எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, March 3, 2012

இந்துக்களின் போர் - Day 02

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

முதல் நாள் ஆட்டம் தொடர்பான நேற்றைய பதிவு

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ். இந்துக்கல்லுாரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார்.


தொடர்ந்து நேற்றைய நாளின் ஆட்ட நேர முடிவில் 51 ஓட்டங்களை பெற்றிருந்த ஜஸ்மினன் இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 144 பந்து வீச்சுக்களில் 14 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 127 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இது இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டிகளில் பெறப்பட்ட 2வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவர் கிருசோபன் 8 நான்கு ஓட்டங்கள் 1ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 73 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களை பெற்றார்.
இவர்களின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் யாழ். இந்துக்கல்லுாரி அணியினர் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 316 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் தமது முதலாவது இன்னிங்சை நிறுத்திக்கொண்டனர்.

இவர்கள் தவிர

கல்கோகன் ............................................06 Injured
மதுசன் .....................................................64
சஜீகன் ......................................................00
ருக்ஸ்மன் ..............................................00
சிந்துஜன் .................................................09
சஜீவன் .....................................................00
வாமனன் .................................................14
நிலாஜனன் ஆட்டமிழக்காமல் .....07
பிருந்தாவன் ஆட்டமிழக்காமல்.. 05

உதிரி ஓட்டங்கள் 19
மொத்த ஓட்டங்கள் 316-8 Declared

பந்து வீச்சில் கொக்குவில் இந்துக்கல்லுாரி அணி சார்பில்
பவிதரன் 17 ஓவர்கள் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும்
ராகுலன் 15 ஓவர்கள் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும்
சிலோஜன் 8 ஓவர்கள் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
பங்குயன் 7 ஓவர்கள் 42 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
பார்த்தீபன் 8 ஓவர்கள் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்


யாழ் இந்துக்கல்லுாரி அணியை விட 41 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் மதிய போசன இடைவேளையை தொடர்ந்து தமது 2வது இன்னிங்ஸை ஆரம்பித்தனர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இழந்த கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் ராகுலன் மற்றும் சிலோஜனின் துடுப்பாட்டத்தின் உதவியுடன் போட்டி நிறைவடையும் போது 8 விக்கட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
இதில் ராகுலன் 87 பந்து வீச்சுகளில் 8 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 82 ஓட்டங்களையும்
சிலோஜன் 71 பந்துவீச்சுகளில் 2 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 44 ஓட்டங்களையும்
ஆதித்தன் 30 பந்துவீச்சுகளில் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 47 ஓட்டங்களையும்
அணித்தலைவர் பங்குஜன் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 22 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்திருந்தனர்.

இவர்கள் தவிர

கீர்த்திகன் ..........................................03 ஓட்டங்கள்
சத்தியன் ............................................07 ஓட்டங்கள்
பங்குயன் ...........................................22 ஓட்டங்கள்
சிலோஜன் .........................................44 ஓட்டங்கள்
ராகுலன் .............................................82 ஓட்டங்கள்
ஆதித்தன் ...........................................47 ஓட்டங்கள்
ஜனுதாஸ் ..........................................08 ஓட்டங்கள்
திவாகர் ...............................................25 ஓட்டங்கள்
நிசாந்தன் ஆட்டமிழக்காமல் ....12 ஓட்டங்கள்
பார்த்தீபன் ஆட்டமிழக்காமல் ..00 ஓட்டங்கள்

உதிரி 16 ஓட்டங்கள்
மொத்த ஓட்டங்கள் 265/8

பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லுாரி சார்பில்
சிந்துஜன் 19 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள்
ருக்ஸ்மன் 13 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
நிலாஜனன் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்

இதனடிப்படையில் 5வது வருட இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.


Full Score Card
Date :- 02.03.2012 - 03.03.2012
Ground :- Nagalingam Ground, Kokuvil Hindu College
Toss :- Jaffna hindu college won the toss and decided to field first.

1st Innings
KHC :- 275/all out ( Pangujan 98, Januthas 61) (Vaamanan 49/3, Ruksman 65/3)
JHC   :- 316/8 Declared ( Jasminan 127, Kirushoban 65) (Bavitharan 72/3, Ragulan 60/2)

2nd Innings
KHC :- 265/8 ( Ragulan 82, Aathithan 47) (Sinthujan 64/4, Ruksman 74/3)

Match Drawn 

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக பங்குஜனும் (KHC)


சிறந்த பந்து வீச்சாளராக சிந்துயன் (JHC)
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன்

5வது இந்துக்களின் போர் போட்டியின் ஆட்டநாயகனாக யாழ் இந்துக்கல்லுாரியின் வீரர் ஜஸ்மினன் அறிவிக்கப்பட்டார்.



Continue reading →
Friday, March 2, 2012

இந்துக்களின் போர் - Day 01

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

Battle Of The Hindus – 2012

“இந்துக்களின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக்கல்லுாரி, கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிகளுக்கிடையிலான வருடாந்த துடுப்பாட்ட போட்டி இவ்வருடம் கொக்குவில் இந்துக்கல்லுாரி நாகலிங்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.




நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணித்தலைவர் கிருசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் களமிறங்கினர்
இரு அணி வீரர்களும்
                                    

கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 275 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர். கொக்குவில் இந்துக்கல்லுாரி சார்பில் அணித்தலைவர் பங்குயன் 126 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவர் கடந்த வருட போட்டியில் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்குயனுடன் இணைந்து ஜனுதாஸ் 5 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களையும் ராகுலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.


