எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, July 18, 2011

கவியரங்கில் பதிவர்கள்..!

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை புற்றளை விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்று (16.07.2011) இடம்பெற்றது. திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற்ற பரத நடன நிகழ்வுகள், தவில் கச்சேரி, வில்லுப்பாட்டு ஆகியவற்றுடன் முத்தாய்ப்பாக அமைந்தது கவியரங்கம்.

கவிஞர்கள் உருவாக்கப்படுபவர்கள். அவர்களின் வாழ்க்கை சூழல், அனுபவித்த, அனுபவிக்கும் நிகழ்வுகளின் தாக்கம், மாறுபட்டதும் புரட்சியானதுமான சிந்தனைகள் கவிஞர்களை உருவாக்கி விடுகின்றன. அவ்வாறே பதிவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்த பதிவர்கள் கவியுலகிலும் நுழைந்தனர். பதிவுகளில் கவிதைகளில் கலக்கி எம்மை கட்டிப்போட்ட கவிச்சக்கரவர்த்திகள் இணைந்து வழங்கிய கவியரங்கம் பற்றிய தகவல்களுடன் இப்பதிவு உங்களுடன்..
இரவு பத்து மணியளவில் அழகிய இரவில் மரங்களால் சூழ்ந்திருந்த ஆலய முன்றலில் கவியரங்கம் ஆரம்பித்தது கவியரங்க தலைவர் லோஷன் அவர்களின் “அனைவருக்கும் வணக்கம்” என்ற வார்த்தையோடு..

தலைநகரில் இருந்தாலும் தாய்மடியை நீங்கி தவித்திருந்தோம்.. ஆனால் தமிழ் என்ற பாலம் எப்போதும் எமை இணைப்பதால் இப்போது சந்திக்கின்றோம்.. என யாழ் மண்ணை தாய்மண்ணாக கொண்டுள்ள கவிஞர்கள் சார்பில் கவித்தமிழ் மொழியால் கவியரங்கத்தை ஆரம்பித்து வைத்த லோஷன் அவர்கள், தொடர்ந்து கவித்தலைப்பை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்த அறிமுகத்தை சற்று கேட்டு பாருங்கள்..



அழகான தமிழால் ஆண்டாண்டு காலமாக எம்மை அள்ளி அரவணைத்து அணையாத தாகத்தையும் நெஞ்சில் உரத்தையும் நேர்மை சிரத்தையையும் தந்து நிற்கும் மறைந்தும் மறையா கவி மகாகவி பாரதியே இன்று எங்கள் தலைவன்.. இன்றைய கவியரங்க தலைப்பு மறுபடியும் பாரதி.

ஓடி விளையாடும் பாப்பா முதல் உலகை ஆளும் மகாசக்தி வரை தன் பாட்டு உலகத்திலே அள்ளி அடக்கிய பாரதியின் தேடி எடுத்த நான்கு வரிகளை கவித்தலைப்பாக கொண்டு கவிதைகளை சபையேற்றினர் பதிவுலக கவிஞர்கள். அவ்வகையில் பப்புமுத்து என புகழ் பெற்ற சின்ன வைரமுத்து நித்தியானந்தன் பவானந்தன் அவர்கள் வல்லமை தாராயோ.. என்ற தலைப்பிலும்,

தகவல் தொழில்நுட்பவியலாளரும் பதிவுலகில் சுவடிகளை எழுதி வருபவருமான மாலவன் அவர்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே.. என்ற கவித்தலைப்பிலும்,

பொறியியல் தேர்ச்சியாளர் சிறுகதை புகழ் சுபாங்கன் அவர்கள் ஜெயமுண்டு பயமில்லை மனமே.. என்ற பாரதியின் வரியை துளியளவும் பயமின்றி கவித்தலைப்பாக மாற்றிக்கொண்டும்,

அற்புதமாகவும் அழகாகவும் அடக்கமாகவும் கவிதைகளை படைத்துவரும் ஆதிரை என்ற அரியகுமார் சிறீகரன் அவர்கள் தன் வருங்காலத்துக்காக கண்ணம்மாவை காற்று வெளியில் காதலித்த பாரதியின் வரிகளில் இருந்து காதல் போயின் சாதல் என்ற தலைப்பை தெரிந்து கொண்டும் தத்தம் கவிதைகளை அரங்கேற்றினர்.

முதலில் திருமலை நண்பன் பவன் கவிதை பாட ஆரம்பித்தார்.


பாரதியிடம் அனுமதி கேட்டு பின் கவிதை உரைக்க ஆரம்பித்தார் பவன்.


