்பியல் (phonetics)- ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை.
 • ஒலியியல் (phonology)- ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை.
 • உருபனியல்- சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை.
 • சொற்றொடரியல் (syntax)- எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை.
 • சொற்பொருளியல் (semantics)- சொற்களின் நேரடியான (literal) பொருளை ஆராய்தலுக்கும்,அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை.
 • மொழிநடை (stylistics)- மொழியின் பாணிகளை ஆராயும் துறை.
இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன.
வரலாற்று மொழியியல்
கோட்பாட்டு மொழியியலின் மையக்கருவானது, மொழியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (அநேகமாக நிகழ்காலம்) ஆராய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை, வரலாற்று மொழியியல், எப்படி மொழி காலப்போக்கில், சிலவேளைகளில் நூற்றாண்டுகளில், மாற்றமடைகின்றது என்பதை ஆராய்கின்றது. வரலாற்று மொழியியல் வளமான வரலாற்றையும் (மொழியியல் துறை வரலாற்று மொழியியலிலிருந்தே உருவானது), மொழி மாற்றங்களை ஆராய்வதற்கான பலமான கோட்பாட்டு அடிப்படையையும் கொண்டுள்ளது.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், வரலாறல்லாத நோக்கின் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரலாறல்லாத நோக்கு சார்ந்த திருப்பம், பேர்னட் ஸோசருடன் தொடங்கி நோம் சொம்ஸ்கி காலத்தில் முன்னணிக்கு வந்தது.
வெளிப்படையாக வரலாற்று நோக்கு வரலாறுசார்-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சொற்பிறப்பியல் (etymology) என்பவற்றை உட்படுத்தியுள்ளது.
பயன்பாட்டு மொழியியல்
கோட்பாட்டு மொழியியல், ஒவ்வொரு மொழிக்கு உள்ளேயும், ஒரு குழுவாக எல்லா மொழிகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான தன்மைகளைக் கண்டுபிடித்து விளக்கமுயலுகின்ற அதேவேளை, பயன்பாட்டு மொழியியல், இந்தக் கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகளை ஏனைய துறைகளில் பயன்படுத்துகிறது. வழக்கமாகப் பயன்பாட்டு மொழியியல், மொழியியல் ஆய்வை, மொழி கற்பித்தல், மற்றும் ஏனைய துறைகளில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. பேச்சுத் தொகுப்பு (Speech synthesis) மற்றும் பேச்சு அடையாளம்காணல்(Speech recognition), என்பன, கணனிகளில் குரல் இடைமாற்றிகளை ஏற்படுத்துவதற்கு மொழியியல் அறிவைப் பயன்படுத்தும் உதாரணங்களாகும்.
அறிவியல் அணுகுமுறை
தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக வெளியிடப்படுன்றனவோ அம்மொழிசார் மக்களுக்கு இந்த அறிவு இலகுவில் கிட்டிவிடுகின்றது. எந்த மொழிகளில் அறிவியல் ஆய்வு ஏடுகள் ஓரளவாவது வெளிவருகின்றனவோ அவற்றை அறிவியல் மொழிகள் என்றும், எதில் கூடுதலாக வெளிவருகின்றனவோ அதை அறிவியலின் மொழி என்றும் கூறலாம். அறிவியல் மொழி என்ற தரம் எந்த ஒரு மொழியின் தனிப்பட்ட தன்மையிலும் இல்லை, அதன் பயன்பாட்டில்தான் தங்கியிருக்கின்றது.
வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மொழிகள் அறிவியலின் மொழியாக இருந்து வந்துள்ளன. தொடக்கத்தில் இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளும் பின்னர் ஆங்கிலமும் உருசிய மொழியும் அறிவியல் மொழிகளாக இருந்தன. இன்று ஆங்கிலமே தனிப் பெரும் அறிவியல் மொழியாக இருக்கின்றது.
ஆங்கிலத்தின் அறிவியல் மேலான்மை உறுதியானது. ஆனால் அது தொடர்ந்து தனிப்பெரும் அறிவியல் மொழியாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. சீனம், யப்பானிஸ், உருசியன், பிரேஞ்சு, அரபு, ஸ்பானிஸ், இந்தி போன்ற மொழியினரின் அறிவியல் பங்களிப்பு கூடும் பொழுது அவர்கள் அவர்களது மொழியிலேயே கருத்து பரிமாற முயலலாம். அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறையலாம். மேலும் பொறிமுறை மொழிபெயர்ப்பு விருத்தி பெறும் பொழுது மொழி இடைவெளிகள் குறையும்.
பேச்சு எதிர் எழுத்து                       
பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் வேலை செய்கிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
 • பேச்சு மனித இனம் முழுவதற்கும் பொதுவானதாகத் தெரிகின்ற அதேவேளை, பல பண்பாடுகளில், எழுத்துத் தொடர்பு முறை காணப்படவில்லை;
 • மக்கள், எழுதுவதிலும், பேசுவதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பேச்சு மொழி எளிதாகப் பழகி விடுகிறார்கள்;
 • பல அறிவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ளார்ந்த "மொழிப் பிரிவு" ஒன்று உள்ளதாகவும், அதற்கான அறிவு எழுத்தைவிடப் பேச்சைக் கற்பதன் மூலமாகவே கிடைக்கிறது என்றும் தெரிகிறது.
எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். corpus linguistics மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும்.