கீர்த்திகன்                                  05 ஓட்டங்கள்
சத்தியன் ...................................05   ஓட்டங்கள்
பங்கயன் ...................................98  ஓட்டங்கள்
திவாகர் .....................................09      ஓட்டங்கள் 
ராகுலன் ...................................37    ஓட்டங்கள்
ஆதித்தன் .................................05  ஓட்டங்கள்
ஜனுதாஸ் ................................61  ஓட்டங்கள்
சிலோஜன் ...............................06  ஓட்டங்கள்
நிசாந்தன் ..................................02    ஓட்டங்கள்
பார்த்தீபன் ................................06  ஓட்டங்கள்
பவிதரன் ஆட்டமிழக்கால் 03 ஓட்டங்கள்

உதிரி ஓட்டங்கள் – 34


மொத்த ஓட்டங்கள் 275-10 (68.4 ஓவர்கள்)

பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லுாரி சார்பில்
வாமனன் 16 ஓவர்கள் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
ருக்ஸ்மன் 12 ஓவர்கள் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
நிலாஜனன் 05 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகள்
கிருசோபன் 06 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
ஜஸ்மினன் 8.4 ஓவர்கள் 18 ஓட்டங்களுக்கு 1 விக்கட்



தேநீர் இடைவேளையை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யாழ் இந்துக்கல்லுாரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவில் 28 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் மதுசன் 64 ஓட்டங்ளையும்
ஜஸ்மினன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களைத் தவிர,

கல்கோகன்................................... 06 ஓட்டங்கள் (ஓய்வு)
சஜீகன் .............................................00 ஓட்டங்கள்
ருக்ஸ்மன் .....................................00 ஓட்டங்கள்
சிந்துஜன் ஆட்டமிழக்காமல் 09 ஓட்டங்கள்

பந்து வீச்சில் கொக்குவில் இந்துக்கல்லுாரி சார்பில் ராகுலன் 02 விக்கட்டுகளையும்
பங்குயன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.


    போட்டி நாளை காலை 09 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து இடம்பெறும்.
Continue reading →
Saturday, January 14, 2012

தமிழ் எழுத்தியல் துறையிலும் ஊடக துறையிலும் பெண்களின் பங்கு.

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

வணக்கம் நண்பர்களே,
எனது 50வது பதிவினுாடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் பதிவுலக ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களனைவருக்கும் என் நன்றிகள்.
என்னை பதிவெழுத துாண்டியவை லோஷன் அண்ணாவின் பதிவுகள். 
எனக்கு களம் அமைத்து தந்தவர் அன்புக்குரிய மதிசுதா அண்ணா
இவர்கள் இருவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

............................................................................................................................................................................................................................................................................................................

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இந்தியா செல்ல முடிந்தது. அங்கு இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட கருத்தமர்வுகளில் இருந்து பல விடயங்களை கற்க முடிந்தது. அவற்றில் ஒரு கருத்தமர்வில் பகிரப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பதிவு தயாராகின்றது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களே பெரும்பாலும் எழுத்து துறையிலும் ஊடக துறையிலும் அதிகம் சாதித்து வருகின்றனர். அதற்கு அவர்களுக்கு என்று சமூகத்தில் இருக்கின்ற வாய்ப்புகளும் காரணமாக அமைகின்றன. ஆண் ஒருவன் சமூகத்தினை பல்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு தகுதியுடையவன் என பலரும் நம்புவதால் ஆண் படைப்பாளிகளை இன்று நாம் அதிகமாக பார்க்கின்றோம். ஆணுக்கு நிகரானவள் பெண் என்பது நிஜம். அதனால் எந்த துறையாக இருந்தாலும் இன்று பெண்களும் அத்துறைகளில் ஆண்களுக்கு இணையாக கோலுச்சி வருகின்றனர். அந்த வகையில் இன்று இதழியல் துறையில் சாதிக்கும் பெண்களும் பலர் உள்ளனர். அத்துடன் ஆண் இலக்கிய வாதிகள் பெண்களின் பெயர்களை தம் படைப்புகளில் புனை பெயராக கொண்டு எழுதி வருகின்றனர் என்பதன் ஊடாக பெண்கள் இலக்கிய படைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனர் என்பதை உணர முடிகின்றதல்லவா?

பேராசிரியை தாயம்மாள் அறவாணன்

பெண்கள் பாரதியின் புரட்சிக்கு பின்னர்தான் சமூகத்தில் சாதிக்க வந்தனர் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும் இலக்கிய துறையிலும் இதழியல் துறையிலும் பெண்கள் தமது படைப்பாற்றலை சங்க காலத்திலேயே ஆரம்பித்து விட்டனர். சென்னை பல்கலைகழகத்தில் இடம்பெற்ற புத்தாக்க பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது. அவர் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்படுகின்றது.