சுரண்டல்கள் இன்றி பதுக்கல்கள் இன்றி
தணிக்கைகள் அன்றி தாமதம் இன்றி
தயக்கங்கள் இன்றி தடைகளுமின்றி –மடலொன்று வரைய
அது மாற்றங்கள் இன்றி உனை வந்தடைய மரித்த மனத்தான் எனக்கு வல்லமை தாராயோ


என்று தொடர்ந்து சென்ற அவரின் கவிதையில் சிறுபகுதி..



கவியுரைத்து சென்ற பவன் குறித்து கவியரங்க தலைவர் லோஷன் அண்ணா அவர்கள் கூறிய வார்த்தைகள் அற்புதம்.. ரசித்தேன்…


வாலிப வயதில் வனிதையருக்கு மடல் வரையும் பருவத்தில் வாழும் வயதில் வானகம் சென்ற பாரதியிடம் வல்லமை வேண்டி பவன் கவிதை பாடிய வேளையில் அவர் வயதொத்த பாவையர் பலர் ரசித்திருந்தனர் என்பது உதிரித் தகவல்.. அவர்கள் ரசித்தது கவிதையையோ?? பவனையோ?? யாமறியோம்…!

பவனை தொடர்ந்து கணனியின் காவலன், IT அரிச்சுவடி, மாலவன் அண்ணா அவர்களின் கவிதை இடம்பெற்றது.

மனதில் தேங்கியிருந்த பலவற்றினை நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் கவிதை வடிவில் அழகாக படைத்திருந்தார் மாலவன் அண்ணா.


இயற்கை அழகுடனும், நகைச்சுவையுடனும் ஆரம்பித்த அவரின் கவிதையில் சூரியனக்கு முன் எழுந்து ஊர் உறங்கிய பின் உறங்கும் இளைஞர்களின் ஆதங்கங்கள் பரவிக்கிடந்தன. அத்துடன் இன்றைய சமூகத்தின் திருமண சந்தை குறித்தும் சாடியிருந்தார் மாலவன் அண்ணா


பலத்த கரகோஷங்களுடன் தொடர்ந்த இவரின் கவிதையில் எனக்கு பிடித்த வரி ஒன்று உள்ளது.. வடக்கின்... 
மீதியை அவரின் பதிவில் பாருங்களேன்..

தொடர்ந்து ஜெயமுண்டு பயமில்லை மனமே என்ற காலனை காலால் உதைத்த பாரதியின் வரியில் அமைந்த கவித்தலைப்பில் கவிபாடினார் சுபாங்கன் அவர்கள்.


பாரதியுடன் உரையாடினால் எப்படி இருக்கும்..? என்ற வடிவத்தில் சம்பாசணை முறையில் கவி பாடிய சுபாங்கன் அட்டகாசமான வரிகள் பலவற்றையும் இடமறிந்து பயன்படுத்தியிருந்தார். நீங்கள் தான் கவிஞர்களாக இருந்தால் கசியும் மௌனத்தில் இருந்து கண்டு பிடித்து கொள்ளுங்கள் அவற்றை..

“நீர் போல் மாறு.. பாத்திரத்தின் வடிவம் படிக்கப்பழகு..
ஆழ் அடி மௌனத்தை அப்படியே விட்டு விட்டு அடித்து ஆர்ப்பரிக்கும் ஆழி பழகு..” என்ற வரிகள் ரசிக்க வைத்தன..

சுபாங்கனை தொடர்ந்து காதலை கவிப்பொருளாக கொண்ட ஆதிரை அண்ணா அவர்களின் காதல் போயின் சாதல் என்ற கவிதை கவியரங்கில் இடம்பெற்றது.


“காதலை பாடுவது கூட ஒரு வகையில் சாதல் தானே” என்று அழகாக ஆரம்பித்த அவரின் கவிதைகள் காமம் கடந்து நின்றன.


“ஞாபகம் இருக்கிறதா..?? நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ குனிய.. இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திலேதான் ஒரு காவியம் ஆரம்பமான கதை..” என்ற வரிகள் அங்கிருந்தவர்களின் கரகோஷங்கள், விசில் சத்தங்களை கடந்து ஒலித்து நின்றது.




இவரின் கவிதையில் “உடல் பாடையில் போகும் போதும் கூட உண்மைக்காதல் சாவதில்லை..” என்ற வரி என்னை கவர்ந்து நின்றது..


தன் மனதில் காதல் நிரப்பி அதை தமிழால் தொட்டு தாளில் கவிதையாக்கி காதல் பாடி நின்ற ஆதிரை அண்ணாவிற்கு முற்கூட்டிய வாழ்த்துகள்..

