பொழுதுபோக்கு என்ற ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் அறிவுபூர்வமான-மனசுக்கு நெருக்கமாகும் படங்கள் அபூர்வமாகவே எடுக்கப்படுகின்றன. சமீபகாலமாக தமிழ் திரையுலகின் வழக்கமான பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத் தொடங்கும் படங்களை வேறு வழியில்லாமல்தான் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது.
திரைப்படம் என்பது மற்ற எல்லா கலைப்படைப்புகளையும் போலவே உணர்வுபூர்வமான கலைப்படைப்புதான் அது சரியான அர்த்தத்துடன் எடுக்கப்படும்போது காலங்களை கடந்து நிலைத்து நிற்கின்றது. அதனால் தான் மனிதன் கற்கால குகைச் சுவர்களில் ஓவியம் வரைய ஆரம்பித்த காலத்தில் இருந்து, மக்களின் கலையாக வெளிப்பட்ட அனைத்தும் காலங்களைக் கடந்து மனிதனின் வாழ்வியலையும், அவனது படைப்பாற்றலையும், கலைத்தாகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான திரைப்படங்களின் வரிசையில் வைத்து பேச வேண்டிய திரைப்படங்களுக்குரிய தகுதியை பாலை முதல் பார்வையிலேயே பெற்றுவிடுகிறது.
மக்களின் வாழ்க்கை முறையை வெளிநாடுகளில் ஆவணப்படமாகவும், கற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாகவும் மானிடவியல் துறைகளும், அருங்காட்சியகங்களும் பயன்படுத்துகின்ற நிலையில் பாலை திரைப்படம் ஆவணப்படத் தன்மையுடன் இல்லாமல் நாயகி காயாம்பூவின் (நடிகை ஷம்மு) ஓலைச்சுவடி வழியாக அந்தக் காலத்திற்க்கு நேர்த்தியான திரைக்கதையுடன் அழைத்துச் சென்றுவிடுகின்றது. பொதுவாகவே, வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் ஆவணப் படத்தன்மைக்கு கட்டுப்பட்டு விடுகின்றன. ஆனால் அப்படியானதொரு நிலை பாலைக்கு ஏற்படவில்லை. காடும் காடு சார்ந்த நிலமாகிய முல்லை நிலத்தில் இருக்கும் இரண்டு குடிகளுக்கிடையில் நிலவும் போர்தான் கதை. ஆனால் இது வரலாற்றில் மீண்டும் மீண்டும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அரசர்களின் முகஸ்துதி கதையாக இல்லை, சாதாரண மக்களின் வாழ்வியல் கதை. அந்த வகையில் இந்தப் படம் மக்களின் உணர்வுகளை, வரலாற்றை படம்பிடித்து நிற்கின்றது.
2300 ஆண்டுக்கு முற்பட்ட நமது சமூகத்தின் வாழ்வியல் காட்சிப்பேழைகளினால் கவிதைகளாக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலிப பருவத்தின் காதலும் அது சார்ந்த விடயங்களும் அதை அறிந்த சமூகம் அவர்களை அங்கீகரித்து மேற்கொள்ளும் திருமணம் போன்ற விடயங்கள் எம் பண்பாட்டின் அசையாத அம்சங்கள். இவ்வாறான வாழ்க்கையில் முல்லைக்குடி மக்கள் எளிமையோடு அவர்கள் சார்ந்த அண்டை சமூகத்துடன் நேர்மையாகவும் இணைந்திருக்க விரும்புகின்றனர். இருந்த போதும் ஆயக்குடி சமூகம் அந்த நேர்மையை தமக்கு ஏற்றதாக்கி துரோகம் இழைக்கின்றது. முரண்பட்ட சமூகத்தில் பலமான சமூகத்திற்காக கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்த மக்களின் நிலை 2000 ஆண்டுகள் கடந்தும் இன்றும் சில இடங்களில் நிலைத்திருப்பதும் அம் மக்கள் சாதிய அடிமைத்தனத்தினுள் கட்டுப்பட்டு குற்றுயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் காலவோட்டத்திற்கேற்ப திரைப்படத்தை எம்முடன் இணைக்கின்றது.
இது போல அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனதில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. மிகைப்படுத்தப்படாத சமூகங்களுக்கிடையிலான போரியல் அபாரம். யானைகளை விரட்டிக் கட்டுப்படுத்தலும் அதனோடு சார்ந்த அக் காலத்தின் இதர போரியல் முறைகளும் எம் கண்களையும் எண்ணங்களையும் அகல விரிக்க வைக்கின்றன. போரில் வெற்றி வாகை சூடுவதற்கு தேவையான அம்சங்களை முல்லைச் சமூகத்தின் முதுவன் சுட்டிக் காட்டும் அனைத்து விடயங்களும் களங்கமற்ற உண்மைகள்.