நுால்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருபவரும் கொங்கு பத்திரிகையின் ஸ்தாபகராக விளங்குபவருமான பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பேராசிரியரும் தொடர்பியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் துணைவியாராவார். கணவரின் இலக்கிய பயணத்திலும் கல்வி பயணத்திலும் தன்னையும் இணைத்துக்கொண்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் 23 நுால்களை இதுவரை வெளியிட்டு உள்ளார். இவற்றில் சிலப்பதிகாரத்தில் வாய்மொழி கதை, ஔவையார் நுால் என்பன பெருமை பெற்றவையாகும். இவருடைய இலக்கிய படைப்புகளுக்காக சக்தி விருது, ஔவை விருது முதலிய விருதுகள் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்க காலம் முதல் இன்று வரை உள்ள பெண் கவிஞர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர் தனது ஆய்வினை அடிப்படையாக கொண்டு சென்னை பல்கலைகழகத்தில் தனது கருத்துரையை நிகழ்த்தினார். சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் அமைந்த பாடல்களில் பல பாடல்களை அக்காலத்தில் இருந்த பெண் கவிஞர்கள் பாடியுள்ளனர். அக்காலத்தில் இருந்த 473 புலவர்களுள் சுமார் 45 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கற்றுத் தேர்ந்த புலவர்களும் இருந்தனர். சாதாரணமான பெண்களும் இருந்தனர். குறத்தி இனத்தை சேர்ந்தவர்களும், பானை செய்யும் பெண்களும், சேலை துவைக்கும் பெண்களும் கூட கவிதாயினிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக குறத்தி இனத்தை சேர்ந்த இளையோதி, குளையோதி ஆகிய பெண் புலவர்களை குறிப்பிடலாம்.

சங்க காலத்தில் கவிபுனைய ஆரம்பித்த பெண்கள் தொடர்ச்சியாக கவிபுனைவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். அந்த வகையில் ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், மங்கையற்கரசியார் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் புலவர்கள் தோன்றிய வண்ணமே இருந்தனர். இவர்கள் ஆண் புலவர்களுக்கு சவாலாகவும் அவர்களின் கவித்துவத்திற்கு இணையாகவும் பாடல்களை பாடி வந்துள்ளனர். இவர்களில் புலமைப்போரில் ஈடுபட்ட ஔவையாரை இவ்விடத்தில் நினைவுகூறுவது சாலச்சிறந்ததாகும்.


பிற்பட்ட காலத்திலே புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கவிஞர்களாக இருந்த ஜானகி அம்மையார், லட்சுமி அம்மையார் ஆகிய இருவரும் பெண் கவிஞர்களுள் முதன்மை பெறுகின்றனர். இவர்களில் லட்சுமி அம்மாள் வியாசட்ட முறையில் அதாவது ஒரு வரியில் அமைந்த விடயத்திற்கு நீண்ட தெளிவான விளக்கம் தருவது வியாசட்ட முறையாகும். அந்த வகையில் வியாசட்ட முறையில் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு தெளிவான பொருளுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய ஒரே ஒரு பெண் லட்சுமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து 19ம் நுாற்றாண்டின் பெண் கவிஞர்கள் பற்றி பார்த்தால் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். 1909ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆவண காப்பகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற பெண்கள் பற்றிய தகவல்களை அறிய முடிந்ததாக குறிப்பிட்ட பேராசிரியை தாயம்மாள் அறவாணன் அவர்கள் அன்றைய காலத்தில் பெண்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததால் தான் இன்றைய பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டார். 19ம் நுாற்றாண்டு காலப்பகுதியில் சுமார் 107 பெண் கவிஞர்கள் இருந்துள்ளனர்.

பெண் கவிஞர்களின் தோற்றத்தில் அவர்களின் இளவயது திருமணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. கணவன் இறந்த பின் அப் பெண்ணின் பெற்றோர் அவளுக்கு கல்வி கற்பித்தலை ஊக்குவித்ததால் அப்பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ந்தனர். பின் சமூகத்தின் மீதான அவர்களின் பார்வை அகல விரியவே அவர்கள் கவிஞர்களாக மாறினர்.

விழுப்புரம் அகலாம்பிகை என்ற பெண் சிறுவயதிலேயே விதவையானவர். பின் இரட்டணை என்ற ஊரில் தங்கியிருந்து ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் யாப்பு நயம்பட பல்வேறு கவிதைகளை வெளியிட்டார். இவரின் சிறப்புக்குரிய படைப்பாக மகாத்மா காந்தி தொடர்பாக இவர் எழுதிய ஏழு காண்டங்களை கொண்ட நுால் விளங்குகின்றது.
பத்மாவதி, கிருஸ்ணவேணி ஆகிய சகோதரிகள் கும்மியடிக்கும் பெண்களாக விளங்கினர். இவர்களிடம் இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற இசை அறிவின் காரணமாக இவர்களால் படைக்கப்பட்ட கவிதைகள் இசயோடு இணைந்து காணப்படுகின்றன. அத்துடன் சாதாரண பெண்ணாகிய சம்பூர்ணம் என்பவர் சமையல் செய்து கொண்டே தமயந்தி நாடகம் தொடர்பாக கவிதைகளை எழுதி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வை.மு.கோதைநாயகி

இவ்வாறாக பெண்கள் கவித்துறையில் சாதித்தது மட்டுமன்றி பல பெண்கள் இன்றும் ஊடக துறையில் சாதித்த வண்ணம் உள்ளனர். தமிழ் மொழியே தெரியாத வை.மு.கோதைநாயகி என்ற பெண் கணவரின் துணையோடு நின்று 15 நாவல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி 32 வருடங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த ஜெகன்மோகினி பத்திரிகையின் ஸ்தாபகராகவும் இப்பெண் விளங்கியுள்ளார். அத்துடன் பல பெண்கள் நாடு கடந்து சென்றும் பத்திரிகை துறையில் செயற்பட்டிருக்கின்றனர். இன்றைய தமிழ் பெண் பத்திரிகையாளர்களின் கதாநாயகிகளில் முக்கியமானவர் இலங்கையின் மலையத்தில் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்படும் மக்களின் உரிமைகளுக்காக கணவருடன் இணைந்து போரிட்ட மீனாட்சியம்மாள் நடேசையர் அவர்கள்.
மீனாட்சியம்மாள் நடேசையர்

