எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Tuesday, July 5, 2011

அஸ்தமனத்தில் உதயசூரியன் - நேரடி பதிவுகள்

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

சொந்தமாக காணி, சொந்தமாக ஒரு வீடு, கை நிறைய சம்பளத்துடன் வேலை, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலம் தரக்கூடிய சிறந்த கல்வி என அனைத்து வசதிகளுடன் வாழும் எம்மவர்கள் மத்தியில் இவை அனைத்தும் இன்றுவரை நிறைவேறாத கனவுகளாக மாறி இருக்கின்ற மக்களும் எம்மிடையே இருக்கின்றனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களின் கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாகவே ஒர் இடத்தில் வசித்து வந்தாலும் சொல்லிக்கொள்ள கூடிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற மக்களை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உதயசூரியன் என்ற கிராமத்தில் கண்டோம்.

பெயரில் தான் உதயசூரியன்..அவர்களின் வாழ்க்கையோ இன்னும் அஸ்தமனத்தில்தான்.

சாவகச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து கச்சாய் வீதியில் சுமார் 1500m தொலைவில் இருக்கும் சேரிக்குடியிருப்பு கிராமமே இந்த உதயசூரியன் கிராமமாகும். நாங்கள் கிராமத்தினுள் நுளைந்ததும் வேற்றுக்கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்த்தனர் அம்மக்கள். காரணம் அவர்கள் இருந்த நிலையில் நாம் அவர்களுக்கு அப்படித்தான். எம் கண்ணில் எதிர்பட்ட முதல் பெண்மணியிடம் முதலில் பேச்சுக்கொடுத்த போதுதான் தெரிந்தது அது ஒரு கைவிடப்பட்ட ஒதுக்குப்புறமான நிலப்பகுதி என்று. கடற்கரை பகுதியோடு சார்ந்த நிலம் என்பதால் அது சதுப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் அதனால் அரசினால் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவும் 2006 வரை அவ்விடம் இராணுவ வலயத்தின் கீழ் இருந்ததாகவும் அப்பெண் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பம் முதலே தாம் வசித்து வரும் பிரதேசம் இது என்றும் சிறிது காலம் வரை (இங்கிருந்து இராணுவம் வெளியேறும் வரை) அருகில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பில் வசித்து வந்ததாகவும் கூறிய அவர், இவ்விடத்தில் இராணுவம் வெளியேறியவுடன் மீண்டும் வந்து குடியேறியதாவும் தெரிவித்தார்.
அவர்களுடைய வீடுகளை பார்க்கும் போது 4 தடிகளை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு முழுமைபெறாத வானம் பார்க்கும் கூரையோடு கொண்ட சிறு கூடு போல காட்சியளித்தது. மழை வந்தால் அவர்கள் வீட்டை நாட வேண்டிய தேவையில்லை.. ஏனெனில் வீட்டிற்குள் நின்றாலும் நனைவதை அவர்களால் தவிர்க்க முடியாது. கணவனின் நாளாந்த 300 ருபாய் வருமானத்தில் (அதுவும் உறுதியாக கிடைக்காது) 4 பிள்ளைகளையும் வளர்ப்பது எங்கு?? வீடு வேய்வது எங்கு..??

அதிலும் ஒரு சிக்கல் இருப்பதை அவருடன் மேலும் உரையாடும் போதுதான் அறிந்தோம். அந்த பகுதியில் இருக்கும் எவருக்கும் அந்த காணிகள் சொந்தமாக வழங்கப்படவில்லை. அது அரசாங்க காணி என்பதால் அரசின் மனதில் எப்போது தோன்றுகின்றதோ அப்போதே அவர்களுக்கு அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். ஏற்கனவே யாழப்பாணத்தின் வேறு சில இடங்களில் அரசு தன் காணிகளை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது. இது பற்றி அந்தப் பெண் கூறிய விடயங்களை இங்கு ஒலி வடிவில் தந்துள்ளேன்.. கேட்டறிந்து கொள்ளுங்கள்.



