எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts
Saturday, November 26, 2011

பாலையில் ஒரு பார்வை

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

                                பொழுதுபோக்கு என்ற ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் அறிவுபூர்வமான-மனசுக்கு நெருக்கமாகும் படங்கள் அபூர்வமாகவே எடுக்கப்படுகின்றன. சமீபகாலமாக தமிழ் திரையுலகின் வழக்கமான பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத் தொடங்கும் படங்களை வேறு வழியில்லாமல்தான் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது.

                                திரைப்படம் என்பது மற்ற எல்லா கலைப்படைப்புகளையும் போலவே உணர்வுபூர்வமான கலைப்படைப்புதான் அது சரியான அர்த்தத்துடன் எடுக்கப்படும்போது காலங்களை கடந்து நிலைத்து நிற்கின்றது. அதனால் தான் மனிதன் கற்கால குகைச் சுவர்களில் ஓவியம் வரைய ஆரம்பித்த காலத்தில் இருந்து, மக்களின் கலையாக வெளிப்பட்ட அனைத்தும் காலங்களைக் கடந்து மனிதனின் வாழ்வியலையும், அவனது படைப்பாற்றலையும், கலைத்தாகத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான திரைப்படங்களின் வரிசையில் வைத்து பேச வேண்டிய திரைப்படங்களுக்குரிய தகுதியை பாலை முதல் பார்வையிலேயே பெற்றுவிடுகிறது.

                                மக்களின் வாழ்க்கை முறையை வெளிநாடுகளில் ஆவணப்படமாகவும், கற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாகவும் மானிடவியல் துறைகளும், அருங்காட்சியகங்களும் பயன்படுத்துகின்ற நிலையில் பாலை திரைப்படம் ஆவணப்படத் தன்மையுடன் இல்லாமல் நாயகி காயாம்பூவின் (நடிகை ஷம்மு) ஓலைச்சுவடி வழியாக அந்தக் காலத்திற்க்கு நேர்த்தியான திரைக்கதையுடன் அழைத்துச் சென்றுவிடுகின்றது. பொதுவாகவே, வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்படும் தமிழ் திரைப்படங்கள் ஆவணப் படத்தன்மைக்கு கட்டுப்பட்டு விடுகின்றன. ஆனால் அப்படியானதொரு நிலை பாலைக்கு ஏற்படவில்லை. காடும் காடு சார்ந்த நிலமாகிய முல்லை நிலத்தில் இருக்கும் இரண்டு குடிகளுக்கிடையில் நிலவும் போர்தான் கதை. ஆனால் இது வரலாற்றில் மீண்டும் மீண்டும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அரசர்களின் முகஸ்துதி கதையாக இல்லை, சாதாரண மக்களின் வாழ்வியல் கதை. அந்த வகையில் இந்தப் படம் மக்களின் உணர்வுகளை, வரலாற்றை படம்பிடித்து நிற்கின்றது. 

                                 2300 ஆண்டுக்கு முற்பட்ட நமது சமூகத்தின் வாழ்வியல் காட்சிப்பேழைகளினால் கவிதைகளாக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாலிப பருவத்தின் காதலும் அது சார்ந்த விடயங்களும் அதை அறிந்த சமூகம் அவர்களை அங்கீகரித்து மேற்கொள்ளும் திருமணம் போன்ற விடயங்கள் எம் பண்பாட்டின் அசையாத அம்சங்கள். இவ்வாறான வாழ்க்கையில் முல்லைக்குடி மக்கள் எளிமையோடு அவர்கள் சார்ந்த அண்டை சமூகத்துடன் நேர்மையாகவும் இணைந்திருக்க விரும்புகின்றனர். இருந்த போதும் ஆயக்குடி சமூகம் அந்த நேர்மையை தமக்கு ஏற்றதாக்கி துரோகம் இழைக்கின்றது. முரண்பட்ட சமூகத்தில் பலமான சமூகத்திற்காக கட்டுப்பட்டு அடிமையாக வாழ்ந்த மக்களின் நிலை 2000 ஆண்டுகள் கடந்தும் இன்றும் சில இடங்களில் நிலைத்திருப்பதும் அம் மக்கள் சாதிய அடிமைத்தனத்தினுள் கட்டுப்பட்டு குற்றுயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் காலவோட்டத்திற்கேற்ப திரைப்படத்தை எம்முடன் இணைக்கின்றது. 