இந்திய வம்சாவளி மக்களுக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்திரிகைகள் ஊடாக குரலெழுப்பி வந்த நடேசையர் அவர்களை ஆங்கில அரசு தடை செய்த போது அங்கிருந்து இலங்கை வந்து மலையக வாழ் இந்திய மக்களுடன் இணைந்து வாழ்ந்து அவர்களுக்கான உரிமைகளை தேடியறிந்து அதனை பெற்றுத்தருவதற்காக பத்திரிகைகளை உருவாக்கினார். கணவருக்கு உதவியாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து இங்கு பெண்களுக்கான உரிமை போரிலும், மக்களின் விடுதலை போரிலும் தன்னையும் இணைத்து கவிதைகளை எழுதியதுடன் வீடு வீடாக சென்று பாரதியார் பாடல்களை பாடி புரட்சி தீயினை வளர்த்தார். இவர் மாறுவேடம் பூண்டு நடாத்திய பத்திரிகைகள் தேச நேசன், தேச பக்தன், உரிமைப்போர், தொழிலாளி, சுதந்திர போர் என்பனவாகும்.

நன்றி இணையம் www.fashioner.com

இவர்களின் வழித்தோன்றல்களாக இன்றைய பெண் ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர். சவால் மிக்க இன்றைய ஊடக துறையில் இவர்களின் பணி மெச்சத்தக்கது. இன்றைய நாளில் பெண் ஊடகவியலாளர்கள் சாதிப்பதை விட சவால்களையே அதிகம் சந்திக்கின்றனர். பாலியல் ரீதியான அழுத்தங்கள், ஆணாதிக்கம் என்பன இவர்களை கட்டுப்படுத்தும் காரணிகளில் முதன்மை பெறுகின்றன. இருப்பினும் இவை அனைத்தையும் தமக்கான பாதுகாப்பு வேலிகளாக கொண்டு இத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை நாம் பாராட்டியேயாக வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமன்றி மேன்மையானவர்கள் அதனை நாம் உணர வேண்டும். மோசமான படைப்புகள் பல பெண்களின் புனை பெயர்களின் வெளிவரும் இன்றைய சவால் மிகுந்த காலத்தில் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு பெண்கள் இலக்கிய படைப்பாற்றலிலும், ஊடகத்துறையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பாகவும் அமைகின்றது.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Tuesday, January 3, 2012

கயத்தாறு நோக்கிய பயணம்..- கட்டபொம்மனின் இறுதி நாட்கள் - 1

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்


வணக்கம் நண்பர்களே..
தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.

மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ஆரம்பிக்கின்றேன். இப்பதிவு ஒரு தொடர்பதிவு. இதன் தொடர்ச்சியான பாகங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொண்டு பதிவை ஆரம்பிக்கின்றேன்.

வியாபார நோக்கத்திற்காக ஆரம்பத்தில் இந்திய உபகண்டத்தினுள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்நாளில் மண்ணாதிக்க வெறிக்கு உட்பட்டனர் காரணம் மண்ணில் இருந்த வளமும், வீரமும் அவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுதான். அந்த வகையில் இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தென்னாட்டில் உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து முகஸ்துதி செய்து திறை செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டனர். அவர்களின் மிரட்டலுக்கும் படை பலத்திற்கும் பயந்து பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர். பலர் மண்டியிட்டனர்.
சிலர்தான் “தாம் உயிர் நீக்க நேரினும் வரிசெலுத்த முடியாது” என்று கூறினர். ஆங்கிலேயரையும் எதிர்த்து நின்றனர். அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவரின் அனல் தெறிக்கும் கோபத்தினை கண்ட ஆங்கிலேயர்கள் தமது நில ஆதிக்கத்திற்கு இவர் தடையாக அமைந்து விடுவார் என்பதை உணர்ந்தனர். போரின் மூலம் அவரை அடக்க எண்ணி யுத்தத்திற்கு தயாராகினர்.

மேஜர் ஜோன் பானர்மன் என்ற ஆங்கில தளபதி தனது பிரமாண்டமான கம்பனிப் படையுடன் 1799 செப்டம்பர் 04ம் திகதி பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு சிவலப்பேரி மார்க்கமாக பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தார்.
இந்நேரத்தில் ஏக காலத்தில் கப்டன் ஓ ரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins), டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux), ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற இதர ஆங்கிலேய அதிகாரிகளும் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி தங்களது படைகளுடன் போருக்கான வேகத்துடன் நின்றனர்.
ஜோன் பானர்மனின் படை 05.09.1799 காலையில் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும், கயத்தாற்றிலிருந்தும் வந்த இராணுவ வீரர்களும் ஆங்கிலேய படையுடன் இணைந்து கொண்டனர்.