மொழி பற்றி பதிவு எழுதிய நான் நம் தமிழ் பற்றி சொல்லாமல் செல்வது முறையல்ல..ஆகவே தமிழின் அறிவியல் தன்மை பற்றி சொல்லி செல்லலாம் என்று எண்ணுகிறேன்.
அறிவியல் மொழியாக தமிழ்

தமிழில் சமய, அற, இலக்கிய படைப்புக்கள் ஆக்கப்பட்டது போன்ற அளவுக்கு அறிவியல் படைப்புக்கள் படைக்கப்படவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற படைப்புக்களில் அறிவியல், மெய்யியல், புவியியல், வரலாற்று தகவல்கள் செறிவாக கிடைத்தாலும் தமிழரின் இலக்கியங்கள் பெரும்பாலும் இன்பவியல் இலக்கியங்களாகவே அமைகின்றன. சமஸ்கிருதத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்களுக்கு இணையாக கூட தமிழில் அறிவியல் இலக்கியங்கள் இல்லை. ஏன் என்றால் தமிழ் அறிவியலாளர்களும் சமஸ்கிருதத்திலேயே தமது படைப்புக்களை பல காலங்களில் நல்கினர் என்பது இங்கு குறிப்படத்தக்க ஒரு காரணம். இன்று தமிழ் அறிவியலாளர்கள் ஆங்கிலத்தில் தமது ஆய்வுக் கட்டுரைகளை படைப்பது இதற்கு ஒப்பானது.
இன்று தமிழ் அறிவியல் படைப்புகள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பே. தமிழில் மூல ஆக்கங்கள், வழிமுறை-கோட்பாடு-மெய்யியல் பின்னணி ஆய்வுகள் மிக அரிது. இச்சூழலில் இயற்கை அறிவியல் துறையில் இயங்கும் தமிழர்களுக்கு தமிழின் பயன் மிகக் குறைவு அல்லது இல்லை.
தாய் மொழியில் அறிவியல் படைப்புக்கள் தேவையா? முடியுமா? என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்படுகின்றது. ஜப்பானியர்களின் பொருளாதார எழுச்சியும் அவர்களின் மொழிக் கொள்கையும் இது சாத்தியமே என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் மொழிகளுக்கிடையே ஒரு படிநிலை அடுக்கமைவு உண்டு. இதனால் தமிழ் எந்த அளவுக்கு அறிவியல் மொழியாக எளிச்சி பெற முடியும் என்பது கேள்விக்குறியே.
முயன்றால் முடியாதது எது?
வலைபதிவில் அறிவியல் தமிழ் அண்மைகாலங்களில் காணப்பட்டாலும் ஒப்பீட்டளவில் குறைவே….
ஆகையால் ஆபாச விடயங்களை தவிர்த்து அறிவியல் விடயங்களை அச்சிலும்,பதிவிலும் எழுதினால் நன்று,வரவேற்கதக்கது..


நன்றி் :- இணையம் மற்றும் என் தந்தை & தமிழ் நண்பர்கள் (இவற்றுடன் முக்கியமாக செம்மொழி மாநாடு 2010)

நண்பர்களே பதிவில் இடப்பட்ட சில தரவுகளை இணையதளங்களில் பெறும் போது
வசன அமைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அப்படியே பயன்படுத்தி உள்ளேன்…தப்பு என்றால் கூறி விட்டு மன்னியுங்கள்…….
பெரும்பாலான வசன அமைப்பு,பந்தி பிரிப்பு,இவற்றுடன் முழுமையான தொகுப்பு என்பன என் செயற்பாடுகளே…..

Leave a Reply