பாரதியை அந்தக்கால கவிஞன் என்று யாரும் சொல்ல முடியாத காரணத்தை உணர்த்தி நின்ற இக் கவியரங்கம் இன்றைய நிலையில் நம்மவர்களின் ஆதங்கங்களுடனும் ஏக்கங்களையும் சந்தேகங்களையும் மிகச்சிறப்பாகவும் சூட்சுமமாகவும் வெளிப்படுத்தி நின்றது என்பதே தமிழன்னையின் மனதில் தோன்றி நிற்கும் பாராட்டுக் கருத்தாகும்.


இந்த அருமையான கவியரங்கத்தை நேரில் காணும் வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்த இறைவனுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள். அத்துடன் அடிக்கடி என் வரவை உறுதி செய்த பவனுக்கும் கோடி நன்றிகள்..


இளைய லோஷன் ஹர்ஸுவின் குறும்புகள் ரசிக்க வைத்தன.. தந்தைக்காக மாலவன் அண்ணாவுடன் செய்த குறும்பு சண்டை அபாரம்..


நள்ளிரவு கடந்தும் என்னுடன் சில நிமிடங்களை செலவிட்ட சுபாங்கன் அண்ணா, ஆதிரை அண்ணா, மாலவன் அண்ணா ஆகியோருக்கும் என் அன்பின் அண்ணா லோஷன் அண்ணா குடும்பத்தினருக்கும் என் நன்றிகள்..


நன்றி
மீண்டும் சந்திப்போம்..,
என்றென்றும் அன்புடன்..,

11 Responses so far

  1. எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, கவியரங்கத்தைச் சொல்லவில்லை உங்கள் பதிவைச் சொன்னேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  2. பதிவு அருமை சகோதரா...

  3. ஆகா... முன் வரிசையில் நின்று முழுக்க ரசித்துப் பார்த்தபோதே நினைத்தேன் முழுமையான தொகுப்பு வரும் என்று..
    ஆனால் இவ்வளவு அருமையாக வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
    ரசித்து இட்ட பதிவிற்கும், தொகுப்பிற்கும் நன்றிகள்..

    அந்தக் கவியரங்கும் சூழலும் மனது மறக்காது :)
    உபசரித்த புற்றளை, புலோலி நண்பர்கள், மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. விரிவான பதிவு விரைவில்..

  4. Bavan says:

    ஆஹா.. மறுநாள் பகலே வந்து தேடினேன் எங்கே பதிவைக் காணவில்லையென்று..ஹிஹி

    அருமையாகத் தொகுத்து வழங்கிருக்கிறீங்க, பலகோடி நன்றிகள்..:-))

    //இளைய லோஷன் ஹர்ஸுவின் குறும்புகள் ரசிக்க வைத்தன.. தந்தைக்காக மாலவன் அண்ணாவுடன் செய்த குறும்பு சண்டை அபாரம்..//

    ஆஹா.. மாலவன் அண்ணாக்கு அடிக்கடி நாங்கள் தான் பெயர் வைக்கிறோம் எண்டா, ஹர்சுவும் வைத்துவிட்டான்..ஹாஹா..:P

    ஹர்சு என்னை அண்ணா என்றும் மற்றவர்களை மாமா என்றும் அழைத்ததைக் குறிப்பிடாமைக்குக் கண்டனங்கள்.:P:P:P

    மீண்டும் மீண்டும் அருமையான தொகுப்புக்கு நன்றிகள் ஜனகன்..:-))

  5. அருமையான தொகுப்பு...

    நன்றி ஜனகன்

  6. /////இந்த அருமையான கவியரங்கத்தை நேரில் காணும் வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்த இறைவனுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள்./////

    ஆமா.. ஆமா... யான் மட்டும் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்கள் மனதுக்கு வாழ்த்துக்கள் ஜனகன்..

  7. நல்ல தொகுப்பு...... நேரில் பார்க்க முடியாவிட்டாலும்.... நல்லா இருந்தது..

  8. Subankan says:

    அருமை :)
    தொகுப்பிற்கு நன்றி ஜனகன்

  9. Unknown says:

    மனத்திரையில் இருந்த்ததை நேரிடையாக கண்ணுற செய்தது போன்று இருந்தது. பதிவு அருமை

  10. கனநாளாக புதுப் பதிவு ஒன்றையும் காணவில்லை?

  11. ஞாபகம் இருக்கிறதா..?? நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ குனிய.. இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திலேதான் ஒரு காவியம் ஆரம்பமான கதை

    ---

    ஹ்ம்ம் இது கொஞ்சம் 'பயங்கரவாதம்தான்'. ஆனால் எல்லாரும் கடந்து வந்த பருவமது.

Leave a Reply

Photobucket