                                  இது போல அடுத்தடுத்து வரும் காட்சிகள் மனதில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. மிகைப்படுத்தப்படாத சமூகங்களுக்கிடையிலான போரியல் அபாரம். யானைகளை விரட்டிக் கட்டுப்படுத்தலும் அதனோடு சார்ந்த அக் காலத்தின் இதர போரியல் முறைகளும் எம் கண்களையும் எண்ணங்களையும் அகல விரிக்க வைக்கின்றன. போரில் வெற்றி வாகை சூடுவதற்கு தேவையான அம்சங்களை முல்லைச் சமூகத்தின் முதுவன் சுட்டிக் காட்டும் அனைத்து விடயங்களும் களங்கமற்ற உண்மைகள்.  
 “முல்லைக்கொடிக்கு அடிமைகள் தேவையில்லை, முல்லைக் கொடியாருக்கும் அடிமையும் இல்லை”

                                 வீரவசனம் முழங்கும் ரோமப் பேரரசர்கள் போல உடையணிந்த கட்டபொம்மன்கள் திருமணம் செய்துகொள்ளாமல் முதுமையால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் அறநெறி கற்பிக்கும் ஔவை(யார்)களாவும் தமிழ் மூதாதையார்கள் அடையாளப்படுத்தப்பட்ட சோகம் தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் நிகழ்ந்த வண்ணமேதான் இருந்தன. வரலாறு பல ஔவைகளை சந்தித்திருக்கும், அவர்கள் எதைப் பற்றியெல்லாம் பாடினார்கள், அவர்களது கற்பனையும், தைரியமும் எப்படியானவை என்பது தொடர்பாக அத்துறை சார்ந்தவர்களுக்கே அதிகமாக தெரிந்திருப்பதுமில்லை,-போய் சேர்ந்திருப்பதுமில்லை. இவ்வாறான துரதிருஷ்டமான சூழ்நிலையில் ஔவையின் வரிகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் அடி மனக்குரலாக மாற்றி அவளது மனதில் தோன்றும் விருப்பங்களை வெளிப்படுத்தி நிலைபெற்று நிற்கின்றது பாலை. 

                                 இவற்றுடன் அக்கால வாழ்வியலில், சொந்தங்களுக்குள் நீடித்த வெளிப்பாடான தன்மை, இயல்பை சிதைக்காத எளிமை முதலியன இத்திரைப்படத்தில் மிக சிறப்பாக பிரதிபிம்பமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான காட்சிகள் உயிருட்டமாக அமைவதற்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அபிநந்தன் தன் முழு திறமையையும் பயன்படுத்தி பாலையை ஒளி ஓவியமாகவும் படைத்திருக்கின்றார்
இதுவரை காலமும் மிகைப்படுத்தப்பட்ட நடிகர், நடிகைகளின் நடிப்பு, ஆடைகள், ஒப்பனை, அலங்காரம் என எப்போதும் அனாவசியங்களையே பார்த்து பழகிப் போன எம் கண்களுக்கு மிகையில்லாத வகையில் கதாபாத்திரங்களின் நடிப்பும், ஒப்பனைகளும், காட்சியமைப்புகளும் அமைக்கப்பட்டிருப்பது சற்று புதியவைதான், ஏன் உறுத்தலாகவும் கூட இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் இதனை ஒரு படைப்பாக எண்ணி அதற்குரிய எல்லைகளுக்குள் நின்று பார்த்தால் ரசனைமிக்கதாக இத்திரைப்படம் மாறி நிற்கும்.