இந்நேரத்தில் வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் மறத்தமிழர் படையும் தயாரானது. கட்டபொம்மனின் படையில் சிவத்தையா நாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பி வீரபத்திரபிள்ளை, சம்பரதி பொன்னப்ப பிள்ளை, ஃபாதர் வெள்ளை எனப்படும் வீரன் வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாத ஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம் இவர்களுடன் பலர் உள்ளடங்கியிருந்தனர் .
போருக்கான ஆயத்தங்கள் இருபக்கமும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் நோட்டமிடும் நோக்கில் அதாவது கட்டபொம்மனின் யுத்த ஏற்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு வழிமுறையை பின்பற்றினர். அதுதான் துாது அனுப்பியது.
மேஜர் ஜோன் பானர்மன் தம்முடைய படையோடு இருந்த ராமலிங்க முதலியாரை ஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமி ஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள் துாதுவராக அனுப்பி வைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச் சந்தித்துகட்டபொம்மன் உடனடியாக பானர்மன்னைச் சந்திக்கவும்” என்ற செய்தியை தெரிவித்தனர்.
அதற்கு கட்டபொம்மன் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.
எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்தரவு வந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப் பார்க்க முடியாது” என்பதாகும்.


"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
 அரசின் செயலாளரான அப்போது இருந்த ஜோசையா வெப்பிற்கு பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜோன் பானர்மென் 05.09.1799 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகளே அவை..

பெயரளவில் நடந்த சமரச முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலேயருக்கு அடங்கி ஒடுங்கிப் போகவும் திறை செலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை என்பது ஆங்கிலேயர்களுக்கு மேலும் உறுதிபடத் தெளிவானது.

அடுத்த கட்டமாக போர்தான் தீர்வு என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். காலத்தால் அழியாத, வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர் ஆரம்பமானது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தெற்குக் கோட்டை வாசலும், வடக்குக் கோட்டை வாசலும் ஆங்கிலேய படையினரால் முதலில் தாக்கப்பட்டது. இந்த முதற்கட்ட போரில் ஆங்கிலேய படையின்  நான்கு ஐரோப்பிய அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர். இருப்பினும் போர் தீவிமாக நடைபெற்றது. ஆங்கிலேய படையின் பீரங்கிகள் செயற்பட தொடங்கின.., அவை கோட்டைச் சுவர்களைத் துளைத்து உடைத்தெறியத் தலைப்பட்டன.
இதனால் கோட்டையை இழந்து விடுவோமோ என்ற நிலையில் தீவிர ஆலோசனையை உடனடியாக மேற்கொண்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இறுதியில் திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்று விட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை நோக்கி விரைந்து சென்றார்.

மறுநாள் முழுவதும் கோட்டையில் இருந்த படைகளுடன் இடம்பெற்ற கடுமையான போரினை தொடர்ந்து 09.09.1799 காலை 09.30 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினை மேஜர் பானர்மென் கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும் திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட அவர் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பல பாளையக்காரர்களுக்கும் கடிதங்களின் ஊடாக கட்டளையிட்டார்.
அந்த கடிதம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தன்மையை மேலும் பறை சாற்றி நிற்கிறது எனலாம். 
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும் கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும் அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப் பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம் எழுதியதாக அவரே அரசுக்கு 11.09.1799 இல் நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegar, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.

கடிதங்களின் மூலமாக கட்டளைகளை பிறப்பித்த பின் ஆங்கிலேய படைகள் கட்டபொம்மனை தேடுவதற்கு தயாராகின. லெப்டினென் டக்ளஸ் தலைமையில் இரண்டு குதிரைப் படைகளையும், கப்டன் ஓ ரெய்லி தலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும் இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு முக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர் பானர்மென் செல்வதும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம் சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனது படைவீரர்களுடன் கட்டபொம்மனைப் பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்கு உதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும் படியும் ஆங்கிலேயருக்கு தகவல் தந்தார். உற்சாகமடைந்த பானர்மென், குறிப்பிட்ட அளவு படைவீரர்களுடன் கப்டன் ஓ ரெய்லியையும் லெப்டினென் டக்ளஸையும் எட்டயபுரம் படையினருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்ற வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டயபுரத்தாரின் படைகள் கோலார்பட்டி கோட்டைப் பகுதியில் எதிர்கொண்டன. இச்சம்பவம் 10.09.1799 அன்று நடைபெற்றது. இரண்டு தமிழர் படைகளுக்குமிடையில் போர் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் பெரிய சேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர் வீரப் போரிட்டனர். போரின் முடிவில் ஆறு வீரர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டிய கட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரது தம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர் வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம் சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையா நாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய 34 பேர்களை ஆங்கிலப் படையினர் அப்போரின் போது கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்று எட்டயபுரம் செய்த அந்த துரோகத்திற்கும், பாவத்திற்கு பரிகாரமாகவே ஆங்கிலேயரை எதிர்க்க பின்நாளில் பாரதியார் அதே மண்ணில் தோன்றினார் என்று பலர் இன்று கருதுகின்றனர்..!)

சரி நண்பர்களே..
இந்த வரலாற்று பயணத்தின் அடுத்த பாகத்தினை எதிர்வரும் வாரத்தில் தருகின்றேன்.
அதற்கிடையில் மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன்.

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,



Continue reading →
Sunday, January 1, 2012

2012ல் எனக்கு முதலிடம்

4 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..,

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த 2012 புதிய ஆண்டின் முதல் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இன்றைய 01.01.2012 ம் திகதி நிறைவடைய சில மணித்தியாலங்களே உள்ளன. இந் நேரத்தில் இவ்வாண்டின் முதல் நாளான இன்று முதன் முதலாக கிடைத்த என் சார்ந்த விடயங்களை இப்பதிவு கொண்டு வருகின்றது.
நான் பெற்ற விடயங்கள், கொடுத்த விடயங்கள் என பல விடயங்களை பதிவை தொடர்ந்து படிப்பதன் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


முதல் வாழ்த்து - தொலைபேசியில் சரியாக நள்ளிரவு 12.00 க்கு கிடைத்தது.

