எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
சொந்தமாக காணி, சொந்தமாக ஒரு வீடு, கை நிறைய சம்பளத்துடன் வேலை, பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலம் தரக்கூடிய சிறந்த கல்வி என அனைத்து வசதிகளுடன் வாழும் எம்மவர்கள் மத்தியில் இவை அனைத்தும் இன்றுவரை நிறைவேறாத கனவுகளாக மாறி இருக்கின்ற மக்களும் எம்மிடையே இருக்கின்றனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களின் கஸ்டங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாகவே ஒர் இடத்தில் வசித்து வந்தாலும் சொல்லிக்கொள்ள கூடிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற மக்களை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உதயசூரியன் என்ற கிராமத்தில் கண்டோம்.
பெயரில் தான் உதயசூரியன்..அவர்களின் வாழ்க்கையோ இன்னும் அஸ்தமனத்தில்தான்.
சாவகச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து கச்சாய் வீதியில் சுமார் 1500m தொலைவில் இருக்கும் சேரிக்குடியிருப்பு கிராமமே இந்த உதயசூரியன் கிராமமாகும். நாங்கள் கிராமத்தினுள் நுளைந்ததும் வேற்றுக்கிரக வாசிகளை பார்ப்பது போல் பார்த்தனர் அம்மக்கள். காரணம் அவர்கள் இருந்த நிலையில் நாம் அவர்களுக்கு அப்படித்தான். எம் கண்ணில் எதிர்பட்ட முதல் பெண்மணியிடம் முதலில் பேச்சுக்கொடுத்த போதுதான் தெரிந்தது அது ஒரு கைவிடப்பட்ட ஒதுக்குப்புறமான நிலப்பகுதி என்று. கடற்கரை பகுதியோடு சார்ந்த நிலம் என்பதால் அது சதுப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் அதனால் அரசினால் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவும் 2006 வரை அவ்விடம் இராணுவ வலயத்தின் கீழ் இருந்ததாகவும் அப்பெண் மேலும் தெரிவித்தார்.
ஆரம்பம் முதலே தாம் வசித்து வரும் பிரதேசம் இது என்றும் சிறிது காலம் வரை (இங்கிருந்து இராணுவம் வெளியேறும் வரை) அருகில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பில் வசித்து வந்ததாகவும் கூறிய அவர், இவ்விடத்தில் இராணுவம் வெளியேறியவுடன் மீண்டும் வந்து குடியேறியதாவும் தெரிவித்தார்.
அவர்களுடைய வீடுகளை பார்க்கும் போது 4 தடிகளை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு முழுமைபெறாத வானம் பார்க்கும் கூரையோடு கொண்ட சிறு கூடு போல காட்சியளித்தது. மழை வந்தால் அவர்கள் வீட்டை நாட வேண்டிய தேவையில்லை.. ஏனெனில் வீட்டிற்குள் நின்றாலும் நனைவதை அவர்களால் தவிர்க்க முடியாது. கணவனின் நாளாந்த 300 ருபாய் வருமானத்தில் (அதுவும் உறுதியாக கிடைக்காது) 4 பிள்ளைகளையும் வளர்ப்பது எங்கு?? வீடு வேய்வது எங்கு..??
அதிலும் ஒரு சிக்கல் இருப்பதை அவருடன் மேலும் உரையாடும் போதுதான் அறிந்தோம். அந்த பகுதியில் இருக்கும் எவருக்கும் அந்த காணிகள் சொந்தமாக வழங்கப்படவில்லை. அது அரசாங்க காணி என்பதால் அரசின் மனதில் எப்போது தோன்றுகின்றதோ அப்போதே அவர்களுக்கு அக்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். ஏற்கனவே யாழப்பாணத்தின் வேறு சில இடங்களில் அரசு தன் காணிகளை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது. இது பற்றி அந்தப் பெண் கூறிய விடயங்களை இங்கு ஒலி வடிவில் தந்துள்ளேன்.. கேட்டறிந்து கொள்ளுங்கள்.