அப்பெண்ணுடன் உரையாடிய பின் அங்கு இருக்கும் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளிகள் வசித்துவரும் இடத்தை அடைந்தோம் (அதுவும் உதயசூரியன் கிராமம் தான்). அங்கு ஒரு பாலர் பாடசாலையில் மழலைகளுக்கு கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவருடன் உரையாட ஆரம்பித்தோம். மயுரிகா என தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் குறிப்பிடுகையில் தமது சொந்த இடம் கிளாலி என்றும் அங்கு இன்னும் மக்கள் குடியேற அனுமதிக்காமையால் இங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். பாலர் பாடசாலைகளுக்கு மாணவர்களை பெற்றோர் ஒழுங்காக அனுப்பி வருவதாகவும் ஆனால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் வீதம் குறைவு என்றும் அவர் எம்முடன் உரையாடும் போது தெரிவித்தார். இது குறித்த காரணங்கள் பற்றி மற்றொரு பதிவில் பின்னர் கூறுகின்றேன்.

மேற்படி ஆசிரியை தமது வருமானம் பற்றி கூறும் கருத்துகள் இங்கே..






அப்பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் ஒரு முதியவருடன் உரையாடுமாறு அப்பகுதி மக்கள் எமக்கு கூறினர். அதற்கான காரணம் அவரிடம் இருந்து நிறைய விடயங்களை அறிய முடியும் என்பதால் ஆகும்.









அவரை அடையாளம் கண்டு அவருடன் பேச்சை ஆரம்பித்தோம். 1960 களில் இருந்து அப்பகுதியில் வசித்து வரும் அம்முதியவர் இன்று தனித்து வாழ்ந்து வருகின்றார். அவரின் மனைவி பிள்ளைகள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று விட்டனர். அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் கஸ்டங்கள் பற்றி அவர் கூறுகையில் எந்த நிறுவனமும் தமக்கு எவ்வித உதவிகளும் செய்ததில்லை என்றும், அரசிற்கு தாம் இங்கு இருப்பது கூட மறந்து விட்டது எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தமக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவோம் என பல தடவைகள் உரியவர்களால் தெரிவிக்கப்பட்டாலும் இன்று வரை எவ்வித பலனும் தமக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அப்பகுதியில் வாழும் மக்களின் ஒருமித்த குரல் என்னவென்றால் ஏனைய மக்களை போன்று நாம் வாழ்வதற்கு இப்பகுதியை தமக்கு சொந்தமாக்கி தாருங்கள் என்பதே.
அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் பல உதவிகள் வழங்க முன்வந்த போதும் சொந்தக்காணி இன்மையால் அவர்கள் எவ்வித உதவிகளையும் பெற முடியாமல் இருக்கின்றனர். நகர சபைக்கு சொந்தமான சிறு நிலப்பரப்பு அப்பகுதியில் இருந்தும் அவர்களினால் கூட அப்பகுதியில் வசிக்கும் தம் தொழிலாளர்களுக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். மழைகாலங்களில் இடம்பெயர்ந்து அருகிலுள்ள பாடசாலையில் தங்கியிருக்கும் போது மாத்திரம் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் அதாவது சமைத்த உணவு, உடுதுணிகள் முதலிய உதவிகள் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அப்பகுதிக்கான மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என அப்பகுதிக்கான மீள் எழுச்சிச்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார். அதன் படி சனசமூக நிலையம், முன்பள்ளி, பொதுக் கிணறு முதலியன இத்திட்டத்தின் கீழ் அப்பகுதிக்கு அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அப்பகுதி மக்களுக்கு நிலம் வழங்குவதற்காகவும் வீதி அமைப்பதற்காகவும் மாதிரிப்படம் அமைத்து நகர சபைக்கு வழங்கியிருப்பதாகவும் அவர்களால் எவ்வித முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிராமத்திற்கான வரைபடம்
எனவே இப்பகுதி மக்களுக்கான சொந்த நிலம் எப்போது கிடைக்கும்? அவர்களும் எப்போது இயல்பு வாழ்வுக்கு திரும்புவது? போன்ற விடை தெரியா வினாக்களுக்கு மத்தியில் மற்றுமொரு பிரச்சனை எமக்கு கிடைத்தது வேறொரு தரப்பில் இருந்து.. அப்பிரச்சனையானது அப்பகுதியில் வாழ்பவர்களின் எதிர்காலம் தொடர்பானதாகும். அப்பிரச்சனை பற்றி பார்ப்போமானால்,