முதலில் சந்தித்த நபர் - என் அப்பா தொடர்ந்து அம்மா

முதல் வணக்கம் - சூரிய பகவானுக்கு

முதல் பானம் - TEA

முதல் உணவு - பிட்டு

முதல் பணி - நாட்காட்டி மாற்றியது

முதலில் சந்தித்த நண்பன் - தன்சயன்

முதல் திட்டமிடல்
                                    எதையும் அந்தந்த நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும். தருணங்கள் எமக்காக காத்திருக்காது. கிடைக்கும் தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதல் நிகழ்ச்சி - 2011ன் கனவு கன்னி யார்?

முதலில் பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் - சன் டிவியின் அடம்ஸ்

முதலில் கேட்ட வானொலி நிகழ்ச்சி -
                                                             வெற்றியில் மொக்கை சபா.
இணையத்தில் வானொலியை கேட்க ஆரம்பிக்கையில் “2012 உங்கள் வெற்றி என்றும் உங்களுடன்.. இனிய புதுவருட வாழ்த்துகள்.” என்ற குரல் பதிவு லோஷன் அண்ணாவின் குரலில் கேட்க கிடைத்தது.

முதல் செய்தி - வடக்குக்கான புகையிரத பாதை புனரமைப்பு ஜனவரி 18ல் ஆரம்பம்

முதல் முகப்புத்தக பதிவு -

முதல் கருத்து பகிர்வு -

முதல் படம் - கந்தசாமி, நானாக விரும்பி பார்த்தது Ra 1

முதல் திரைத்துறை செய்தி - நண்பன் திரைப்படம் ஜனவரி 12ல் ரிலீஸ்

முதல் கவிதை -
                               நா.முத்துக்குமார் நண்பன் இசை வெளியீட்டு நிகழ்வில் வைத்து தெரிவித்த நட்பு தொடர்பான கவிதை.
இறைவன் இரண்டாவது தாயை படைக்க விரும்பி
 மண்ணிற்கு அனுப்பிய இன்ப துன்பத்தில் இணைந்திருக்கும் 
உறவு நட்பு...

முதல் அதிர்ச்சி - ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் புவிநடுக்கம்

எதிர்பாராத முதல் வாழ்த்து - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்த்து

முதல் பாடல் (VIDEO) - ஆஹா ஆனந்தம்..- அற்புதம் திரைப்பட பாடல்



முதல் பாடல் (AUDIO) - ALL IS WELL.. - நண்பன்

எதிர்பார்த்த வாழ்த்து -
                                         லண்டனில் இருக்கும் என் நண்பன் ஒருவனின் வாழ்த்து. ஆனால் அது கிடைக்காமல் போனது வருத்தம்

சரி இப்படியாக இந்த வருடத்தின் முதல் நாளில் என்னோடு வந்து சேர்ந்த முதல் விடயங்களை பகிர்ந்து கொண்டேன். இது போல பல விடயங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும். அவை மகிழ்ச்சிகள் பலவற்றை தந்திருக்கும். அந்த மகிழ்ச்சிகளுடன் 2012ல் தொடர்ந்து பயணிப்போம்.
நாளைய பொழுதும் நல்லதாகவே அமையும்..

சரி நண்பர்களே.., இவ்வருடத்தின் என் முதல் துாக்கத்திற்கு செல்லவுள்ளேன்.




நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Saturday, December 31, 2011

உண்மை சொல்கின்றேன்..- 2011ல் என் காதல்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..

ஆரம்பமும் முடிவும் எப்போதும் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. அது தானாகவே நடந்து முடிகின்றன.
இன்று 2011 ஆம் இறுதிநாள்.. பல இன்பங்கள், சோகங்கள், மாற்றங்கள், வரவுகள், செலவுகள் என கடந்து வந்த வருடங்கள் தந்த அனைத்தையும் எமக்கு வழங்கியிருக்கின்றது இந்த 2011.
இதில் அரசியல் மாற்றங்கள், எதிர்பாதார நிகழ்வுகள், அதிர்ச்சி தரும் அம்சங்கள் என பல விடயங்களை மீள்பார்வைக்கு கொண்டு வரலாம்.
ஆனால் இந்த விடங்களை நாங்கள் மீண்டும் நினைக்கும் போது ஏதோ ஒரு வெறுப்பும், வேதனைகளும் வருவது தவிர்க்க முடியாதனவாகின்றன. வருடத்தின் இறுதி நாள் - புதிய வருடத்திற்கு இன்னும் ஒரு நாள் என்று இன்றைய டிசம்பர் 31ம் திகதி இருக்கின்ற நிலையில் 2012ஐ வரவேற்க தயாராகும் நாம் மகிழ்ச்சியுடன் 2011க்கு விடை கொடுத்தால் நல்லது தானே. ஆகையால் இப்பதிவு எப்போதும் எம் இன்பத்திலும் துன்பத்திலும் தோழனோடு சேர்ந்து துணை நிற்கும் பாடல்கள், திரைப்படங்கள் பற்றியதாக பேசி செல்லவிருக்கின்றது.