                                முதுவன் என்னும் பாத்திர பெயர், இயற்கை அம்சங்களை உடலில் பொறித்துக் கொள்ளுதல், மலராலான அலங்காரங்கள், நடன அசைவுகள், ஆடை அணிகலங்களின் அணிதல் முறை என பல்வேறு இடங்களில் ஆதி தமிழனின் பண்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் நின்று அழகாக பிரதிபலித்துச் செல்கின்றது பாலை. 
இத்திரைப்படத்தில் நடித்த சேலம் பெரியார் பல்கலைக்கழக ‌இதழியல் துறைத்தலைவர் பேரா.நடராஜன் ‌‌அவர்களை தமிழக பயணத்தில் நான் சந்திக்க கிடைத்தமையும் மகிழ்ச்சி።

                                ஆழ்ந்த தேடல், ஆய்வுகள், கடுமையான உழைப்பு, படைப்பின் மீதான பிடிப்பு போன்றவை இல்லையேல் இது போன்றதொரு திரைப்படம் தமிழ் சினிமாவில் சாத்தியமில்லை. செந்தமிழன், மற்றும் அவரது குழுவினரின் அயராத உழைப்பினை நாம் இத்திரைப்படத்தைப் பார்ப்பதனால் மாத்திரமே அங்கீகரிக்க முடியும். கலைஞனுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டியது நல்ல ரசிகர்களின் கடமை. படத்தின் மூன்று பாடல்களும் அருமை. இசையமைப்பாளர் வேத்பிரகாஷ் நவீன இசை ஆர்ப்பரிப்புகளை உதறிதள்ளிவிட்டு, தமிழனுக்குரிய இனிமையான இசைகளை கொண்டு இதயங்களை வருடிச் செல்கின்றார்.பெரும் பிரமாண்டமான தயாரிப்புகளை மேற்கொண்டும், மசாலா தனமான ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முகமாகவும் வரலாற்றை திரிவுக்குட்படுத்தி தேவையற்ற இடைச்செருகல்களை மேற்கொண்டு தமிழர் பண்பாடு என்ற பெயரில் என்னென்னமோ வெறுப்பு தரும் விடயங்களை தமிழ் சினிமா சந்தையிலும், உலக சினிமா சந்தையிலும் பணம் கொட்டிக்கிடக்கும் திரைப்பட நிறுவனங்களும் விநியோகஸ்த நிறுவனங்களும் வியாபாரம் செய்து வருகின்ற இன்றைய பின்னணியில் இந்த பாலை திரைப்படம் ஒரு ஆத்மார்தமான படைப்பு. 

குறிப்பு- பாலை திரைப்படத்தை இலங்கையில் எந்த திரையரங்குகளும் காட்சிப்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்። நான் கூட இணையத்தின் வாயிலாகதான் பார்த்து ரசித்தேன் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்። இணைய சுட்டியை தந்துதவிய நண்பனுக்கு என் நன்றிகள்።


நன்றி
மீண்டும் சந்திப்போம்..,
என்றென்றும் அன்புடன்..,




Continue reading →
Sunday, January 23, 2011

127 Hours எதிர் 127 Second

8 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

டேனி பாயல் - ஏ.ஆர்.ரஹ்மான் தான் 'ஸ்லம்டக் மில்லியனர்' திரைப்படத்தின் நாயகர்கள் என படம் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். திரைக்கதை நேர்த்தியும், பிண்ணனி இசையும் இணைந்து அனைவரினது கவனத்தையும் ஈர்த்தெடுத்தது அத்திரைப்படம்.
அப்படியான இரு இமயங்கள் இணைந்த புதிய திரைப்படம் 127 HOURS. முன்னைய திரைப்படத்தினை போலவே சிறப்பாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினை பன்மடங்கு பூர்த்தி செய்திருக்கிறார்கள் இருவரும். ஸ்லம்டக் மில்லியனர் அளவுக்கு எக்கச்சக்க பாடல்கள் இல்லையென்றாலும் இப்படத்திற்கு இசையமைத்த ஒரே பாடலிலேயே (If I RISE..) அமெரிக்க ரசிகர்கள் தெரிவு விருதுக்கு தெரிவானார் ஏ.ஆர்.ரஹ்மான்.