மாணவர்களில் கல்வி நிலை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. பெற்றோர்களின் மோசமான நடத்தை, கவனிப்பின்மை முதலியவற்றினால் அப்பகுதி மாணவர்களின் வரவு பாடசாலைகளில் பின் தங்கி காணப்படுகின்றது. இது குறித்து அப்பகுதியில் இருக்கும் மெதடிஸ்த மிசன் பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை கோலம் ஏனைய பகுதி மக்களில் இருந்து வேறுபடுவதாக இருக்கின்றது. இளவயது திருமணம்(பெண்கள் 15-18 வயதுக்குள்ளும் ஆண்கள் 17-20 வயதுக்குள்ளும் திருமணம் செய்கின்றனர்), நெருக்கமான குடியிருப்பு கோலம் என்பதால் உண்டாகும் கலாச்சார முரண்கள், அதனால் ஏற்படும் பலதார திருமணங்கள்(இதில் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை கொண்டுள்ளனர்) முதலியன பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகள் தொழிலுக்கு அனுப்பப்டுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இன்மையும்,கல்வியறிவு போதியளவு இன்மையுமாகும் என அவர் தெரிவித்தார். அப்பகுதிக்கும் கட்டாய கல்வி செயற்பாடுகளும் ஏனைய விழிப்புணர்வு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை படிப்படியாக நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர் அதற்கு உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சாவகச்சேரி ட்றிபேக் கல்லுாரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
அப்பகுதியில் மக்களுக்கு ஒரு இலட்சிய பாதை இருப்பதில்லை. ஒரு உடனடி பணம் தரக்கூடிய சிறு தொழில், மதுபோதை, வாழ்க்கைக்கு ஒரு துணை அதுவும் சாதாரண தர கல்வியின் போதே என ஒரு குறுகிய வாழ்க்கையையே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறு வயதில் ஒழுங்காக கற்று வரும் பிள்ளையும் குறித்த வயதை எட்டியதும் தன் சமூகத்தில் இருக்கும் தன்வயதொத்தவர்களின் செயற்பாட்டை அவதானித்து கல்வியை கைவிடுகின்றது. உதாரணத்திற்கு தமது கல்லுாரியில் கற்ற ஒரு பெண் பிள்ளை சாதாரண தரத்தில் 6A சித்திகளுடன் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த போது திருமணம் செய்து கல்வியையும் கைவிட்டதாகவும் தெரிவித்தார். சிறு வயது திருமணம் அவர்களுக்கு நிலைப்பதில்லை என்ற உண்மையையும் அவர் தெரிவித்தார்.

இருந்தும் ஒரு சிலர் அப்பகுதியில் இருந்து விலகி தமது வாழ்க்கை கோலத்தை மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு காரணம் அவர்களுக்கு உண்டாகும் மாற்றம் வேண்டிய சிந்தனையே. ஆனால் இச்சிந்தனை அங்கிருக்கும் ஏனையோருக்கும் உண்டாக வேண்டும் என்றால் உரிய தரப்புகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒழுக்கக்கல்வி அப்பகுதி மக்களுக்கு அவசியம். இதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தான் ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே மக்களின் வாழ்வு என்பது அவரவர் கைகளில் என்பதோடு அடுத்தவரின் வழிகாட்டலிலும் தங்கியுள்ளது. அதே போன்று அஸ்தமிக்கும் தறுவாயில் உள்ள உதயசூரியன் மக்களிற்கும் ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும். அவர்களும் நம்மவர்கள் தான். அவர்களுக்கான நிலத்தினை அரசு வழங்குவதோடு அப்பகுதி மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் இப்போது எது சரி என நினைத்து வாழ்கின்றார்களோ அது தவறு என்பதை உணர்த்த வேண்டும். அதற்கு மத அமைப்புகள், சமூக அமைப்புகள் ஏன் சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில் இப்படியான உதயசூரியன் கிராமம் போன்ற கிராமங்கள் இலங்கையில் ஆங்காங்கே பரவி இருக்கும். அவை அனைத்தும் இனங்காணப்பட்ட வேண்டும் என்பதே எம் போன்றவர்களின் எதிர்பார்ப்பாகும்.
ட்றிபேக் கல்லுாரியில் எம்மை வரவேற்ற வார்த்தைகள்

இந்த கிராமத்திற்கான பயணத்தில் என்னோடு இணைந்து கொண்ட நண்பன் கஸ்ரோ மற்றும் நண்பிகளான துவாரகி, ஹம்ஷா ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன். அவர்களின் பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு விரைவில் தருகின்றேன்..


கஸ்ரோவின் வார்ப்புக்களில் இருந்து கதை சொல்லும் படங்கள்


நன்றி.
மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்,

Leave a Reply

Photobucket