ஆம், 2011ல் வெளிவந்து என் மனதை கவர்ந்த 10 பாடல்களும், 10 திரைப்படங்களுமே இப்பதிவை அலங்கரிக்கவுள்ளன.
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன். நான் ஒரு அனுபவம் மிக்க விமர்சகன் அல்ல. ஆகையால் என் ரசனைகளை இங்கு கொட்டுகின்றேன். அதில் இந்த இலக்கங்கள் ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியால் போகின்றது.
இருப்பினும் இந்த இலக்கங்கள் தரவரிசைக்காக அல்ல என்பதை குறிப்பிட்டு சொல்லுகின்றேன்.

முதலில் பத்து பாடல்கள்.

10- உன்னாலே உன்னாலே...- ஒஸ்தி


இல்லை இல்லை இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும்
கடவுளை போலவே

தேவதையை கனவில் ஏங்கினேன் அப்போ

உன் விழியில் தெரியுதே ஏக்கமும் இப்போ
பூமழையே வானமே துாறுமே அப்போ.
உன் நினைவு துாறலா சேருதே இப்போ.
போன்ற யுகபாரதியின் வரிகளும் பாடலின் இசையும் கவர்ந்து விட அண்மையில் அதிகம் முணுமுணுத்த பாடலாகிப்போனது இப்பாடல்


இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து ரீட்டா பாடிய இப்பாடலின் காட்சியுருவாக்கமும் என்னை கவர்ந்ததும் மகிழ்ச்சி. தேவையற்ற இடைச்செருகலாக அல்லாமல் படத்துடன் ஒன்றித்த இப்பாடலில் சிம்பு மற்றும் ரிச்சா இருவரின் முகபாவங்களும் அருமை. (சிம்புவின் படத்தில் நாயகியை அதிகம் புடவையில் பார்த்ததும் இப்படத்தில்தான்..)


09- என்ன சொல்ல போறாய்..- வேங்கை

பாடலின் அனைத்து வரிகளும் பிடித்து போக ரசித்து கேட்ட பாடல்.
தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் M.L.R.கார்த்திகேயனின் குரலில் இருந்த உணர்வு என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
பாடல் காட்சியின் தேயிலை தோட்டங்களின் ரம்மியம், மிக இலகுவான சந்தத்திற்கேற்ற நடனங்கள் என பல விடயங்களினால் பிடித்து போன பாடலாக இப்பாடல் மாறிப்போனது.



08- குதிக்கிற குதிக்கிற..- அழகர் சாமியின் குதிரை.

இசைஞானியின் இளமை குரல்,அதில் இருந்த நளினம், எளிமையான பாடல் வரிகள், காட்சியமைப்பு என அனைத்து அம்சங்களினாலும் கவரப்பட்ட பாடல்.
நான் ரசித்து பார்த்த படங்களில் அழகர் சாமியின் குதிரை படமும் ஒன்று.
நடிகனுக்கு உரிய வரைமுறையை கடந்து சாதாரண மனிதனும் நடிகன்தான் என காட்டிய படம்தான் அழகர் சாமியின் குதிரை.



07- நீ கோரினால்..- 180

2011 முழுவதும் தன் வரிகளினால் ஆக்கிரமித்திருந்தவர் மதன் கார்க்கி எனலாம்.
கார்க்கியின் அழகிய வரிகளினால் கட்டுண்டு ரசித்த பாடல் இது.
என் மீதி பார்வை பிம்ம பூவே பட்டுப்போகாதே..
சரத்தின் இசையில் இடம்பெற்ற இப்பாடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மயக்கும் தன்மையை இன்றும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரினதும் குரல்களின் நளினமும் அருமை.



06- தம்பி தம்பி..- சங்கமம் இசைத்தொகுப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி மாணவர்களின் படைப்பில் உருவான சங்கமம் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் இது.
மாணவர்களின் குறும்புத்தனங்களையும் சொல்லி அவர்களுக்கு அறிவுரை தருவதாகவும் அமைந்த இப்பாடலின் வரிகள் அருமை.
மாணவன் மதீசனின் வரிகளுக்கு சத்தியன் இசையமைக்க ஜெகதீஸ் அருமையாக பாடியிருந்தார்.
பாடலை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.
இலங்கையில் இப்பாடலை வெற்றி பெற வைத்த வெற்றி வானொலிக்கும் நன்றிகள்.



05- முளைச்சு மூணு...- வேலாயுதம்

பெண்ணை வர்ணித்து களைத்து விட்ட கவிஞர்கள் இன்று எதை எதையோ கொண்டு வர்ணிக்க விவேகா காய்கறிகளை கொண்டு வர்ணித்தது இப்பாடல் பிடிக்க பிரதான காரணம்.
மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகாய்
கனிந்த காய் தோட்டம் நீதானா..?


சிரிப்பு கற்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கரு வண்டு அடி விழுந்தேன் அதைக் கண்டு.. - அடடடடா..


பிரசன்னா மற்றும் சுப்ரியா ஜோசி பாடிய பாடலில் பிரசன்னாவின் குரலின் நளினம் அழகு.. (அதிலும் பாவம் என் நெஞ்சு.. என்ற இடம்)



04- கம்பி மத்தாப்பு...- சேவற்கொடி

அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்



கவிப்பேரரசு வைரமுத்துவின் எளிமையான வரிகள் - பெண்ணின் ஒவ்வாரு செயலையும் கிராமிய காதலாக்கிய வரிகள் 
சத்தியாவின் தாளம் போட வைக்கும் இசையில் M.L.R. கார்த்திகேயன் தன்னை ரசிகர்கள் ரசிக்கும் பாடகராக நிலைநிறுத்திய பாடல்.