படத்தின் இடைநடுவே வரும் பின்னணி இசையில் இந்திய இசைக்கலவையை புகுத்தி ஆசிய இசைக்கும் பெருமை சேர்த்திருந்தார் இசைப்புயல். படமும் சூப்பர் ஹிட்டாக ஓடத்தொடங்கியிருந்தாலும், இப்படத்தின் ஸ்பூஃப் (Spuf) மீள்பிரசுரமாகி படத்தை விட சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது அதியச உண்மை.
127 Hours இன் அடிப்படை கதையை அப்படியே கார்ட்டூனாக 2006லேயே எடுத்துவிட்டோம் என நக்கலடிக்கிறது இவ்வீடியோ! அதை இங்கு பார்த்துவிட்டு சொல்லுங்களேன்....!



127 Hours திரைப்படத்தின் Trailer
இக்கார்ட்டூன் வெளியீட்டாளர்கள் Mondo Mini Shows உரிமையாளர்கள். பொதுவாக சிறுவர்களுக்காகத்தான் கார்ட்டூன் திரைப்படம் உருவாக்கப்படும். ஆனால் சிறுவர்கள் நிச்சயம் பார்க்க கூடாது என வெளிவந்த கொஞ்சம் வன்முறையான புதிய கார்ட்டூன் வகையையே மொண்டோ மினி ஷோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பூஃப் வீடியோ YouTube ன் அதிகம் பார்வையிடப்பட்ட அனிமேஷன் எனும் பெருமையும் இப்போது பெற்றுக்கொண்டுள்ளது. இதுவரை இதனை பார்வையிட்டவர்கள் 18,924,933 பேர். விரும்பியதாக தெரிவு (Like) செய்தவர்கள் 31,875 பேர்.
நன்றி:-Tamil Media இணையதளம்
மீண்டும் சந்திப்போம்..
என்றும் அன்பின்,
Continue reading →
Friday, January 21, 2011

ஐயயோ... செல்லம் வெயிலுக்கு காட்டாம பட்டாம்பூச்சி..!

4 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
என்னடா இது புதுசா தலைப்பு இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா...?
பெரிதாக எதுவுமில்லை..! இவ்வருடத்தின் பொங்கல் வெளியீடுகளில் இருந்து ஒரு தொகுப்பு..(ஏதோ நம்மளால முடிஞ்சது..)


முதலில் ஐயயோ..

பெரிய தயாரிப்பு நிறுவனம்,அரசியல் ஆதிக்கம்,உறுதியான விளம்பரப்படுத்தல்கள் என்பவற்றை கடந்து தனுஸ் என்ற இளைஞனின் நடிப்பின் மேல் கொண்ட நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமே ஆடுகளம்.

நம்பிக்கையுடன் ஆர்வத்தை துாண்டியது படத்தில் பாடல்கள்..
அதிலும் ஐயயோ நெஞ்சு அலையுதடி...பாடல்- பிரசாந்தினியின் மனதை மயக்கும் ஹம்மிங்குடன் பாடல் ஆரம்பித்து தொடர்ந்து இசை குடும்பத்தினர் SPB&SPB சரண் இணைந்து கொண்டதும் அப் பாடலில் இருந்து வெளிவர முடியாமல் மறுக்கும் மனம் படும்பாடு இருக்கே...
அந்த சுகத்தை அனுபவிக்க ஐயயோ மனம் அலையுதே...

G.V.பிரகாஸ் பாடலின் இசைக்குள் இருந்து ஒரு காதல் இளைஞனாக(புது மாப்பிள்ளைதானே) வலம் வருகிறார் அடம்பிடக்கும் சிறுவனை போல.

“பூ வாசம் அடிக்கிற காற்று என் கூட நடக்கிறதே...”
“கண்சிமிட்டும் தீயே என்னை எரிச்சுப்புட்ட...” என்ற வரிகள் பாடலின் சரணங்களை முடிக்கும் போது நிலா பொழியும் உணர்வு மனதுக்குள்...!

பாடல் காட்சியை பார்க்க வேண்டும் என தவமிருந்த எனக்கு படம் ஓரளவு வரம் தந்தது..

இதோ அந்த மனதை அலைய விடாமல் கவர்ந்திழுக்கும் பாடலும் காட்சியும்..