“முல்லைக்கொடிக்கு அடிமைகள் தேவையில்லை, முல்லைக் கொடியாருக்கும் அடிமையும் இல்லை”
வீரவசனம் முழங்கும் ரோமப் பேரரசர்கள் போல உடையணிந்த கட்டபொம்மன்கள் திருமணம் செய்துகொள்ளாமல் முதுமையால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் அறநெறி கற்பிக்கும் ஔவை(யார்)களாவும் தமிழ் மூதாதையார்கள் அடையாளப்படுத்தப்பட்ட சோகம் தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் நிகழ்ந்த வண்ணமேதான் இருந்தன. வரலாறு பல ஔவைகளை சந்தித்திருக்கும், அவர்கள் எதைப் பற்றியெல்லாம் பாடினார்கள், அவர்களது கற்பனையும், தைரியமும் எப்படியானவை என்பது தொடர்பாக அத்துறை சார்ந்தவர்களுக்கே அதிகமாக தெரிந்திருப்பதுமில்லை,-போய் சேர்ந்திருப்பதுமில்லை. இவ்வாறான துரதிருஷ்டமான சூழ்நிலையில் ஔவையின் வரிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் அடி மனக்குரலாக மாற்றி அவளது மனதில் தோன்றும் விருப்பங்களை வெளிப்படுத்தி நிலைபெற்று நிற்கின்றது பாலை.
இவற்றுடன் அக்கால வாழ்வியலில், சொந்தங்களுக்குள் நீடித்த வெளிப்பாடான தன்மை, இயல்பை சிதைக்காத எளிமை முதலியன இத்திரைப்படத்தில் மிக சிறப்பாக பிரதிபிம்பமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான காட்சிகள் உயிருட்டமாக அமைவதற்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அபிநந்தன் தன் முழு திறமையையும் பயன்படுத்தி பாலையை ஒளி ஓவியமாகவும் படைத்திருக்கின்றார்
இதுவரை காலமும் மிகைப்படுத்தப்பட்ட நடிகர், நடிகைகளின் நடிப்பு, ஆடைகள், ஒப்பனை, அலங்காரம் என எப்போதும் அனாவசியங்களையே பார்த்து பழகிப் போன எம் கண்களுக்கு மிகையில்லாத வகையில் கதாபாத்திரங்களின் நடிப்பும், ஒப்பனைகளும், காட்சியமைப்புகளும் அமைக்கப்பட்டிருப்பது சற்று புதியவைதான், ஏன் உறுத்தலாகவும் கூட இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் இதனை ஒரு படைப்பாக எண்ணி அதற்குரிய எல்லைகளுக்குள் நின்று பார்த்தால் ரசனைமிக்கதாக இத்திரைப்படம் மாறி நிற்கும்.
முதுவன் என்னும் பாத்திர பெயர், இயற்கை அம்சங்களை உடலில் பொறித்துக் கொள்ளுதல், மலராலான அலங்காரங்கள், நடன அசைவுகள், ஆடை அணிகலங்களின் அணிதல் முறை என பல்வேறு இடங்களில் ஆதி தமிழனின் பண்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் நின்று அழகாக பிரதிபலித்துச் செல்கின்றது பாலை.
இத்திரைப்படத்தில் நடித்த சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறைத்தலைவர் பேரா.நடராஜன் அவர்களை தமிழக பயணத்தில் நான் சந்திக்க கிடைத்தமையும் மகிழ்ச்சி። |
ஆழ்ந்த தேடல், ஆய்வுகள், கடுமையான உழைப்பு, படைப்பின் மீதான பிடிப்பு போன்றவை இல்லையேல் இது போன்றதொரு திரைப்படம் தமிழ் சினிமாவில் சாத்தியமில்லை. செந்தமிழன், மற்றும் அவரது குழுவினரின் அயராத உழைப்பினை நாம் இத்திரைப்படத்தைப் பார்ப்பதனால் மாத்திரமே அங்கீகரிக்க முடியும். கலைஞனுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டியது நல்ல ரசிகர்களின் கடமை. படத்தின் மூன்று பாடல்களும் அருமை. இசையமைப்பாளர் வேத்பிரகாஷ் நவீன இசை ஆர்ப்பரிப்புகளை உதறிதள்ளிவிட்டு, தமிழனுக்குரிய இனிமையான இசைகளை கொண்டு இதயங்களை வருடிச் செல்கின்றார்.பெரும் பிரமாண்டமான தயாரிப்புகளை மேற்கொண்டும், மசாலா தனமான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முகமாகவும் வரலாற்றை திரிவுக்குட்படுத்தி தேவையற்ற இடைச்செருகல்களை மேற்கொண்டு தமிழர் பண்பாடு என்ற பெயரில் என்னென்னமோ வெறுப்பு தரும் விடயங்களை தமிழ் சினிமா சந்தையிலும், உலக சினிமா சந்தையிலும் பணம் கொட்டிக்கிடக்கும் திரைப்பட நிறுவனங்களும் விநியோகஸ்த நிறுவனங்களும் வியாபாரம் செய்து வருகின்ற இன்றைய பின்னணியில் இந்த பாலை திரைப்படம் ஒரு ஆத்மார்தமான படைப்பு.
குறிப்பு- பாலை திரைப்படத்தை இலங்கையில் எந்த திரையரங்குகளும் காட்சிப்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்። நான் கூட இணையத்தின் வாயிலாகதான் பார்த்து ரசித்தேன் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்። இணைய சுட்டியை தந்துதவிய நண்பனுக்கு என் நன்றிகள்።
மீண்டும் சந்திப்போம்..,
என்றென்றும் அன்புடன்..,
அட! அப்ப பார்க்கத்தான் வேண்டும் :-))
விமர்சனத்து நன்றி ;-))