துாங்கி எழுந்தா பிள்ளை அழகு.. அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு..


03- ஜகிட தோம்...- தெய்வதிருமகள்

எந்த நேரத்திலும் உற்சாகம் தரும் பாடல் வரிகள். வரிகளை விழுங்காமல் பாடும் S.P.Bன் குரல் மற்றும் மாயா,ராஜேஸ் ஆகியோரின் இணைக்குரல்கள் என்பவற்றால் முதலில் கவர்ந்த பாடல் படம் வெளியாகிய பின்னர் காட்சியோடு இணைந்தும் பிடித்துப்போனது.
நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விலக்க ஒரு சூரியன் அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்..
இந்த வரிகள் நான் சோர்ந்திருக்கும் போது உற்சாகம் தந்தன. காலம் கடந்தும் என் மனதில் நிலைக்கும் பாடலாக இது மாறியது-மாறும் என்பதே உண்மை
இந்த வருடத்தில் நான் அதிகம் கேட்ட பாடலும் இதுதான்.



02- பட்டாம் பூச்சி..- காவலன்

பொதுவாகவே பாடல்களில் சந்திரன், நிலவு, நிலா முதலிய வார்த்தைகள் வந்தால் என்னமோ தெரியவில்லை உடனேயே எனக்கு பிடித்து விடும். அப்படி ஒரு பாடல்தான் இது. விஜயின் பாடல்கள் எல்லாமே பிடித்தாலும் இப்பாடல் மீது ஒரு தனி ஈர்ப்பு.
காரணம் பாடலை பாடிய இருவரின் குரலிலும் உள்ள வசீகரம். பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்பதில் வரிகளுக்கு இருக்கும் பங்கின் அதே அளவு பங்கு பாடகர்களிடமும் உள்ளது.
முகம் தெரியாத காதலிக்காக ஏங்கும் தன் காதலன்(பரீட்சை நேரத்திலும்) தன்னைப் பற்றியே தன்னிடம் கூறியதும் அவள் மனதில் தோன்றும் இந்த பாடல் படம் வரமுன்னமே பாடலின் இசை,வரிகள்,இவற்றுடன் K.K மற்றும் ரீட்டா வின் குரல் ஆகியவற்றால் கவர்ந்து நின்றது.

“ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்...”
“யானை தந்தத்தின் சிலை நீயே..தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே..” 

காட்சியில் விஜயின் முற்றுமுழுதான மாற்றம்,அசினின் அழகு (படம் முழுக்க அசின் நடிப்பிலும் அழகிலும் மீண்டும் அசர வைக்கின்றார்..) என்பன இன்னும் பாடல் மீதான காதலை துாண்டி விட்டது..!




01- யாரோ நீ....உறை விட்டு வந்த வாளோ.. - உருமி


மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்றோ
ஒளியோ ஒளியின் தெளிவோ பிளிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ..?
வைரமுத்துவின் வைர வரிகளுக்கு மீண்டும் ஒரு சாட்சி.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் பெரும்பாலும் இசையினால் வருடிச் செல்வது அன்றைய நாளில் இருந்து இன்று வரை தொடர்கின்றது. அதில் இப்பாடலும் ஒன்று.
ஹரிகரனின் காந்த குரலுடன் ஸ்வேதா மோகனின் காதல் குரல் இணையும் போது பாடலில் ஒரு ஏகாந்த சுகம் இணைகின்றது.
பாடலின் ஆரம்ப இசை எம்மை ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க முடியாதது. ஆனாலும் கதைக்களம், பாடல் படமாக்கப்பட்ட விதம் இதனை நிருபித்து விட்டது.




காதல் பூக்களின் வாசம் உன் கூந்தல் எங்கிலும் வீசும்
பார்வைகள் எனும் படையெடுப்பாலே பாதத்தில் விழுந்திடும் தேசம்
எனை வெல்லும் பாகம் மிக பெரிது நான் தோற்கும் பாகம் மிகச்சிறிது..
காமம் தாண்டிய முனிவனும் உனது கண்களை தாங்குதல் அரிது..
உன் அழகினால் எனை அழிக்கிறாய்.. நீ ஆடை கொள்ளும் பெண் நெருப்பா..??ஆஹா. என்ன வரிகள் கவிஞரே..


இந்த பாடலின் காட்சியமைப்பையும் மலையாள வடிவத்தையும் பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியினுாடக சென்று பார்க்கவும்..
Urumi Song - Aaro nee aaro

சரி நண்பர்களே.. இவை மட்டுமன்றி இன்னும் பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தாலும் 2012க்கும் நான் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்றால் அவை இவைதான்.
மேலும் நண்பன் திரைப்படத்தின் பாடல்களில் அஸ்க் லஸ்கா..., இருக்காண்ணா.., என் ஃப்ரண்ட போல.., All Is Well ஆகிய பாடல்களும், 3 திரைப்படத்தின் நீ பார்த்த விழிகள்.. பாடலும் என்னை கவர்ந்துள்ளன. இவை 2012ன் பாடல்களின் வரிசைக்குள் இடம்பெறும் என நம்புகின்றேன்.

முடிந்தால் இன்றிரவு மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன். அல்லது மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.



நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,


Continue reading →
Photobucket