அடுத்து செல்லம்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு திரைப்படம் சிறுத்தை..!
அண்ணன்(சூர்யா) போல் தம்பி கார்த்தியும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்த்தும் இறுதியில் சலிப்படைய வைத்ததுதான் மிச்சம்.
ஆரம்பத்தில் பாடல்களை ரசிக்காமல் விட்டாலும் படத்தில் டிரைலர்களில் கேட்டதும் ரசிக்க ஆரம்பித்த பாடல்தான் செல்லம் இந்தா செல்லம்..

பாடல் கவர காரணமாய் அமைந்தவை கார்த்தியின் அழகு,பாடல் காட்சி,இசை இவற்றுடன் தமன்னா..! எனக்கு தமன்னாவை பிடிக்காது என்றாலும் இப்படத்தின் ஏனைய பாடல்களுடன் ஒப்பிடும் போது இடுப்பை கண்காட்சியாக்கும் காட்சிகள் இப்பாடலில் குறைவு என்பதாலோ என்னவோ தமன்னாவை இப்பாடலில் ரசித்தேன்...!(சம வயது தோழியாக)

சுர்முகியின் குரல் குறிப்பிட்டே ஆக வேண்டியது..வம்சம் பாடலின் பின் மீண்டும் நான் ரசித்தேன் இப்பாடலில் இவரின் குரலை.
வரிகள் சாதாரணமாக ஒரு டுயட் பாடலுக்குரிய வரிகள்தான்..பிடித்திருக்கின்றன.


அடுத்தது யாத்தே யாத்தே..

மனதுக்கு பிடித்த அழகான பெண்ணை காதலிக்க தொடங்கும் போது மனதில் உண்டாகும் உணர்ச்சி போராட்டங்களின் இசைவடிவமே இப்பாடல்..

இப்பாடலை பற்றி நான் என்ன சொல்ல..பெரும்பாலான எல்லா பதிவர்களுமே எழுதி தள்ளிய பாடல் இது..இதன் பின் நான் என்ன சொல்லி என்ன புரிய வைக்க..?

அழகான வரிகள்,மனதுள் துள்ளும் இசை,அனுபவிக்க வைக்கும் G.Vன் குரல் என அனைத்தும் +++

பாடல் காட்சியில் தப்ஷியை ஒரு சிறு பிள்ளை அழைக்க அவளும் திரும்பி கையசைத்து விட்டு செல்ல அவளை பின் தொடர்ந்த தனுஸ் அக்காட்சியை கண்டதும் ஒருகணம் திகைப்பார் பாருங்கள்...பலே பிரமாதம் தனுஸ்.

யாரடி நீ மோகினியின் பின் தனுஸின் ஒருதலை காதல் நடிப்பை இப்பாடலில் ரசித்தேன்..


பட்டாம்பூச்சி..

பலத்த போராட்டம்,அரசியல் மட்டுமன்றி பிற எதிர்ப்புகள்,என்ற தடைகளை தாண்டி விளம்பரங்களே இல்லாமல் உண்மையான ரசிகர்களை மட்டுமே நம்பி வெளிவந்த திரைப்படம் தான் காவலன்!

வரிசையான தோல்விகளில் இருந்து வெளிவர இப்படம் விஜய்க்கு மிக முக்கியமாகவே  இருந்தது..இதை உணர்ந்து கொண்ட முட்டாள்கள் தங்கள் படம் போல பெரிய விளம்பரம் செய்யப்படுவதை தடுத்தும்,அரசியல் அழுத்தங்களால் மிரட்டியும் பார்த்தனர்.இறுதியில் ரசிகர்கள் முன் விளம்பரங்கள் பிரசாரங்கள் எல்லாம் தவிடுபொடியாகின.


இளையதளபதி விஜய் எப்படியான படங்கள் நடித்தாலும் அவற்றை எல்லாம் ரசிக்கும் ஒரு ரசிகன் நான்..! ஹீரோயிசம் காட்டுகிறார் என குற்றம் சாட்டுபவர்களே! தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் காட்டாத நடிகரை எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்..
தொடர்ச்சியாக காதல் படங்கள் நடித்தால் “சொக்லட் போய்” குடும்ப படங்கள் நடித்தால் ”ஃபமிலி மான்” என்று முத்திரை குத்திவிடுகிறீர்கள்.அதிலிருந்து மீண்டுவர ஆக்ஸன் படம் நடித்தால் ஹீரோயிசம் காட்டுகிறான் என்கிறீர்கள்..அப்போ அவர்கள் என்னதான் செய்வது.?


ஏன் விஜய் காதல் படங்கள் நடிக்கவில்லையா??
விஜய் நடித்த படங்களுள் காதல் படங்களும் குடும்ப கமர்ஷியல் படங்களும் தான் அதிகமானவை. இப்படி இருக்கையில் ஆக்ஸன் படம் நடித்தால் என்ன தவறு??

சரி அதெல்லாம் போகட்டும்..“பலம் பலவீனத்தை அடக்குவது நாட்டுக்கல்ல காட்டுக்குதான்...மனிதர்களை அன்பால் அடக்கணும்” என்ற காவலன் பட வசனம் ஒன்றே போதும் இவை அனைத்துக்கும்.

இனி விசயத்துக்கு வருவோம்..

ஆண் கொண்டுள்ள மரியாதை ஒரு பெண் தன் காதலை அவ் ஆணிடம் வெளிப்படுத்த விடாமல் செய்யும் பரிதாபத்தை உணர்வு பொங்க சொல்லிய திரைப்படம் காவலன்.

இதில் என்னை கவர்ந்த பாடல்கள் இரண்டு!
ஒன்று “விண்ணைக் காப்பான் ஒருவன்...”
இரண்டு “பட்டாம் பூச்சி கூப்பிடும் போது..”

முதலில் பட்டாம் பூச்சி..பாடலை பார்ப்போம்..

முகம் தெரியாத காதலிக்காக ஏங்கும் தன் காதலன்(பரீட்சை நேரத்திலும்) தன்னைப் பற்றியே தன்னிடம் கூறியதும் அவள் மனதில் தோன்றும் டுயட் பாடல்தான் இது..

படம் வரமுன்னமே பாடலின் இசை,வரிகள்,இவற்றுடன் K.K மற்றும் ரீட்டா வின் குரல் ஆகியவற்றால் கவர்ந்து நின்றது இப்பாடல்.

“ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்...”
“யானை தந்தத்தின் சிலை நீயே..தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே..” போன்ற வரிகள் அபாரம்.

பல இடங்களில் K.K யின் குரல் பிரமாதம்...தன்னை மறந்து முணுமுணுங்க வைக்கும்..

காட்சியில் விஜயின் முற்றுமுழுதான மாற்றம்,அசினின் அழகு (படம் முழுக்க அசின் நடிப்பிலும் அழகிலும் மீண்டும் அசர வைக்கின்றார்..) என்பன இன்னும் பாடல் மீதான காதலை துாண்டி விட்டது..!



விண்ணைக் காப்பான் ஒருவன்....

பொதுவாகவே விஜய் திரைப்படத்தின் முதல் பாடல் கலக்கலாகவே இருக்கும்..இதுவும் அப்படியே..
வேகமான இசை,திப்புவின் குரல்,நல்ல வரிகள் என எல்லாம் கச்சிதமாய் பொருந்தியிருந்தது..

பாடல் காட்சியை பொறுத்தவரையில் படம் ஆரம்பித்து நீண்ட நேரத்தின் பின் பாடல் முதல் பாடலாய் வருவதும்,ஆர்ப்பாட்டமற்ற நடனம்,படமாக்கப்பட்ட இடம்,பாடல் முடிய காட்சியும் முடியாமல் அப்படியே தொடர்வதும், ஏனைய பாடல்கள் போலல்லாமல் முதல் பாடலிலேயே கதாநாயகி இருப்பது என அனைத்தும் செதுக்கல்..!
(படத்தில் எல்லா பாடலிலும் அசின் இருப்பது என்னை கவர்ந்த இன்னொரு விடயம்)




எப்படி என் ரசனை......!

சரி என் இம்மாதத்திற்கான இறுதி பதிவில் மீண்டும் சந்திப்போம்..
நன்றி..

என்றும் அன்பின்,
Continue reading →
Photobucket